உள்ளூர் செய்திகள்

பாரதியாரின் ஆத்திசூடி - 36

 வலிமையானது மந்திரம்நம் கலாசாரத்தில் வெற்றிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை மந்திரங்கள். இந்த மந்திரங்களைத் தெரிந்து கொண்டு முறையாக உச்சரித்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மனம் + திறம் = மந்திரம். மனதிற்கு திடம் கொடுப்பதே மந்திரம். நம்மைச் சுற்றி ஏற்படும் நேர்மறை அதிர்வுகளே மந்திரம். மந்திர ஒலிகள் இடையூறுகளைக் களைந்து நம்மை நல்ல வழிக்கு அழைத்துச் செல்லும். மந்திரம் என்னும் சொல்லே சமஸ்கிருதத்தில் உருவானது. “மந்தாரம் த்ராயத இதி மந்த்ர:'' அதாவது, மனதால் நினைப்பவனைக் காப்பாற்றுவது மந்திரம் என்றானது.மகாகவி பாரதியார்,மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்மாண்பை வகுத்திட வல்லவன் யானோஎன தாயின் மணிக்கொடியை மந்திரம் என்றும் அது காற்றில் பறக்கும் போதெல்லாம் இந்த நாட்டின் தியாகம், வளமை, அன்பு எல்லாம் நேர்மறை அதிர்வுகளாக பரவுகிறது என்கிறார். அதனால் தான் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், சத்யமேவ ஜயதே என்னும் சொற்கள் எல்லாம் மக்கள் ஒலிக்கும் மந்திரங்கள் ஆயின. பாண்டிய மன்னரின் நோயை தீர்க்க திருஞானசம்பந்தர்,மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தர மாவது நீறு துதிக்கப்படுவது நீறுதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறுசெந்துவர் வாயுமை திருஆலவாயான் திருநீறே.என பாடி உடல்நலம் பெறச் செய்தார். திருமூலர் பாடிய திருமந்திரம் சைவ சித்தாந்த வாழ்க்கை நெறிமுறையின் தத்துவமே. நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்பஎன்கிறது தொல்காப்பியம். மந்திரங்களின் வலிமை நம் முன்னோர் அறிந்த ஒன்று.மந்திரம் என்பது மறைவாகவும், மூடி மறைத்தும் இருப்பது. அதன் பொருள் வெளிப்படையாகத் தெரியாது. மந்திரத்தில் உள்ள சொல்லும் முக்கியம் அதை உண்டாக்கியவரின் தகுதியும் முக்கியம். மந்திரச் சுற்றம் என்பது அரசனின் மந்திரி சபையைக் குறிக்கும். அவர்களுடன் அரசன் மந்திராலோசனை செய்வான். அதாவது, ரகசியமாக ஆலோசிப்பான். அரசன் சொல்வதை ஆணையாக எழுதுவது மந்திரவோலை என்றும் அந்த வார்த்தைகள் மந்திரம் என்றும் ஆகின்றன. மந்திரம் என்பதில் இருந்து தான் மந்திரி என்ற சொல் வந்தது. மந்திரி கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரமாக இருக்க வேண்டும். நமது நாட்டின் ஆணிவேராக இருக்கும் சனாதன தர்மத்தின் கூறுகள் இவை. இன்றைக்கு இவையெல்லாம் நமக்கு அன்னியமாகிக் கொண்டு வருவது தான் அவலம். எங்கேயோ ஒரு இடத்தில் வெடித்த ஒரு வெடி ஏற்படுத்திய அதிர்வலைகளால், எங்கோ உள்ள ஒரு மனிதனின் உடலுக்குள் இருக்கும் நுண்ணிய ரத்தக்குழாய் வெடித்திருக்கும் சாத்தியங்களை அறிவியல் கூறுகிறது. சொல் என்றாலே அதற்கு ஒலி அலைகள் உள்ளன. அந்த அலைகளுக்கு ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் உண்டு.மனதை பற்றியுள்ள காம, வெகுளி, மயக்கம் என்ற அழுக்குகளைக் களைய மந்திரங்கள் உதவுகின்றன. கொல்வாரேனும்குணம் பல நன்மைகள்இல்லா ரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீக்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவேஅதாவது பொல்லாதவர்களோ, குணம் அல்லாதவர்களோ, நமசிவாய எனும் ஐந்தெழுத்தை உச்சரிக்க சிவனின் திருவருளால் தீமை நீங்கும் என்கிறார் சம்பந்தர். பாரதியார் குறிப்பிடும் மந்திரம் வலிமை என்பது வலிமையான நெஞ்சுரம். தேசிய கீதங்களில், மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்வானையளப்போம் கடல் மீனையளப்போம்சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்என்கிறார்.சிவனைத் துதிக்கும் ஸ்ரீருத்ரம், சமகம், லலிதா சகஸ்ர நாமம், ஆதித்ய ஹ்ருதயம், விஷ்ணு சகஸ்ர நாமம், நாயன்மார்களின் பதிகங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள், ஆதிசங்கரரின் சுப்ரமணிய புஜங்கம், அருணகிரிநாதரின் கந்தரனுபூதி, குமரகுருபரரின் சகல கலாவல்லி மாலை, திருமூலரின் திருமந்திரம், வள்ளலாரின் திருவருட்பா போன்றவை உடல் நலம், மனமகிழ்ச்சியை தரும் மந்திரங்களில் சில. திருமண மந்திரங்கள் ஒவ்வொன்றும் தம்பதியர் சிறக்க வாழ்ந்து, சமுதாயத்தையும், இயற்கையையும் வாழ வைக்கும் மந்திரங்களைக் கொண்டது. ஒரு காலத்தில் தேசத்தின் பாஷையாக இருந்த, செம்மொழிகளில் ஒன்றான சம்ஸ்க்ருதம் படிக்கவில்லை, தெரியவில்லை என்பதால் யாரும் தவறாகப் பேசக் கூடாது. சிலப்பதிகாரத்தில், ''மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்தந்திரம் இடனே காலம் கருவியென்றுஎட்டுடன்ன்றே இழுக்குடை மரபிற்கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது” அதாவது மந்திரமும், தெய்வமும், மருந்தும், நிமித்தமும், தந்திரமும், இடமும், காலமும் கருவியும் என்னும் இந்த எட்டையும் துணையாகக் கொண்டு திருடர்கள் களவில் ஈடுபடுகின்றனர் என கோவலனைப் பற்றி, பொற்கொல்லன் பாடுகிறான். இந்திரஜித் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் வித்தையை களவு சாஸ்திரத்தின் மூலம் அறிந்திருந்தான். அதனால் களவும் ஒரு கலை எனப்பட்டாலும் களவு என்பது செய்யக் கூடாதது என்பதால் கற்றபின் அதை மறந்து விட வேண்டும் என்று,'களவும் கற்று மற' எனக் கூறினார்கள்.மனத்தை ஒருமுகப்படுத்தி மரா, மரா, மரா என்றே தியானம் செய்கிறான் ஒரு திருடன். அது ராம ராம ராம என்ற ஒலியைக் கொடுக்க, அவன் பலகாலம் அதைச் சொல்லிக் கொண்டிருக்க, அவனைச் சுற்றி எறும்புப் புற்று உண்டாகியது. அதிலிருந்து ஒருநாள் தேஜஸ், ஞானத்துடன் வெளிப்பட்டான். எறும்பு புற்றுக்கு சமஸ்கிருதத்தில் வால்மீகம் என்று பெயர். எறும்பு புற்றில் இருந்து முனிவராக வந்ததால் அவருக்கு வால்மீகி என்ற பெயர் உண்டானது.தொல்காப்பியம் கூறுவது போல ராம மந்திரத்தில் இருக்கும் மறைபொருளை நிறைமொழி மாந்தரான நாரதர் உபதேசிக்க, திருடனான வால்மீகி முனிவராக மாறினான். அந்த மந்திரம் சமஸ்கிருதமே அறியாத அவர் வாயில் வேதத்துக்கு ஒப்பான சமஸ்கிருத காவியமான ராமாயணத்தை எழுத வைத்தது. வேதத்தை எழுதிப் படிக்கவில்லை. அதைக் காதால் கேட்டு, சரியான தொனியில் சொல்ல வேண்டும். அதனால்தான் அது எழுதாக் கிளவி(ச்ருதி) எனப்படுகிறது. வேத மந்திரங்களைக் குடத்தில் உள்ள நீரில் ஜபிப்பர். அந்த நீர் மந்திரசக்தி பெறுகிறது. அந்த நீரைத் தெளித்தால், நோய் நீங்கும். நம் நாட்டிலேயே கங்கையும், காவிரியும், இன்ன பிற நதிகளும் புண்ணிய நதிகளாக இருப்பதற்கு, அந்த நதிக் கரைகளில் சொல்லப்படும் மந்திரங்களும், செய்யும் வேதக் கிரியைகளுமே காரணம். எங்கள் ஊர் தென்காசியில் நாங்கள் இருந்த வீட்டில் இரவானால் அடுக்களைச் சுவர் முழுதும் தேள்கள் வந்துவிடும். எனது தாய் பட்ட தேள்கடிக்கு அளவே கிடையாது. கை அல்லது காலில் கடித்தால், விஷம் ஏறக்கூடாது என கயிற்றைக் கட்டி இரத்தத்தில் கலப்பதை தடுப்பார்கள். ஆனால் பல சமயங்களில், அம்மாவின் இடுப்பில், வயிற்றில், கழுத்தில் கடித்துவிடும். எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த மேலகரம் ஹரிஹர ஜோசியர் அம்மாவுக்கு முன் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, மந்திரம் கூறி, வேப்பிலையால் தெளிப்பார். அப்படியே விஷம் இறங்கி அம்மா, வழக்கம் போல் வேலை செய்வதை பல தடவை பார்த்தவன் நான். அந்த மந்திரங்கள், பிரயோகிக்கும் முறைகள், அவரின் அனுஷ்டானம் இவை எல்லாம் இணைந்ததன் விளைவே இந்த சிகிச்சை. அதனால்தான் மந்திர ஜபத்தின் மகிமையை அளவிடமுடியாது என்பார் சிருங்கேரி ஜகத்குரு. சொல்லையும் அது குறிக்கும் பொருளையும் கூற வந்த காளிதாசர் ரகுவம்சத்தில் சொல்லின் ஒலிவடிவை உமையின் வடிவம் என்றும், சொல்லின் பொருளைச் சிவன் வடிவம் என்றும் கூறி, ''சொல்லும் பொருளுமாக விளங்கும் கடவுளை வணங்குகிறேன்” என்கிறார். இதுதான் மகாகவி சொல்ல வரும் மந்திரம் வலிமை. - ஆத்திசூடி முற்றும்முனைவர் தென்காசி கணேசன்94447 94010இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.