உள்ளூர் செய்திகள்

தெய்வீக கதைகள் - 28

சுந்தரர்திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலுாரில் சடையனார், இசைஞானியார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் சுந்தரர். இவரது இயற்பெயர் நம்பி ஆரூரன். இவரின் அழகைக் கண்டு சிவனே 'சுந்தரர்' என அழைத்தார். சிறு வயதில் சுந்தரர் தெருவில் விளையாடிய போது, மன்னர் நரசிங்க முனையரையர் அவரைக் கண்டார். சிறுவனான சுந்தரரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். நாட்டின் இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். மணப்பருவம் வந்ததும் சுந்தரருக்குப் புத்துாரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடானது. முகூர்த்த நேரத்தில் முதியவர் வடிவில் திருவிளையாடல் நடத்த சிவனே அங்கு வந்தார். சுந்தரரின் தாத்தா எழுதிக் கொடுத்ததாகச் சொல்லி ஓலை ஒன்றைக் காட்டி சுந்தரர் தனக்கு அடிமை எனத் தெரிவித்தார். இதனால் திருமணம் நின்றது. சுந்தரரை அழைத்துச் சென்று அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்த முதியவர் திடீரென சிவலிங்கத்திற்குள் மறைந்தார். சிவனே முதியவராக வந்து ஆட்கொண்டதை உணர்ந்த சுந்தரர், 'பித்தா பிறைசூடி' என பதிகத்தைப் பாடி சிவனைத் தன் நண்பராக்கினார். இவரது பக்தியை 'சக மார்க்கம்' (நண்பராக கருதி வழிபடுதல்) என்பர். சிவனை நண்பராகக் கருதித் தேவையானதை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொண்டார். செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது, சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது, முதலை விழுங்கிய குழந்தையை வரவழைத்தது. வெள்ளை யானையில் ஏறி, கைலாயத்திற்கு எழுந்தருளியது போன்ற அற்புதங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்தன. ஒரு சமயம் திருவாரூர் சென்ற சுந்தரர், அங்குள்ள கோயிலுக்கு வந்த பரவை என்ற பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சிவனருளால் திருமணமும் நடந்தது. சில காலம் அங்கு தங்கிய அவர், மனைவியை திருவாரூரில் விட்டு விட்டு யாத்திரை கிளம்பினார். திருவொற்றியூர் வந்து சேர்ந்தார். அங்கே கன்னி மாடத்தில் இருந்த சங்கிலியார் பூமாலை கட்டி சேவை செய்வதைக் கண்டார். அவர் மீதும் காதல் வந்தது. சங்கிலியாரும் காதல் கொண்டார். ஆனால் அவரால் உடனே சுந்தரரிடம் காதலை சொல்ல முடியவில்லை.சுந்தரர் தனக்கும், சங்கிலியாருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என சிவனிடம் வேண்டினார். அதன்படி சங்கிலியாரின் கனவில் தோன்றி சுந்தரரை மணக்குமாறு பரிந்துரைத்தார். சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவையை திருமணம் செய்துள்ளார் என்பதை சங்கிலி அறிந்திருந்தார். ஆகையால் தன்னை விட்டு பிரிய நேருமே என சிவனிடம் சங்கிலியார் கூறினாள். சிவனும் இந்த விஷயத்தை சுந்தரரிடம் போய்ச் சொன்னார். அதற்கு சுந்தரர், “ஊர் ஊராகச் சென்று சிவனைப் பாடும் நான், ஒரே ஊரில் இருப்பது இயலாது. அதே சமயம் அவளை நான் மிகவும் விரும்புகிறேன். அவளை மணக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார் சுந்தரர். அவரிடம் சிவன் சத்தியம் செய்து கொடுக்கச் சொன்னார். சங்கிலியின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. “சிவன் முன் சங்கிலியாரிடம், 'உன்னைப் பிரிய மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்தால் சொன்ன வாக்கை மீற முடியாது. அவளைப் பிரிய நேர்ந்தால் என்ன செய்வது?” என சிந்தித்தார் சுந்தரர். ஆகவே “சத்தியம் செய்யும் போது சன்னதியில் இருக்காமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ள வேண்டும்” என சிவனிடம் வேண்டினார். திருவிளையாடல் நிகழ்த்த விரும்பிய சிவன் உடனடியாக சுந்தரர் கூறியதை சங்கிலியாரிடம் போய் தெரிவித்தார். சங்கிலியாரும் தந்திரம் செய்து சுந்தரருக்குப் பாடம் கற்பிக்க விரும்பினாள். திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் சங்கிலியார், ''மானிடராகிய நாம் சன்னதியில் சத்தியம் செய்வது முறையல்ல எனத் தோன்றுகிறது. அதனால் மகிழ மரத்தடியில் சத்தியம் செய்யும்படி கேட்டுக் கொண்டாள். முன்னே சொல்லி வைத்தபடி மகிழ மரத்தடியில் தான் சிவன் இருக்கிறாரே! சுந்தரரும் வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்திருந்த சிவனை மூன்று முறை வலம் வந்து,“என்றும் உன்னைப் பிரிய மாட்டேன்”என சத்தியம் செய்து சங்கிலியாரை மணந்தார். இருவரும் திருவொற்றியூரில் தங்கி சிவத்தொண்டு செய்ய சிலகாலம் சென்றது.திருவாரூரில் வசந்தவிழாவைக் காணும் ஆசையால் கொடுத்த வாக்கை மீறி, ஊர் எல்லையைத் தாண்டிச் சென்றார் சுந்தரர். வாக்குறுதியை மீறவும் பார்வை மறைந்தது. அதன்பின் பல தலங்களுக்குச் சென்று, பார்வை வேண்டிப் பதிகம் பாடினார். அவர் மீதுள்ள அன்பால் திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்தார் சிவன்.அதைப் பெற்றுக் கொண்டு சிவனடியார் உதவியுடன் யாத்திரை புறப்பட்டார். ஒரு கட்டத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கினார். அங்கு பாடிய போது மனம் மகிழ்ந்த சிவன் இடது கண் பார்வையை வழங்கினார். பின்னர் அங்கிருந்து இன்னும் சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்ட சுந்தரர் திருவாரூரை அடைந்தார். அங்கு சிவனிடம் மன்னிக்குமாறு மன்றாடினார். வலதுகண் பார்வையை பெற்றார். இந்நிலையில் சங்கிலியாரை சுந்தரர் திருமணம் செய்ததை அறிந்த பரவையார், பிணக்கு கொண்டார். சுந்தரரை தன் மாளிகைக்குள் நுழைய மறுப்பு தெரிவித்தாள். அடியார்கள் பலர் சமாதானம் பேசியும் பலன் கிடைக்கவில்லை. மனம் நொந்த சுந்தரர், திருவாரூர் தியாகேசப்பெருமானை சரணடைந்தார். சிவனிடம் பரவையார் பற்றிக் கூறி, அவரிடம் துாது செல்லும்படி சிவனை வேண்டினார். அதன்படியே சிவாச்சாரியார் வேடத்தில் பரவையாரிடம் சென்று சமாதானம் பேசினார். அதற்கும் பரவையாரின் மனம் இரங்கவில்லை. வந்தவர் சிவன் எனத் தெரியாத நிலையில் தான் அவள் இருந்தாள். துாது சென்ற சிவன் “சுந்தரா! பரவையிடம் சமாதானம் பேசிப் பார்த்தேன். அவள் உன்னை ஏற்க மறுக்கிறாள்”என்றார் சிரித்தபடி. அதைக் கேட்ட சுந்தரர், “ஐயனே! தேவர்களைக் காக்க விஷம் அருந்தினீர்கள். மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தருளினீர். அப்படிப்பட்ட நீங்கள் நம்பிய என்னை கைவிடலாமா? பரவையாரிடம் நான் மீண்டும் சேர ஏதாவது வழி செய்ய வேண்டும்'' எனக் கூறி சிவனின் திருவடியில் சரணடைந்தார். அவரது பக்திக்கு இரங்கிய சிவன் சும்மா இருப்பாரா? “சுந்தரா! உனக்காக மீண்டும் பேசிப் பார்க்கிறேன். வருந்தாதே”எனக் கூறினார். பின்னர் சுயஉருவத்துடன் பூதகணங்கள், தேவர்கள், முனிவர்கள் புடை சூழ வீதியில் சிவன் வந்தார். பரவையாரின் மாளிகை முன்புறம் கயிலைத் திருவிழா போல கோலாகலமாக இருந்தது. சிவனைக் கண்ட பரவையார் ஓடி வந்து காலில் விழுந்தாள். சிவன், “பரவையே! நண்பன் என்ற உரிமையோடு சுந்தரன் எம்மை அனுப்பியதால் மீண்டும் உன்முன்பு வந்தேன். உன் வீட்டிற்கு சுந்தரர் மீண்டும் வர வேண்டும்'' என்றார் சிவன்.“பெருமானே! நடந்ததை எல்லாம் மறந்து கூடி வாழ்கிறோம்”என்றார் பரவையார். அருளாசி கூறிய சிவன் உடனே சுந்தரரிடம் சென்றார். “சுந்தரா! உடனே பரவையிடம் செல்வாயாக”எனக் கூறி விட்டு மறைந்தார். முன்பு போல சுந்தரரும் பரவையாரும் இணைந்து சிவத்தொண்டில் ஈடுபட்டனர். இவ்வாறாக சிவனே மணம் முடித்து வைத்து விட்டு, தம்பதியரை பிரித்து வைத்தார். மறுபடியும் சேர்த்து வைத்து அவன் தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டான் என்றால் அவன் தந்திரத்தை அளவிட முடியுமா? இவை யாவும் பக்தியால் விளைந்த நன்மையே.-பக்தி தொடரும்உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com