உள்ளூர் செய்திகள்

கோயிலும் பிரசாதமும் - 8

மண்டைக்காடு பகவதி - மண்டையப்பம்கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 'மண்டையப்பம்' நைவேத்யம் செய்தால் தீராத தலைவலியும் தீரும். சக்தி மிக்க இவளை, 'மண்டைகாட்டம்மா' என அழைத்தால் வேண்டியதை நமக்கு தருவாள். தீயவரை அழிக்க எப்போதும் விழித்திருப்பவள் என்பதால் இவளுக்கு 'விழி மூடாத பகவதி' என்ற பெயரும் உண்டு.காடு, மேய்ச்சல் நிலமான இப்பகுதியை மந்தைக்காடு என அழைத்தனர். அதுவே மண்டைக்காடு என ஆனது. இக்கோயிலின் சிறப்பே புற்று தான். வடக்கு நோக்கியபடி பதினைந்து அடியாக உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகுதியில் பகவதி அம்மன் திருவுருவம் உள்ளது. கருவறையில் புற்றுக்கு முன்பாக பகவதி அம்மன் வெள்ளிச் சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கலச் சிலையாக நின்ற கோலத்திலும் இருக்கிறாள். ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கொடிமரத்துடன் வடக்கு நோக்கியபடி கேரள பாணியில் இக்கோயில் உள்ளது. இதை 'பெண்களின் சபரிமலை' என அழைக்கின்றனர். சபரிமலைக்கு விரதம் இருப்பதைப் போல பத்து நாள் நடைபெறும் மாசிக்கொடை விழாவில் பெண்களும் விரதம் இருந்து பொங்கலிட்டு வழிபடுகின்றனர். இவ்விழாவின் பத்தாவது நாளில் அதிகாலை 12:00 மணிக்கு 'ஒடுக்கு பூஜை' நடக்கும். நைவேத்தியம் அனைத்தும் கோயிலுக்கு அருகில் உள்ள சாஸ்தா கோயிலில் தயாரிக்கப்பட்டு ஓலைப் பெட்டிகளில் மேளம் முழங்க அம்மன் சன்னதிக்கு கொண்டு வரப்படும். கோயிலுக்கு அருகே உள்ள கடலில் நீராடிய பின் அம்மனை தரிசிக்கின்றனர். கடலுக்குச் செல்லும் போது 'கடலம்மே சரணம்' என்றும், கோயிலுக்குள் நுழையும் போது 'மண்டைக்காட்டு அம்மே சரணம்' என கோஷம் இடுகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமியன்றும், தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி அன்று, ஆடி செவ்வாய், வெள்ளியன்று விசேஷ பூஜை நடக்கும். வேப்ப மரமே இங்கு தலவிருட்சம். இங்கு மண் சோறு சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும். உடல் நலம் சிறக்க உலோகத்தால் ஆன உடலுறுப்புகளை செலுத்துகின்றனர். திருமணத் தடை நீங்க இங்கு வழிபடுகின்றனர். 27 தீபங்களை ஏற்றி ஒன்பது முறை அம்மன் சன்னதியைச் சுற்றினால் தோஷம் விலகும். அம்மை நோயில் இருந்து மீண்டவர்கள் 'முத்து' அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.காலை ஆறு, மதியம் பன்னிரண்டு, மாலை ஆறு, இரவு ஏழு மணிக்கு ஆரத்தி நடக்கும். அதிகாலை 5:00 - 12:30 மணி மாலை 5:00 - 8:30 மணி வரை சன்னதி திறந்திருக்கும்.* நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ., * குளச்சலில் இருந்து 3 கி.மீ., * தக்கலையில் இருந்து 12 கி.மீ., மண்டையப்பம் செய்வது எப்படி அரிசிமாவு, வெல்லம், பாசிப் பருப்பு, ஏலம், சுக்கு கலந்து நீராவியில் அவித்து அப்பம் தயாரிக்கப்படுகிறது. தேவையானவைஅரிசி மாவு - 1 கிலோவெல்லம் - ½ கிலோபாசிப்பருப்பு - 100 கிராம்சுக்குப்பொடி - சிறிதளவுஏலக்காய் - 10 செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவில் வெல்லம், வேகவைத்த பாசிப்பருப்பு, சுக்கு, ஏலக்காய்த்துாளை சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.பெரிய அளவில் உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். பெரிய சட்டியில் நீர் ஊற்றி அதை கொதிக்க வைத்து உருண்டையை மெதுவாக இட்டு வேக வைக்க வேண்டும். வெந்ததும் எடுக்க வேண்டும். பகவதி அம்மனுக்குப் பிடித்த மண்டையப்பம் தயார். - பிரசாதம் தொடரும்ஆர்.வி.பதி