சித்தர்களின் விளையாட்டு - 4
போகர்''தனக்கு உயிரும், உடலும் கொடுத்த தன் குருநாதரான காலங்கி நாதருக்கு மவுன யோகம் மூலம் போகர் செய்த சாதனையை அறிந்தால் வியந்து போவாய்'' என்றார் பரமேஸ்வரன். அதற்கு பார்வதியோ, “ஐயனே! தாங்கள் சொல்லும் சித்தர் விளையாட்டு எல்லாம் ஆச்சரியத்தை தருகிறது”''தேவியே! உனக்கு தெரியாதது போல கேட்கிறாயே? பூவுலகமாக இருந்தாலும் வானுலகமாக இருந்தாலும் எல்லா இடத்திலும் பெண்கள் இப்படித்தான். எதையும் தெரியாதது போல் கேட்பதில் ஆவலுடன் இருக்கிறார்கள். நீயும் போகரை பற்றி தெரிந்து கொள்” என சொல்லத் தொடங்கினார். சித்தர்களில் அகத்தியர் போல் போகரும் தனித்தன்மை கொண்டவர். தத்துவம், ரசவாதம், வானியல், மூலிகை என அனைத்திலும் கைதேர்ந்தவர். வாதம், வைத்தியம், யோகம், ஞானம் ஆகியவற்றை கற்பதற்காக காலங்கிநாதரை குருவாக ஏற்றார். போகரின் அறிவை கண்டு மெச்சி, போகம் என்னும் உலகை அடக்கி ஆள்பவராக போகரை பாராட்ட, உலகில் உள்ள நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய போகர் விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழியே கூடு விட்டு கூடு பாய்வது. அதாவது உயிரற்ற உடம்பிற்குள் உயிரை செலுத்தும் கலையில் சிறந்து விளங்கினார். வெளிநாட்டு ஞானிகளிடம் கூடு விட்டு கூடு பாய்ந்தார். சீனா, அரபுநாடுகள் அனைத்திற்கும் சில நொடிக்குள் பயணம் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார். எல்லா மக்களும் நோயின்றி வாழ வேண்டும் என்பதற்காக வைகாவூர் என்னும் பழநி மூலவர் சிலையை நவபாஷாணத்தில் வடிவமைத்தது இவரது உலோகக்கலைக்கு சான்றாகும். தன் சீடரான புலிப்பாணிக்கும் அதைக் கற்றுக் கொடுத்தார். தமிழகத்தை போலவே சீனாவிலும், யோகக்கலையில் பல வல்லுநர்கள் இருப்பதை அறிந்தார். ஞானதிருஷ்டியால் இதை உணர்ந்த போகர், தமிழ் மருத்துவ முறையை கற்றுத் தர முடிவு செய்தார். கூடு விட்டு கூடு பாய்வதன் மூலம் சீனாவிற்குப் போய், 'போயாங்தேய்' என்ற பெயரில் உருமாறினார். சீனர்களின் நம்பிக்கையை பெற அங்குள்ள உயர்ந்த குடும்பத்தில் இடம் வகித்தார். மன்னரின் குடும்பத்துடன் நெருக்கமானார். அந்த சமயத்தில் சீனாவின் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் கொத்துக் கொத்தாக இறந்தனர். சித்த மருத்துவம், அறிவியல், உலோகக்கலை, காயகற்பம், யோகாசனம், வானவியல், மற்ற உலகங்களுக்கு பயணிக்கும் முறை, மரணமில்லாத நிலையை பற்றி அவர் அறிந்து இருந்ததால் சீனர்களை காப்பதற்காக மரணத்தை வெல்லும் மருந்தை தயாரிக்க முடிவு செய்தார். அதற்காக மூன்று சீடர்களை அழைத்துக் கொண்டு தனிமை தேடி ஒரு மலையின் உச்சிக்குச் சென்றார். இரவு பகல் பாராமல் சீடர்களின் உதவியுடன் அங்கு மூலிகைச் சாறுகள், உலோகங்களை உருக்கி, பாஷாண மருந்துகளை தயாரிக்க ஆரம்பித்தார்.இரவில் மட்டுமே சில உலோகங்கள் பளிச்சிடும் தன்மை கொண்டிருக்கும். அந்த உலோகங்களை கண்டுபிடிப்பதற்கு நாயின் துணை வேண்டும் என்பதற்காக தன் வளர்ப்பு நாயை உடன் அழைத்துச் சென்றிருந்தார். பல உலோகங்களை கண்டுபிடித்து, அவற்றை மூலிகைச் சாற்றால் சுத்தம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக மருந்துகளாக மாற்றி, முதற் கட்டமாக வெற்றி பெற்றார். தான் தயாரித்த அருமருந்தை எப்படியாவது சோதனை செய்து பார்க்கவேண்டும் என்பது அவரது எண்ணம். ஆனால் அந்த மருந்தை உட்கொள்ள சீடர்கள் தயங்கினர். பல ஆண்டுகள் விடாமுயற்சியால் இந்த மருந்தை நுட்பமாக தயார் செய்தாலும் கூட, சீடர்கள் அதை நம்ப மறுத்தது போகருக்கு வேதனையை ஏற்படுத்தியது. ஆனால் போகரிடம் இருந்த செல்ல நாய் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து, அந்த மருந்தை தன்னிடம் பரிசோதிக்கும்படி வேண்டி நின்றது. மனம் மகிழ்ந்த போகர் தன் செல்ல நாயை தடவிக் கொடுத்தபடி, “ஆறறிவு கொண்ட நீங்கள் என்னை நம்பவில்லை. ஆனால் இந்த நாயோ எனக்கு உறுதுணையாக உலோகங்களை கண்டுபிடித்து கொடுத்தது. என் மீது நம்பிக்கை கொண்டு இதை உட்கொள்ளவும் தயாராக இருக்கிறது. ஆகவே நாய்க்கு இந்த மருந்தை தருகிறேன்” என ஒரு துளி மருந்தை வழங்கினார். அதை குடித்த நாய் கண்கள் சொருகி, சுருண்டு விழுந்தது. சீடர்கள் மட்டுமல்ல, போகரும் அதிர்ச்சி அடைந்தார். “தவறு செய்து விட்டேன். என்னை நம்பிய இந்த ஜீவனை ஏமாற்றி விட்டேன். இந்த மருந்து இன்னும் முழுமை பெறவில்லை” என கண் கலங்கினார். நாயை கொன்று விட்ட போகரைக் கண்டு கோபம் கொண்ட சீடர்கள் “குருவே! உங்களை மலைபோல நம்பினோம், எங்களை போலவே, இந்த நாயும் மலை உச்சியில் நம்முடன் படாத பாடுபட்டது. ஆனால் உங்கள் அறியாமையால் நாயைக் கொன்று விட்டீர்கள். இந்த நாய்க்கு மருந்து கொடுத்ததற்கு பதிலாக நீங்கள் இதை சாப்பிடக் கூடாதா... ஏன் இந்த சுயநலம்” எனக் கேட்டனர். மனம் வருந்திய போகர் “ நாயை கொன்ற பாவத்திற்கு ஆளாகி விட்டேனே. நானும் இந்த மருந்தை அருந்தி, மரணத்தை ஏற்கிறேன். ஒரு துளி தான் நாய் சாப்பிட்டது. நான் இரண்டு துளி சாப்பிடுகிறேன்” என்றார். அதன்படியே போகரும் மண்ணில் சரிந்தார். மூன்று சீடர்களும் திகைத்தபடி நின்றனர். ஒரு சீடர் மட்டும் “குருவே! மன்னியுங்கள். தவறு எல்லோருக்கும் ஏற்படுவதுதான். அது புரியாமல் மற்ற சீடர்களோடு சேர்ந்து நானும் தாங்கள் வருந்தும் படி செய்து விட்டேனே. செய்த தவறுக்கு பிராயசித்தமாக நானும் மருந்தை எடுத்துக் கொள்கிறேன்” என ஒரு துளியை நாக்கில் வைக்க, அவரும் கீழே விழுந்தார். மற்ற இருவரும், “இந்த இடத்தை விட்டு நாம் உடனே சென்றுவிடுவோம் என மலையை விட்டு இறங்கத் தொடங்கினர். சற்று நேரத்தில் அசைவற்று கிடந்த போகர் கண் விழித்தார். அப்போது அவரது உடல் ஆரோக்கியமாக, இளமையாக இருப்பதை உணர்ந்தார். இந்த மருந்தை இரண்டு துளிகள் உட்கொண்டால் தான் சாகாத நிலையை அடைய முடியும் என்பதை உணர்ந்தார். சற்றும் தாமதிக்காமல் அருகில் கிடந்த நாய்க்கும், தன் சீடனுக்கும் துளியளவு மருந்தைக் கொடுத்தார். சற்று நேரத்தில் இருவரும் கண் விழித்தனர். பலகாலம் உழைத்து கண்டுபிடித்த இந்த மருந்து மிகவும் பலனளித்துவிட்டது. நோயின்றி மக்களை வாழவைக்கும் அற்புத மருந்தை உலகம் முழுவதும் பரவச் செய்வேன் என மகிழ்ந்தார் போகர். அப்படி வரும் பொழுது அங்கிருந்த ஒரு மரவெட்டியிடம், தன்னை நம்பாமல் சென்ற தன் இரண்டு சீடர்களிடம், “நான் இனி இங்கு வரப்போவதில்லை. என்னை முழுமையாக நம்பிய செல்ல நாய், சீடருடன் பழநி மலைக்குச் செல்ல இருக்கிறேன். என்னைக் காண வேண்டுமானால் அவர்கள் பழநிக்கு வரட்டும்” என சொல்லி விட்டு சீனாவில் இருந்து புறப்பட்டார். மகேஸ்வரனே... போகரின் செயல் வியப்பில் ஆழ்த்துகிறது. ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்தை கண்டுபிடித்து அதை இந்த பாரத தேசத்திற்கு போகர் அர்ப்பணித்தார் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்'' என்றாள் பார்வதி.''ஆம். பார்வதி! நம் புதல்வன் முருகனின் அருளால் இந்த மருந்து வெற்றிகரமாக முடிந்தது. போகர் பழநியில் முருகனின் நவபாஷாண சிலையை நிறுவினார். இன்னும் அவரது பெருமைகள் ஏராளமாக உள்ளன. இந்த உரையாடலை இடை மறித்து, “நமச்சிவாயா! சித்த மருத்துவத்தின் முதல் கடவுள் சிவன். உமக்கு சிலை வைக்காமல் முருகனுக்கு சிலை வைத்ததின் சூட்சுமம்தான் என்ன. எமக்கு புரியவில்லையே” என்றார் நாரதர்.“நாரதரே! உங்கள் கலகம் இங்கே செல்லுபடியாகாது. போகரை பற்றி முழுமையாக கேளுங்கள். அப்புறம் பார்க்கலாம்” என்றார் மகேஸ்வரன்.-விளையாட்டு தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்90030 00250