உள்ளூர் செய்திகள்

பொய் பேசாதவர்

திருத்தல யாத்திரையாக வந்த துறவி ஒருவர் ஊராரிடம், '' பொய் பேசாதவர் யாராவது இங்கு இருக்கிறார்களா'' எனக் கேட்டார்.'சுப்பிரமணியம்' எனக் குறிப்பிட்ட அவர்கள், '' சிவபக்தரான அவருக்கு நான்கு மகன்கள். பணக்காரரான அவர் தர்மசிந்தனை கொண்டவர்'' என்றனர். அவரது வீட்டுக்கு துறவி போனார். அவரைக் கண்ட சுப்பிரமணியம் வணங்கியபடி ''சுவாமி... எங்கள் வீட்டில் அவசியம் தாங்கள் சாப்பிட வேண்டும்'' என வேண்டினார். மகிழ்ச்சி அடைந்தாலும் பரிசோதித்து விட்டு சாப்பிடலாம் என பேச்சு கொடுத்தார். “உமது வயது என்ன?” “சுவாமி! என் வயது மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள்''''உமக்கு குழந்தைகள் எத்தனை பேர்'' “ ஒரே மகன் தான்” ''உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது'' ''இருபத்தி இரண்டாயிரம் ரூபாய்'''இவரைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே' என துறவி திடுக்கிட்டார். ''சுவாமி... நான் பொய் சொல்லவில்லை. யோசித்தால் உண்மை புரியும்'' என்று சொல்லி வரவு செலவு கணக்கை எடுத்து வந்தார். அதில் கையிருப்பு லட்சம் என்றிருந்தது. ''லட்சம் ரூபாய் இருக்கும் போது 22,000 ரூபாய் என்கிறீர்களே''''சுவாமி! இந்த பணம் என்னுடையதாகாது. இதுவரை 22,000 ரூபாயைத் தான் தர்மத்திற்காக செலவழித்துள்ளேன். நான் இறந்த பின் இந்த பணம் என் கூட வராதே. தர்மம் தானே கூட வரும். அதுவே என் உண்மையான சொத்து” என விளக்கினார். ''நாலு மகன்கள் இருக்கும் போது ஏன் ஒரு மகன் என்றீர்களே''''எனக்கு நான்கு மகன்கள் என்றாலும் முதல் மூன்று பிள்ளைகள் என்னை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. கடைசி மகன் மட்டுமே என் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பான். அதனால் தான் அவனை மட்டுமே என் மகனாக கருதுகிறேன்'' என்றார். ''என்ன சொல்கிறீர்கள் நீங்கள்''“சுவாமி! இதோ விளக்குகிறேன்'' என்று சொல்லி, 'நடேசா' என மூத்த மகனை கூப்பிட்டார்.அவன், ''அப்பா நான் சீட்டு விளையாடுகிறேன் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்'' என்று பதில் கொடுத்தான். “மகனே! வடிவேலா'' என குரல் கொடுத்தார்.“ஏன் இப்படி கத்துறே. என்னால வர முடியாது'' என பதில் வந்தது. “என் மகனே! சிவராஜா என்று ஒரு குரல் கொடுத்தார். '' உனக்கு புத்தி இருக்கிறதா? என்னை தொல்லை செய்யாதே'' என்று கோபமாக கத்துவது கேட்டது. ''அப்பா குமரேசா'' என்று கூப்பிட்டதும் ஒருவன் வந்தான். ''அப்பா சாப்பிட பால் பழம் கொண்டு வரட்டுமா?'' என்றும் கேட்டான். “ சுவாமி! என்னை மதிக்காத மூவரும் பாவத்தின் சின்னங்கள். இவனை மகனாக கருதுவதால் எனக்கு ஒரு மகன் என்றேன்'' என்றார். ''மகிழ்ச்சி. ஏன் உன் வயது விஷயத்தில் பொய் சொன்னீர்?''''சுவாமி! தினமும் ஒரு மணி நேரம் வழிபாடு செய்கிறேன். கடவுளைச் சிந்திக்கும் நேரமே எனக்குச் சொந்தமானது. எனவே வாழ்நாளில் நான் பூஜை செய்த நேரத்தை மட்டுமே வயதாக குறிப்பிட்டேன். சரிதானே ஐயா'' ''நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. நான் தான் புரிந்து கொள்ளவில்லை'' ''தர்மம் செய்த பணமே நிலைக்கும். பெற்றோரை மதிப்பவனே நல்ல மகன். கடவுளைச் சிந்திக்கும் நேரமே நம்முடையது என்ற உண்மைகளை எடுத்துச் சொன்ன தங்கள் வீட்டில் சாப்பிடுவது புண்ணியம்'' என்றார் துறவி.