மீனாட்சியம்மனின் தாய்
கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பிகை மீது பக்தி கொண்டாள். ஒரு சமயம் புனிதமான இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையைத் தரிசிக்க ஆசைப்பட்டாள். விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். கடம்பவனம் எனப்படும் மதுரை தலத்தைக் காட்டி இங்கு குடியிருக்கும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான் விசுவாவஸு. அதன்படி அம்பிகையைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சன்னதி முன்பு நின்று மனமுருகி வழிபட்டாள். இக்கோயில் பிடித்துப் போகவே இங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, 'என்ன வரம் வேண்டும் கேள்' எனக் கேட்டாள். அம்பிகையை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீயே மகளாக வாய்க்கும் பாக்கியத்தை தர வேண்டுமென வேண்டினாள். 'உன் விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும்' என அம்பிகை வாக்கு கொடுத்தாள். இதன்படி அடுத்த பிறப்பில் சூரிய வம்ச அரசனான சூரசேனனின் மகள் காஞ்சனமாலாவாக அவதரித்தாள் வித்யாவதி. பக்தையான அவளுக்கும், மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. மன்னனும் புத்திரப்பேறுக்காக புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தினான். யாகத்தீயில் மூன்று வயது குழந்தையாக அம்பிகை தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அம்பிகை வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவஜனும், காஞ்சனமாலாவும் குழந்தையை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாததால் மகளுக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்பித்தனர். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பை ஒப்படைத்தான். மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், 'மீனாட்சி' எனப் பெயர் பெற்றாள். இதன் பிறகு சியாமளை என்பதை விட, மீனாட்சி என்ற பெயரே நிலைத்தது. இவ்வாறு பக்தைக்கு அருள்புரிபவளாக மீனாட்சி மதுரையில் அருள்கிறாள். பெண்களின் தெய்வமாக மங்கையற்கரசி எனப் போற்றப்படுகிறாள். மஞ்சள், குங்குமம் நிலைக்க, சுமங்கலி பாக்கியம் கிடைக்க மீனாட்சியம்மனே கதி என பலர் இங்கு தவம் கிடக்கின்றனர்.ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு 'மதுரை' என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சியின் புகழ் கொடி கட்டிப் பறக்கிறது.