தண்டனையை ஏற்றுக்கொள்
கல்பகிரி என்பவன் கொலை செய்து விட்டு இமயமலையில் ஒளிந்து கொண்டான். அங்கு நடக்கும் ஆன்மிகச் சொற்பொழிவில் பங்கேற்றதால் மனம் திருந்தினான். நல்லவர்களின் உதவியுடன் பக்தி நுால்களை படித்தான். அத்வைதம் உள்ளிட்ட தத்துவங்களைப் பற்றிக் கூட அவனால் மணிக்கணக்கில் பேச முடிந்தது. ஆசைகள் அறவே மறைந்தன. துறவியாக மாறினான். பகவான் சத்ய சாய்பாபாவின் மீது ஈர்ப்பு உண்டாகவே புட்டபர்த்திக்கு தரிசிக்க வந்தான். தான் செய்த தவறைச் சொல்லி வருந்திய போது, ''கல்பகிரி... நீ ஆன்மிகவாதியாகி விட்டாய். நல்லது தான். ஆனால் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அடுத்த பிறவி வரை அதை ஏன் தள்ளிப் போடுகிறாய். போலீசில் சரணடைந்து விடு. உனக்கு மரண தண்டனை கிடைக்காது. தண்டனைக்காலம் முடிந்த பின் இங்கு வா'' என்றார். அதை ஏற்று போலீசில் சரணடைந்தான். ஆனால் கிடைத்ததோ மரணதண்டனை. இறுதியில் ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுத்தான். மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பின் முழுநேர ஆன்மிகவாதி ஆனார்.