ஒட்டும்... ஒட்டாது...
ஒரு குருநாதர் சீடர்களுக்கு பாடம் எடுத்தார். '' உலகம் என்பது ஒரு மரம். அதன் ஒரு கிளையில் ஞானப் பறவையும், மற்றொரு கிளையில் அஞ்ஞானப் பறவையும் உள்ளன. முதல் பறவை கடவுளையும், அடுத்த பறவை மனிதர்களையும் குறிக்கும். அதில் அஞ்ஞானப் பறவைக்கு உலக ஆசைகள் எல்லாம் ஒட்டும். ஞானப் பறவைக்கு எதுவும் ஒட்டுவதில்லை'' என்றார்'' இருவருக்கும் ஒட்டும் அல்லது ஒட்டாது என்பது தானே உண்மையாக இருக்கும்'' என்றான் சீடன்.'' வேதம் சொல்வதையே நான் சொல்கிறேன். அதனால் அதை மறுக்காதே'' என்றார் குரு. அவனோ உறுதியுடன் இருந்தான். '' சரி... மார்கழி 27ம் நாளில் இதை நிருபிக்கிறேன்'' என்றார். அந்த நாளும் வந்தது. பொழுது புலரும் முன் எல்லோரும் நீராடி திருப்பாவையிலுள்ள 'கூடாரை வெல்லும் கோவிந்தா' என்னும் பாசுரத்தை பாடினர். இதை பாடினாலே நாவில் எச்சில் ஊறும். ஏனெனில் பெருமாளுக்கு 'அக்கார அடிசில்' என்னும் சர்க்கரை பொங்கலை நைவேத்யம் படைப்பர். இதை கையில் வாங்கினால் முழங்கை வரை வழியும் அளவிற்கு நெய் இருக்கும். அந்த சீடனுக்கும் அக்கார அடிசில் தரப்பட்டது. திருப்தியாக சாப்பிட்டான். அவனுக்குக் கை கழுவ சீயக்காய் பொடி கொடுத்தார் குரு. நெய் பிசுக்கு போக கையைக் கழுவினான். மேலும் சிறிது பொடியைக் கொடுத்து, '' உன் நாக்கையும் கழுவு'' என்றார் குரு.''குருவே! கையில் தான் பிசுக்கு ஒட்டும். நாக்கில் ஒட்டாதே'' என மறுத்தான். ''பார்த்தாயா! நாக்கிற்கு இது சாத்தியம் என்றால், கடவுளுக்கு எப்பேர்ப்பட்ட சக்தியிருக்கும்! அதனால் தான் ஞானப்பறவைக்கு உலக ஆசை ஒட்டாது என வேதம் சொல்கிறது'' என்றார் குருநாதர்.