நல்லதை நினை
விஷ்ணுபக்தரான ஹரிதாஸ் வறுமையில் வாடினாலும் பிறருக்கு உதவும் மனம் கொண்டவர். அவர் மீது இரக்கப்பட்ட மகாவிஷ்ணு அட்சயபாத்திரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார். மனதில் நினைத்த பொருளை எல்லாம் அந்த பாத்திரம் உடனே வரவழைக்கும். உணவு வர வேண்டும் என ஹரிதாஸ் நினைக்க, அதில் அப்படியே வந்தது. அதன் மூலம் அன்னதானம் செய்ய ஊரே வாழ்த்தியது. ஹரிதாசின் பக்கத்து வீட்டில் பொறாமைக்காரரான கிரிதாஸ் குடியிருந்தார். ஊரே ஹரிதாசை புகழ்கிறதே என கோபப்பட்டார். அதனால் ஹரிதாசுக்குத் தெரியாமல் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து பாத்திரத்தை திருடினார். அதன்பின் ஹரிதாசின் வீடு தீப்பிடித்து எரிய வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கு மாறாக, கிரிதாஸ் வீட்டில் தீப்பிடித்தது. அலறி அடித்தபடி அடுத்த வீட்டுக்கு ஓடினார். துாங்கிக் கொண்டிருந்த ஹரிதாசை எழுப்பி காப்பாற்றும்படி வேண்டினார். நல்லவரான அவரும் மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்ய பிரச்னை தீர்ந்தது. நல்லதை நினை; நல்லதே நடக்கும் என உணர்ந்த கிரிதாஸ், பாத்திரத்தை திருப்பிக் கொடுத்தார்.