உள்ளூர் செய்திகள்

தெய்வ தரிசனம் - 2 (27)

திட்டை குருபகவான்தஞ்சாவூருக்கு வடமேற்கில் 10 கி.மீ., தொலைவில் உள்ள திட்டையில் இருக்கும் குருபகவான் கோயில் சிறப்புமிக்கது. வெண்ணாறு, வெட்டாறுக்கு இடையில் உள்ள ஒரு மேட்டில் இந்த கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் வசிஷ்டேஸ்வரர், அம்மன் மங்களாம்பிகை வசிஷ்ட முனிவர் வழிபட்டதால் சுவாமிக்கு 'வசிஷ்டேஸ்வரர்' என்பது பெயர். அந்த காலத்தில் 'வசிஷ்டாஸ்ரமம்' என அழைக்கப்பட்டது. பிரம்மா, மகாவிஷ்ணு, சுப்ரமண்யர், பைரவர், சூரியன், எமன், சனி, இந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி என பலர் வழிபட்ட தலம் இது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. வசிஷ்டேஸ்வரர், மங்களாம்பிகைக்கு நடுவில் தனி விமானத்துடன் இருக்கிறார் குருபகவான். முதலில் இங்குள்ள குருபகவானைத் தரிசிப்போம். ஒருவரின் ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடத்தின் மூலமாக உயர்வு அளிப்பவர் என்பதை 'குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்வர். தனது சுபமான பார்வை பலத்தால் கிரகதோஷம், சாபத்தை போக்கியருள்பவர். தெற்கு நோக்கியபடி ராஜகுருவாக நின்ற நிலையில் அபய முத்திரையுடன் இருந்து தரிசிப்போருக்கு அடைக்கலம் அளிக்கிறார். இத்தலத்தின் புராணக் கதையைப் பார்ப்போமா? தேவர்களின் தலைவர் இந்திரன். அவர்களின் குருநாதர் குருபகவான். தலைவரை விட, ஆலோசகரான குருநாதரே முக்கியமானவர். ஏனெனில் தலைவன் தடுமாறும் போது, நல்வழிப்படுத்தும் கடமை இவருக்கே உண்டு. ஒருநாள் இந்திரனைக் காண தேவலோகம் வந்தார் குருபகவான். அப்போது ஊர்வசி நடனமாடிக் கொண்டிருந்தாள். அதில் மனம் லயித்திருந்ததால், அவரை இந்திரன் கண்டுகொள்ளவில்லை. இச்செயல் குருபகவானுக்கு வருத்தம் அளித்தது. மதிப்பு இல்லாத இடத்தில் குருமார்கள் இருக்க விரும்புவதில்லை. அங்கிருந்து வெளியேறி பூலோகம் புறப்பட்டார். குருபகவான் இல்லாததால் தேவலோகம் களையிழந்தது. தவறை உணர்ந்த இந்திரனும் பூலோகம் வந்து, ஒவ்வொரு சிவன் கோயிலாக தரிசித்தார். திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனக்குறை தீர வேண்டினார். அப்போது குருபகவான் அங்கு காட்சியளித்தார். அவரிடம் இந்திரன் மன்னிப்பு கேட்டார்.இந்திரனுக்கு அருள்புரிந்த நிலையில் குருபகவான் தனி சன்னதியில் இங்கிருக்கிறார். இவரை வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும். திருமணம், குழந்தைப்பேறு கிடைக்க பரிகார ஹோமம், பூஜை நடத்துகின்றனர். ஆண்டுதோறும் குரு பெயர்ச்சியின் போது லட்சார்ச்சனை நடக்கும். இனி மூலவர் வசிஷ்டேஸ்வரரைத் தரிசிப்போம்.சுயம்பு மூர்த்தியாக தோன்றிய இவர் மீது, 24 நிமிடத்திற்கு ஒரு முறை சொட்டு நீர் மேலிருந்து விழும். இதென்ன அற்புதம் எனத் தோன்றுகிறதா? கருவறையின் விமானத்தில் சந்திரனின் அம்சமான காந்தக்கல் உள்ளது. காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சி, 24 நிமிடத்திற்கு ஒரு முறை சுவாமி மீது ஒரு சொட்டு அபிஷேகமாக விழுகிறது. சந்திரனே இதைச் செய்வதாக நம்பிக்கை. சந்திரன் போல சூரியனும் ஆண்டுக்கு ஆறுநாள், சிவனை இங்கு வழிபடுகிறார். ஆவணி 15, 16, 17. பங்குனி 25, 26, 27 ஆகிய நாட்களில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன. மூலவர் சிவன் தவிர்த்து கருவறையைச் சுற்றி மூலைக்கு ஒன்றாக நான்கு லிங்கங்கள் உள்ளன. இந்த ஐந்தையும் வழிபட்டவர்கள் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்கா, காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களை தரிசித்த பலனடைவர். தாலி பாக்கியம் தருபவளாக அம்மன் மங்களாம்பிகை இங்கு இருக்கிறாள். இவளது சன்னதியின் மேற்கூரையில் சிற்ப வடிவில் ராசி சக்கரம் உள்ளது. அவரவர் ராசிக்கு கீழே நின்று அம்மனை வழிபட்டால் கிரகதோஷம் ஓடிவிடும்.குருபகவானுக்குரிய வியாழக்கிழமையில் விரதமிருந்து இங்கு வழிபடுவோருக்கு கூடுதல் நன்மை கிடைக்கும். இக்கோயில் காலை 6:00 - 12:00, மாலை 4:00 - 8:00 மணி வரை திறந்திருக்கும். தங்களை நாடி வருவோரின் விருப்பத்தை வசிஷ்டேஸ்வரரும், மங்களாம்பிகையும் நிறைவேற்றுகிறார்கள் என்பதற்கு இங்கு கூடும் கூட்டமே சாட்சி!தரிசனம் தொடரும்தொடர்புக்கு: swami1964@gmail.comபி. சுவாமிநாதன்