உள்ளூர் செய்திகள்

ஆயிரம் பிறை காண வேண்டுமா...

ஹிந்து மதத்தில் குரு, லிங்க, சங்கம வழிபாடு சிறப்பானது. ஆசிரியரையும்,கோயில்களில் உள்ள கருவறை மூர்த்தியையும், அன்பு செலுத்தும் அடியார்களையும் சிவனாகவே வழிபட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஒருவர் விடாமல் கடைப்பிடித்து வாழ்ந்தால் அதன் பயனாக இப்பிறப்பில் நல்ல நிலையை இப்பூவுலகில் வாழ்ந்து சொர்க்கத்தை அடைவர். குரு என்ற சொல் இரண்டு எழுத்தால் ஆனது. கு என்பது இருள், அறியாமையையும், ரு என்பதற்கு அதை நீக்குபவர் என பொருள் கொள்வர். உதாரணத்திற்கு சிவனடியாரான அப்பூதியடிகளுக்கு வாய்த்த திருநாவுக்கரசு நாயனார், மதுரகவியார் தேடிச் சென்ற நம்மாழ்வார், ராமானுஜருக்கு மந்திர உபதேசம் செய்த திருக்கோஷ்டியூர் செல்வநம்பி, சுவாமி விவேகானந்தருக்கு காளியை கண் முன்காட்டிய ராமகிருஷ்ண பரமஹம்சர், உ.வே.சாமிநாத ஐயரை நடமாடும் நுாலகமாக்கிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை. வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு எழுச்சியூட்டிய பாலகங்காதர திலகர் இவர்களை போன்றோர் பலர் குரு சிஷ்ய உறவிற்கு சிறந்த உதாரணம். முற்காலத்தில் குருவின் இருப்பிடமான ஆசிரமத்தில் தங்கி பலஆண்டுகள் தொண்டுகள் செய்து பாடம் பயின்றவர்களே எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினர். இம்முறை தற்போதும் வேதஆகமம் சொல்லித்தரும் பாடசாலைகளில் நடைமுறையில் உள்ளது. இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குருகுலங்கள் இருந்தன. அப்படி வாழ்ந்தவர்களில் பலரும் குருவை மிஞ்சிய சீடர்களாக ஜொலித்தார்கள். அவர்களைப் போன்ற மாணாக்கர்களாக சிறந்து விளங்க நல்லொழுக்கங்களை போதிக்கும் குருவினை தற்காலத்தில் கண்டு கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுடைய எதிர்காலம் நன்கு பிரகாசமடையும். குருகுல படிப்பில் இடம் பெறும் வேதம், உபநிஷத்துக்கள், இதிகாசம், புராணம், தோத்திர, சாத்திர, நீதி நுால்கள் என எல்லாம் முடிவாக ஒன்றை தீர்க்கமாக சொல்லும். அதைத்தான் அங்கு விரிவாக படம் நடத்துவார்கள். சான்றாக ராமாயணத்தை நன்கு படித்த ஒருவர் ராமனைப் போல வாழவேண்டும் என்பார். ராவணனைப்போல வாழக்கூடாது என உணர்வார். பாரதத்தைப் படிக்கும் மற்றொருவர் எங்கெல்லாம் தர்மம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. எங்கு அதர்மம் இருக்கிறதோ அங்கெல்லாம் தோல்வி இருக்கிறது என தத்துவத்தை முழுமையாக தெரிந்து கொள்வார். எனவே குருவழிபாட்டில் சிறந்து விளங்குபவர்கள் ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாக வாழ்வர்.