உள்ளூர் செய்திகள்

சகலகலா வல்லியின் கருணை

ஒரு சமயம் கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சிப்பெரியவர் தங்கியிருந்தார். அப்போது கலைஞர்கள் பலர், தங்களின் திறமையை வெளிப்படுத்தி தினமும் ஆசி பெற்று வந்தனர். ஒரே நேரத்தில் பல விஷயங்களை மனதில் பதிய வைக்கும் கலைக்கு 'கவனகம்' என்று பெயர். இக்கலையில் ஒரே நேரத்தில் நுாறு விஷயங்களைக் கேட்டு மனதில் பதிய வைப்பது 'சதாவதானம்' எனப்படும். இப்பயிற்சி பெற்றவரை 'சதாவதானி' என்று அழைப்பர். இவர்களிடம் ஒரே நேரத்தில் நுாறு கேள்விகள் கேட்கப்படும். முடிவில் ஒவ்வொன்றுக்கும் வரிசை மாறாமல் அவர் பதிலளிக்க வேண்டும். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அற்புதக் கலை இது. ஒருநாள் கும்பகோணம் மடத்தில் சதாவதானி ஒருவரின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடானது. சுவாமிகளின் முன்னிலையில் பக்தர்கள் மடத்தில் கூடினர். இலக்கியம், தத்துவம், ஆன்மிகம், சங்கீதம், ஓவியம், சிற்ப சாஸ்திரம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பான கேள்விகளை பண்டிதர்கள் கேட்டனர். முடிவில் சதாவதானி பதிலளிக்கும் நேரம் வந்தது. தயக்கமின்றி வரிசை மாறாமல் அவரும் பதிலளித்தார். இதற்கிடையில் சதாவதானிக்கு முன்பாகவே, மெல்லிய குரலில் காஞ்சிப்பெரியவரும் பதில் சொன்னதோடு, பக்தர் ஒருவர் மூலம் அதை தாளில் குறிக்கவும் ஏற்பாடு செய்தார். அதை சதாவதானியின் பதில்களோடு ஒப்பிட்ட போது ஒன்றாக இருந்தது. காஞ்சிப்பெரியவரும் கவனகப் பயிற்சியில் வல்லவராக இருப்பதை அறிந்த சதாவதானி ஆச்சரியம் கொண்டார். ''கலை என்பது நம் உழைப்பால் மட்டும் வருவதில்லை. சகலகலாவல்லியான அம்பிகையின் கருணையும், கடாட்சமும் அதற்கு வேண்டியிருக்கிறது'' என்று சொல்லி சிரித்தார் காஞ்சிப்பெரியவர். பக்தியுடன் பெரியவரின் திருவடியில் விழுந்து வணங்கினார் அந்த சதாவதானி. இப்பகுதியில் வெளியான கட்டுரைகள் புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் வேண்டுவோர் 1800 425 7700 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.திருப்பூர் கிருஷ்ணன்