பச்சைப்புடவைக்காரி - 43
அன்னையின் தரிசனம்முன்னால் அமர்ந்திருந்த முப்பத்தியைந்து வயது சாரதாவையும் அவளது வழக்கறிஞர் ராமனையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.“என் புருஷன ஜெயில்ல தள்ளிட்டாங்க. கேசு விசாரணைக்கு வரப்போகுது. பத்து வருஷம் ஜெயில். மானம் போச்சு வேலை போச்சு''ராமன் உணர்ச்சிவசப்படாமல் விளக்கினார்.“பாபு - இவங்க கணவர், காலேஜ்ல ப்ரொபசரா இருக்காரு. கூடவே ஹாஸ்டல் கணக்குகள மேற்பார்வை பாக்கற வேலை. கணக்குல பெரிய ஊழல் நடந்தத கண்டுபிடிச்சிட்டாரு பாபு. ஹாஸ்டல் நிர்வாகியா இருந்த ஒரு பொம்பளையப் பத்திப் பாபு காலேஜ் கமிட்டி மீட்டிங்க்ல புகார் கொடுக்கறதா திட்டம். அதுக்கு முன்னால ஹாஸ்டல்ல இருக்கற ஒரு மாணவி பாபுமேல பாலியல் புகார் கொடுத்துட்டா. எல்லாம் அந்த திருட்டுப் பொம்பளையோட வேலைதான். போலீஸ் வந்து பாபுவ அரஸ்ட் பண்ணி அவர் பேரையே நாறடிச்சிட்டாங்க. பாபு அந்த மாணவியக் கட்டிப் பிடிச்சத நானே நேர்ல பாத்தேன்னு அந்தத் திருடி சாதிக்கறா”சாரதா என்னைப் பார்த்துக் கைகூப்பினாள்.“ஒருதரம் எங்ககூட வந்து என் புருஷனப் பாத்து நல்ல வார்த்தை சொல்லணும்யா”ஏதோ ஒரு தைரியத்தில் அவர்களுடன் கிளம்பி விட்டேன். பாபுவை சந்தித்தேன். “பயமா இருக்கு சார். பச்சைப் புடவைக்காரி என்ன ஏன் சார் இப்படி சித்திரவதை செய்யணும்?”“நல்லவங்கள அவ கைவிட்டதா சரித்திரமே இல்ல, பாபு. நியாயம் ஜெயிக்கும். நல்லதே நடக்கும்” அதற்குமேல் எதுவும் சொல்லமுடியவில்லை.பாபுவிற்காக பிரார்த்தித்தேன். ஒரு வாரத்திற்குப் பின் வழக்கறிஞர் என்னை பதட்டத்துடன் அழைத்தார்.“உடனே ஜெயிலுக்கு வாங்க. பாபுவுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சி”ஓடினேன். பாபுவிற்கும் அவருக்கும் நடந்த உரையாடலை அப்படியே சொன்னார் வழக்கறிஞர்.“வக்கீல் சார், என் மனச மாத்திக்கிட்டேன்”“என்ன உளறுறீங்க பாபு?”“நீங்க தயாரிச்சிருக்கற குறுக்கு விசாரணைக் கேள்விகள் ரொம்ப பயங்கரமா இருக்கு. அந்த பொண்ணு ரொம்பவே காயப்பட்டிருவா”“இந்த மாதிரி ஒரு நெருக்கடிலதான் அந்தப் பஜாரி உண்மையப் பேசுவா”'உங்க குறுக்கு விசாரணையில அந்தப் பொண்ணு பொய் சொன்னத நிரூபிச்சிட்டீங்கன்னு வச்சிக்குவோம். என் மீதுள்ள பழி போயிரும். எனக்கு வேல கெடச்சிரும். ஆனா அந்தப் பொண்ணுக்கு என்னாகும்னு யோசிச்சிப் பாத்தீங்களா?”“அவ எக்கேடு கெட்டா நமக்கென்ன”“அவ பொய் சொன்னான்னு தெரிஞ்சவுடன அவ ஒரு நடத்த கெட்டவ, பாடம் நடத்திற வாத்தியார் மீது அபாண்ட பழி சுமத்தின வஞ்சகின்னு சமுதாயம் தள்ளி வச்சிரும்”“அதுதானே நிஜம். அவ நடத்த கெட்டவதான். அதனாலதானா பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் மேல பொய்யா பாலியல் புகார் கொடுத்திருக்கா?”“அவளுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? யார் வேலை கொடுப்பாங்க? அவ தற்கொலை பண்ணவும் வாய்ப்பிருக்கு. ஒரு இளம் குருத்த பலியாக்க நான் விரும்பல. ஒரு பொண்ணக் காவு கொடுத்துத்தான் என் பேரக் காப்பாத் தணும்னா அந்த பேரே வேண்டாம் சார்”“என்னை என்னதான் பண்ண சொல்றீங்க?”“அந்தப் பொண்ண குறுக்கு விசாரணை பண்ண வேண்டாம்”“நம்ம கேஸ் தோத்துப் போயிரும்”“அதனால என்ன?”“நீங்க குற்றவாளின்னு கோர்ட்ல தீர்ப்பு வரும். உங்கள வேலையிலருந்து டிஸ்மிஸ் பண்ணிருவாங்க. பத்து வருஷம் தண்டனை கிடைக்கலாம். உங்க பேரு பெர்மனண்ட்டா ரிப்பேர் ஆயிரும்”“ஆகட்டுமே. பச்சைப்புடவைக்காரி அன்ப அப்படித்தான் காமிப்பேன்னு அடம் பிடிச்சா நான் என்ன செய்ய முடியும்?”பாபு என்னிடம் பேசவேண்டும் என்றார்.“அதிகாலை மூணு மணி இருக்கும் சார். என் செல்லுக்கு வெளிய யாரோ கூட்டிக்கிட்டிருந்தாங்க. இந்த நேரத்துல யாரு கூட்டறாங்கன்னு பாத்தேன். அந்தப் பொம்பளை கூட்டறத நிறுத்திட்டு என்னைத் திரும்பி ஒரு பார்வை பாத்தா பாருங்க. அவ கண்ணுல கருணை ஒளி. அப்பப்பா! அழுகை வந்துச்சி. இருக்கறத எல்லாம் அந்தப் பொம்பளை காலடில போட்டு உயிர விடலாம்னு தோணிச்சி. என்னப் பாத்து சிரிச்சா பாருங்க. அவளோட அன்பு மழையில நனைஞ்சப்புறம் யாரையுமே வெறுக்க முடியல. காயப்படுத்த முடியல. என் மீது அபாண்டமா குற்றம் சாட்டின அந்த மாணவியும் அவளைத் துாண்டிவிட்ட அந்த ஹாஸ்டல் நிர்வாகியுமே எனக்குப் பச்சைப்புடவைக்காரியோட அம்சமாத்தான் தெரியறாங்க. இந்தக் கேஸ்ல என்னைத் துாக்குல போட்டாலும் எனக்குக் கவலையில்ல”நான் சிறை வளாகத்தை விட்டு வெளியே வரும்போது அங்கே இருந்த பெண்போலீஸ் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.“பாபுவிற்கு என்ன நடக்கும் என பயப்படுகிறாயா?”“அவருக்கு உங்கள் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரை யாராலும் காயப்படுத்த முடியாது. ஆனால் உங்கள் அன்பு எப்படி வெளிப்படப்போகிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்”''அங்கே நடப்பதைப் பார்.”வழக்கறிஞர் ராமன் அரசு வழக்கறிஞர் சந்திரனை அலைபேசியில் அழைத்து பாபு சொன்னதை வார்த்தை பிசகாமல் சொன்னார்.“சந்திரா, நீயும் நானும் ஒண்ணாப் படிச்சவங்க. அந்த உரிமையில சொல்றேன். பாபு பச்சைப்புடவைக்காரியோட செல்லப்பிள்ளைன்னு எனக்குத் தோணுது. அந்தாளக் காயப்படுத்தினா பச்சைப்புடவைக்காரி நம்மளத் தொலைச்சிருவா.“உனக்கும் அதே வயசுல ஒரு பொண்ணு இருக்காங்கறத மறந்துராத. நான் இன்னிக்குக் கோர்ட்டுக்கு வரப்போறதில்ல. அந்தப் பொண்ணக் குறுக்கு விசாரண பண்ணப் போறதுல்ல. பச்சைப்புடவைக்காரி ஒரு நல்ல மனுஷன உன் பொறுப்புலவிட்டிருக்காப்பா. நீ அவருக்கு என்ன பண்ணப் போறியோ அதையேதான் அவ உனக்கும் பண்ணப்போறா. இனிமே இந்த கேஸ் உன் பிரச்னை. பச்சைப்புடவைக்காரி பிரச்னை”இணைப்பைத் துண்டித்தார் ராமன்.சிறிதுநேரம் நிலைகொள்ளாமல் தவித்தார் சந்திரன். பின் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்துப் பேசினார். அதன்பின் கல்லுாரி நிர்வாகத்திடம் பேசினார். பாபு கண்டுபிடித்த தில்லுமுல்லுகளை விளக்கிச் சொன்னார். பணமோசடி செய்த ஹாஸ்டல் நிர்வாகியைப் பெண் போலீசார் 'தக்க' முறையில் விசாரணை செய்தார்கள். உண்மை வெளியே வந்தது. பாபுவின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டாள். தவறு செய்த நிர்வாகி கைது செய்யப்பட்டாள். “என் அடியவர்களை எப்படியும் காப்பாற்றி விடுவேன்”“காப்பாற்றமட்டுமா செய்தீர்கள், தாயே? பாபு சிறையில் இருந்தபோது பிரம்ம முகூர்த்த நேரத்தில் அவருக்கு தரிசனம் தந்து அவர் மனதை அன்பால் நிரப்பி பாபுவின் இந்தப் பிறவி முடிந்தவுடன் அவர் உங்களுடன் ஒன்றிவிடுவார் என சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே”அன்னை முறுவலித்தாள். நான் பெருமூச்செறிந்தேன்.''பாபுவின் நிலையை இந்த பாவி அடைய இன்னும் எத்தனை ஆயிரம் பிறவிகள் எடுக்கவேண்டுமோ?”பதிலேதும் சொல்லாமல் மறைந்தாள் பராசக்தி.-தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com