உள்ளூர் செய்திகள்

கண்ணன் என்னும் மன்னன்! (13)

குகை வாசலில் கேட்ட குழந்தையின் அழுகுரல் அவ்வளவு பேரையும் தேக்கி நிறுத்தியது. ஆச்சரியமும், குழப்பமுமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அடர் வனம்! அதில் ஒரு குகை.... கொடிய மிருகங்கள் பதுங்கி வாழ்ந்திட மிகவே தோதான இடம். அப்படி ஒரு இடத்துக்குள் இருந்து அழுகுரல்...! அதுவும் குழந்தை அழுகுரல் கேட்டால் ஆச்சரியப்படாது இருக்க முடியுமா? அந்தக் குரல் எதனாலோ கண்ணனுக்கு ஒரு சிந்தனையை வரவழைத்தது. லேசாக ஒரு குறுநகையும் கண்ணன் அதரங்களைத் தொற்றிக் கொண்டது. அதைக் கண்ணனை ஒட்டி வந்தவர்களும் கவனித்தவர்களாக, ''பிரபு...'' என்றனர். கண்ணனும் அவர்களை ஏறிட்டான். ''நீங்கள் சிந்திப்பதைப் பார்த்தால், தங்கள் திருஷ்டாந்தத்துக்கு எல்லாம் புலனாகி விட்டது போலிருக்கிறதே?'' ''அப்படியா?'' ''இப்படிக் கேட்டால் எப்படி? குகைக்குள் குழந்தையின் அழுகுரல் என்பது விசித்திரம் அல்லவா?'' ''நானும் அப்படித்தான் எண்ணுகிறேன்...'' ''ஒருவேளை பூனைக்குட்டியாக இருக்குமோ?'' ''பூனைக்குட்டியா?'' ''ஆமாம். அதன் குரலும் குழந்தையின் அழுகுரல் போலவே இருக்கும்..'' அதற்குள் அழுகுரல் நின்று தாலாட்டும் பாடல் கேட்கத் தொடங்கியது. ''ஆராரோ.... ஆரிரரோ.... என் ஆரணங்கே தாலேலோ....! ஆனந்தமாய் இந்த தொட்டிலிலே தாலேலோ...! சீரான என் சின்னவனே தாலேலோ....! சில்லென்ற தென்றல் மிசை தெளிந்தவனே தாலேலோ...! நீ ஆட வந்ததிந்த மணிமாலை...! உன்னாலே ஒழிந்ததடா அரிமாவும்....!! மணிமாலை அது ஒளிமாலை... ஒப்பற்ற தம் தந்தை அணிவித்த இந்த மாலை...! பாடலில் இடம்பெற்ற மணிமாலை, அரிமா என்ற குறிப்பைக் கேட்டதும் கண்ணன் கூர்மையானான். கண்ணன் வேகமாக குகைக்குள் புகத் தொடங்கினான். அங்கே சமந்தகமணியால் பட்டப்பகல் போல வெளிச்சம் இருந்தது. குழந்தைக்கு தொட்டிலின் மேல் விளையாட்டுப் பொருளாக மணி தொங்கிக் கொண்டிருந்தது. குழந்தையை, அழகான இளம்பெண் ஆட்டிக் கொண்டிருந்தாள். கண்ணனின் அழகைக் கண்ட அவள் மெய் மறந்து போனாள். 'பரம திவ்யமாய், பட்டுக்கச்சம், அதன் துணை வஸ்திரம், கருநீல மேனி, பூக்காத தாமரை மொட்டு போல கண்கள், நெற்றியில் பிசிறில்லாத நாமம், சிரசின் மேல் குழல் கொண்டை, அதில் முளைத்தது போல மயில்தோகைக் கண்' என 32 சாமுத்ரிகா லட்சணமும் கொண்ட ஒரு இளைஞனை அவள் இதுவரை பார்த்ததே இல்லை. அவள் ஸ்தம்பித்துப் போனதைக் கண்ட கண்ணன், தன் விரல்களால் சொடுக்கி விழிப்படையச் செய்தான். ''நீங்கள் யார்?'' ''யாரா? அதிருக்கட்டும். முதலில் நீ யார்?'' ''நான் நான்...'' ''உம்.. சொல்... நீ ...?'' ''என் பெயர் ஜாம்பவதி. ஜாம்பவான் என்னும் பெரும் பலவானின் மகள்...'' ''இந்தக் குழந்தை?'' ''என் குழந்தையில்லை. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவன் என் சகோதரன் போன்றவன்'' என்று தயக்கத்தோடு பதில் அளித்தாள். பின் திரும்பவும், ''நீங்கள் யார் என்று கூறவில்லையே...?'' ''நான் யார் என்பதை விட, இந்த சமந்தகமணி இங்கு எப்படி வந்தது என்பது தான் இப்போது முக்கியம்.'' ''இது சமந்தகமணியா... அது தான் இப்படி ஒளி விடுகிறதா?'' ''ஆதித்தனின் அன்பளிப்பாயிற்றே... அவன் குணத்தை அப்படியே கொண்டிருக்கிறது!'' ''அப்படியானால், இது ஆதித்த பொருளா?'' ''ஆதித்த பொருள் மட்டுமா இது! என்னைப் பாதித்த பொருளும் கூட!'' ''நீங்கள் யார் என்றே கூறாமல் உங்களைப் பாதித்தது என்றால் எப்படி?'' ''பெண்ணே! இது எப்படி இங்கு வந்தது என்பதை முதலில் சொல்....'' ''இதை என் தந்தை தான் கொண்டு வந்தார். முன்னதாக இந்த வனத்தையே பாழ்படுத்திக் கொண்டிருந்த அரிமா(சிங்கம்) ஒன்றிடம் அதைக் கண்டாராம். இதன் ஒளி அவரைக் கவர்ந்து விட்டது. ஒரு மனிதனை விழுங்கி அவனிடம் பெற்றதாக இருக்க வேண்டும் என்று யூகித்தவர் அதனோடு போரிட்டுக் கொன்றார். அதன் பின் மணியை என் சகோதரனின் விளையாட்டுப் பொருளாக்கி விட்டார்.'' ''வேடிக்கை தான் போ.. இதற்காக ஒருவன் துவாரகையில் கடும் தவம் புரிந்தது தெரிந்தால், உன் தந்தை என்ன நினைப்பரோ! போகட்டும். இதைக் கண்டு பிடித்து எடுத்துச் செல்லவே இங்கு வந்தேன். எங்கே உன் தந்தை?'' ''என் தந்தை நித்ய கர்மங்களை முடிக்க அருவிக்கரைப்பக்கம் சென்றுள்ளார். அவரை எதற்கு கேட்கிறீர்கள்?'' ''அவரிடம் அனுமதி பெறத் தான்....'' ''முதலில் நீங்கள் யாரென்று கூறுங்கள்....'' ''நான்... நான்....'' - கண்ணன் வேண்டுமென்றே இழுத்திட, சற்று தொலைவில் இருந்த துவாரகை வாசிகள்,''அவர் தான் கிருஷ்ண பிரபு! துவாரகை மன்னன்! எங்கள் மனம் கவர்ந்த கண்ணன்! கோவிந்தன்! கோபாலன்!'' என்று ஆளுக்கொரு நாமத்தைக் கூறினர். அதைக் கேட்ட நொடி அவளிடம் ஒரு பிரமிப்பு. ''என்ன ஜாம்பவதி.. அப்படி பார்க்கிறாய்?'' ''நீங்கள் கிருஷ்ணப் பிரபுவா?'' ''பிரபுவாவது.... சக்கரவர்த்தியாவது... ஸ்ரீ கிருஷ்ணன்.. அவ்வளவு தான்...'' ''நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். வனத்தில் தவம் செய்யும் ஒரு ரிஷிக்கு சதா உங்கள் நினைப்பு தான். எப்போதும் கிருஷ்ணா கிருஷ்ணா என்பார். நானும் அப்படியே தியானிக்க பழகி விட்டேன்.....'' ''மிகவும் மகிழ்ச்சி... இப்போது சொல். உன் தந்தை வர நேரமாகுமா?'' ''ஆம்... அவர் அருவியில் குளித்து விட்டு, ராம நாம ஸ்மரணையில் ஆழ்ந்து விடுவார். அதே சமயம் அவருக்கு...'' - அவளிடம் ஏதோ ஒரு தயக்கம்! '' என்ன அவருக்கு?'' - கண்ணன் தூண்டினான். ''உங்களை அவருக்கு துளியும் பிடிக்காது. என் ராமனை விட உயர்வானவர் ஒருவரும் இல்லை என்பார். இந்த மாலையை நானே தந்து விடுகிறேன்'' ''இல்லை... அது அநீதியாகி விடும். உன் தந்தை வரட்டும். இந்த கிருஷ்ணனை விட, ராமன் எந்த அளவு பெரியவன் என்றும் அவரிடம் கேட்கிறேன்...'' - கண்ணன் பொய்யாக கோபத்தையும் காட்டினான். அப்போது ஜாம்பவான் வரும் சப்தம் கேட்டது! துவாரகை வாசிகளிடம் ஒரு விதிர்ப்பு...! - இன்னும் வருவான் இந்திரா சவுந்தர்ராஜன்