உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் 2 (3)

அர்ஜூனன் மகனாக பப்ருவாகனன் பிறந்த நிலையில், பப்ருவாகனனை பாண்டிய மன்னன் சித்ராங்கதனுக்கு முறைப்படி அக்னிபூர்வமாக தாரை வார்த்துக் கொடுத்து, சித்ராங்கதனின் வாரிசு சிக்கலை தீர்த்தவனாக அர்ஜூனன் தன் வனவாசத்தைத் தொடர்கிறான். இதன் தொடர்ச்சியில் அர்ஜூனனுக்கு ஏராளமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. பாவம் போக்கி புண்ணியம் சேர்க்கும் ஐந்து தீர்த்தங்களில் ஐந்து அப்சர கன்னியர்கள் ஒரு பிராமணன் சாபத்தால் முதலைகளாக கிடக்கின்றனர். அதில் குளிக்க இறங்குபவர்கள் தான் அவர்களின் உணவு.அந்த கன்னியரின் சாப நிவர்த்தி அர்ஜூனனின் வீரத்தால் ஏற்படுகிறது. அந்த கன்னியர் 'வர்க்கை, சவுரபேயி, சமீசி, புத்பதை, லதா' என்ற பெயருடைய குபேரனின் ஆசை நாயகிகள் ஆவர்.அர்ஜூனனின் வனவாச பயணம் அடுத்த கட்டமாக 'பிரபாச தீர்த்தம்' என்னும் புண்ணியப் பகுதியில் ஈடேறியது. இங்கே தான் 'கதன்' என்னும் யாதவன் அர்ஜூனனுக்கு நண்பனாகிறான். இவன் மூலம் பேரழகியான 'சுபத்ரை' பற்றி கேள்விப்படுகிறான். கிருஷ்ண, பலராமனின் சகோதரியான சுபத்ரையை 'ரைவதகபர்வதம்' என்னும் இடத்தில் ஒரு பெரிய உற்ஸவம் நடக்கும் சமயம் பார்த்து, அவள் அழகில் மனதைப் பறி கொடுக்கிறான். பின் கிருஷ்ணனிடமே தன் விருப்பத்தைக் கூறிட, கிருஷ்ணனும் சுபத்ரைக்கு அர்ஜூனனை விட மேலான கணவன் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து இருவருக்கும் திருமணம் நிகழ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்கிறான்.இதன்பின் அர்ஜூனனும், கிருஷ்ணனும் 'மாப்பிள்ளை மைத்துனன்' என்னும் உறவுக்குரியவர்களாகவும் ஆகின்றனர். இவர்களை மற்றவர்களும் 'கிருஷ்ணார் ஜூனர்கள்' என்று சேர்த்தே அழைக்கத் தொடங்குகின்றனர்.இந்த வனவாச யாத்திரையில் தான் அர்ஜூனன் இணையில்லாத குதிரைகள் பூட்டிய ஒரு ரதத்தையும், பலம் பொருந்திய எல்லா அஸ்திரங்களையும், பூட்டக்கூடிய வில்லையும், வற்றாத அம்புகள் கொண்ட அம்பறாத் தூளியையும் அக்னி தேவனிடம் இருந்து பரிசாகப் பெறுகிறான். கிருஷ்ணனும் அக்னி தேவனிடம் இருந்து பெரும் வல்லமை படைத்த சக்கரம் ஒன்றையும், எவரையும் வீழ்த்தி விடும் கதாயுதத்தையும் பெறுகிறான்.இவ்வாறு இவர்கள் இந்த இணையில்லா அஸ்திரங்களையும், காற்றினும் வேகமாகச் செல்ல முடிந்த குதிரைகள் பூட்டிய ரதத்தையும் அடையக் காரணம் 'சுவேதகி ராஜன்' என்பவனே! யார் இந்த சுவேதகி ராஜன்? இவனால் எப்படி கிருஷ்ணார்ஜூனர்கள் அக்னியிடம் அதிசயப் பரிசுகளை பெற்றனர் என்பதன் பின்னே ஒரு பெரும் கதையே ஒளிந்திருக்கிறது.சுவேதகி ராஜன் தேவலோகத்து இந்திரனுக்கு இணையான அரசனாவான். இவன் வேத சாஸ்திரங்களை உயிராகக் கருதியவன். அதனால், இவன் அரசாட்சி செய்த சமயத்தில், நாள்தோறும் வேதபாராயணம் முதல் யக்ஞங்கள் வரை அனைத்தையும் தவறாமல் செய்து வந்தான். இதனால், இவனைச் சுற்றி எப்போதும் வேத வித்தகர்களும், பிராமணர்களும் மிகுந்து காணப்பட்டனர். ஒரு சமயம், இவர்கள் அரசனிடம் இருந்து சற்று விலகி தீர்த்த யாத்திரை மேற்கொள்ள விரும்பினர். இதனால், அரசன் பக்கத்து நாட்டிலுள்ள பிராமணர்களை அழைத்து வந்து தன் நித்யவேள்வி கடமையைத் தொடர்ந்தான்.ஒரு கட்டத்தில் அவர்களும் தங்களுக்கென தங்கள் நாட்டில் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அதைச் செய்தாக வேண்டும். ஆகையால், நாங்கள் விடை பெறுகிறோம்,'' என்று விலகினர். இதனால் சுவேதகி ராஜனின் நித்ய வேள்விக்கு தடை உண்டானது. அதை எப்படியும் போக்க அவன் விரும்பினான். அப்போது அவன் மீது நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஆலோசனை கூறினர்.''தினம் தோறும் செய்யும் நித்ய வேள்வியை விட, நூறு வருஷம் தொடர் வேள்வி செய்த பலனைத் தரும் 'சத்ரயாகம்' நடத்தினால் நல்லது,'' என்று கூறினர். ஆனால், இந்த யாகத்தை நடத்த எந்த பிராமணனும் முன் வரவில்லை. அந்த பரமேஸ்வரனாகிய 'ருத்ரன்' என்னும் அம்சத்தாலேயே யாகம் முடியும் என்ற தகவல் மட்டும் கிடைத்தது. ருத்ரனை தன் வசப்படுத்த தவம் செய்யத் தொடங்கினான் மன்னன். 12 ஆண்டு தவம் செய்ததன் விளைவாக பரமேஸ்வரனும் காட்சியளித்து, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்க, யாகத்தை தாங்களே உடனிருந்து ஈடேற்றித் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.பரமேஸ்வரர் ஒரு நிபந்தனை விதித்தார். ''சத்ரயாகம் நடத்த அக்னி பெரிதும் துணை நிற்க வேண்டும். ஆகையால், அக்னி பகவானை நித்ய வேள்வியால் நெய் விட்டு வளர்த்து கொழுந்து விட்டு எரியச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அக்னி மிகவும் மகிழ்ச்சிஅடைவான். இதனை நீ பிரம்மச்சர்ய விரதத்தோடு பன்னிரண்டு ஆண்டுகள் செய்ய வேண்டும். ஒருநாள், ஒரு பொழுது, ஒரு நாழிகை அளவு கால கதி கூட இடைவெளியின்றி பசும் நெய்யால் நீ அக்னியை வளர்த்தால் அக்னிக்குப் பூரண திருப்தி உண்டாகும். அதற்குப் பிறகே யாகம் நடத்த நான் துணை செய்வேன்,'' என்று கூறி மறைந்தார்.சுவேதகி ராஜன் அடுத்த நொடியே அக்னி வளர்த்து தன் வேள்வியை தொடங்கி விட்டான். அவனே வேள்விக்கான அக்னி குண்டம் முன் அமர்ந்து நெய் விட்டு அக்னியை மட்டுமே துதி செய்து அக்னி வேள்வி புரிந்தான். இந்த வேளையில் இவனது மந்திரிகளும், உடன் பிறந்தவர்களும் ஆட்சிப் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.சுவேதகி ராஜனின் பிரம்மாண்ட தவ வேள்வியும், பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவெளியின்றி நடந்து முடிந்தது.இதனால், அக்னிதேவன் பெரும் மகிழ்வும், வலிமையும் கொண்டவனாக ஆனான். பரமேஸ்வரனும் பிரத்யட்சமாகி அவனைப் பாராட்டியதோடு சத்ரயாகம் நடத்த, தன் பிரதிநிதியாக துர்வாச மகரிஷியை அனுப்பி வைத்தார். இதற்குப் பிறகு சுவேதகி ராஜனின் 'சத்ர யாகம்' நல்ல முறையில் ஈடேறியது. இது சுவேதகி ராஜனுக்கு நித்ய சொர்க்கத்தில் வாழக் காரணமாகி விட்டது.ஆக மொத்தத்தில் 'சுவேதகி ராஜன்' என்பவன் வேள்விகளுக்கும், அக்னிக்கும் ஒரு இலக்கணம் போலாகி விட்டான். ஆனால், இதனாலும் ஒரு பின்விளைவு உருவானது. அது மிக வினோதமானதும் கூட..... என்ன அது?- தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்