தெரிந்த பாரதம், தெரியாத பார்த்திரம் - 2 (16)
எதிரில் தன் வடிவிலேயே நிற்கும் இந்திரன், வருணன், அக்னி, எமன் ஆகிய நால்வரையும் பார்த்து விக்கித்தான் நளன். அவர்கள் தங்களுக்குள் மர்மமாய் சிரித்தனர். பின் ''சுயம்வரத்திலும் நாங்கள் இதே ரூபத்தில் தான் தமயந்தி முன் தோன்ற உள்ளோம்!'' என்றனர்.நளன் முகம் வேகமாய் மாறியது.''தேவர்களே... இது தங்களுக்கு உகந்த செயல் தானா?''- என்று கேட்கவும் செய்தான்.''நளச் சக்கரவர்த்தி! சுயம்வரம் என்பதே அதில் பங்கு கொள்வோர் தங்கள் பிரதாபங்களைக் காட்டத் தான்! இப்படி நாங்கள் தோன்றுவது எங்கள் பிரதாபம்.... தமயந்தி உன்னை உளமாற நேசிப்பது சத்தியம் என்றால் அவள் எங்களில் நரனான உன்னைத் தன் மனம் வாக்கு மற்றும் பிரேமை உணர்வால் கண்டுபிடித்து மாலையிடட்டும். அப்படி அவள் எங்களைக் கடந்து உன்னைக் கண்டறிந்து மாலையிட்டு விட்டால் அதில் எங்களுக்கு யாதொரு ஆட்சேபமும் இல்லை. மாறாக, நாங்கள் உனக்கு எங்களின் மேலான வரங்களையும் தருவோம்,'' என்றான் இந்திரன்.நளனும் அதற்கு மேல் அவர்களை எதிர்த்து பேச முடியாதவனாகிப் போனான். சுயம்வர நாளும் வந்தது. விதர்ப்ப ராஜன் வீமனின் அரண்மனை கல்யாணக் களை பூண்டு அரசர் பெருமக்களால் சூழப் பெற்றது. எங்கு பார்த்தாலும் ரதங்களும், குதிரைகளுமே கண்ணில் பட்டன. தமயந்தியும் கையில் மாலையோடு தயாரானாள். அவள் மனதில் நளன் மட்டுமே நிரம்பியிருந்தான். அவைக்கு வந்த நளன் ஆசனத்தில் அமர்ந்தான். அவனையொட்டி இந்திரன், அக்னி, வருணன், எமன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். தமயந்தியின் பார்வைக்கு மட்டும் நளன் உருவில் காட்சியளித்தனர்.தமயந்தி அந்தக் காட்சியை கண்டு முதலில் கலங்கிப் போனாள். அந்த நொடியே தேவர்கள் தங்களின் மாயாசக்தியால் குழப்பம் ஏற்படுத்துவதை உணர்ந்து கொண்டாள். தமயந்தியின் பட்டறிவு தேவர்களுக்கான இலக்கணங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தது. அவர்களுக்கு வியர்க்காது, அவர்களாக விரும்பினால் அன்றி பசியும் எடுக்காது, தாகமும் அவர்களுக்கு ஏற்படாது. அவர்களின் மேனி மானிடர்களில் இருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும். அடுத்து அவர்களது நிழல் கீழே விழாது. அவள் இந்த தேவாம்சங்களை மனதிற்குள் எண்ணியபடி நின்றாள். வியர்த்தபடி தமயந்தியைத் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நளனைச் சரியாக இனம் கண்டு மாலை சூட்டினாள்.இந்திரன் அதைக் கண்டு மகிழவே செய்தான். அவை முன் தன் உண்மைத் தோற்றமுடன் தோன்றியவன் அனைவரும் பார்த்திட மணமக்களை வாழ்த்தினான். பின் தான் கூறியது போலவே, நளனுக்கு இரண்டு வரங்களை அளித்தான்.''நளச்சக்கரவர்த்தி... நீ யாகம் புரியும் போது தேவர்களை நேரில் காண முடிந்தவனாக இருப்பாய்! உன் பூவுலக வாழ்வு எப்படி அமைந்தாலும் அதன் முடிவு உனக்கு சொர்க்க பதவி தருவதாகவே இருக்கும்'' என்றான்.இந்திரனைத் தொடர்ந்த அக்னி நளன் விரும்பும் இடத்தில் தான் தோன்றுவேன் என்பதோடு அக்னிக்கு ஒப்பாக ஒளிரும் உலோகங்களை வழங்குவதாகக் கூறினான். அப்படியே தன் துணையின்றி சமைக்கும் ஆற்றலையும் தந்தான்.அடுத்து எமன், ''நீ தர்மத்தை உறுதியாக பின்பற்றும் மனவலிமையுடன் திகழ்வாய்'' என்றான்.வருணனோ, மணம் மிகுந்த மாலைகளை வழங்கியதோடு, குதிரைகளை ஆட்டிப் படைக்கும் அஸ்வ மந்திரங்களையும் கூறினான். விதர்ப்ப ராஜனான வீமனும், மற்றுமுள்ள அரசர் பெருமக்களும் இந்திரன், அக்னி, எமன், வருணன் உள்ளிட்ட நால்வரும் அளித்த வரங்களை எண்ணி ஆச்சரியமும், மகிழ்வும் கொண்டனர்.அனைவரின் முன்னிலையில் நளதமயந்தி திருமணம் விமரிசையாக நடந்தது.நளன், தமயந்தி வாழ்வு இனிதாகவே அமைந்தது.... அதே வேளையில், கலி என்பவன் வடிவில் விதி தன் விளையாட்டைத் தொடங்கியது. கலிபுருஷன், துவாபரன் என்பவர்கள் தமயந்தியின் சுயம்வரம் பற்றி கேள்வியுற்று அதில் பங்கேற்க வந்து கொண்டிருந்தனர். எதிரில் தேவர்கள் வந்ததைக் கண்டு நலம் விசாரித்தனர். தேவர்களின் மூலம் தமயந்தியின் திருமணம் முடிந்த விஷயத்தை அறிந்து கொண்டனர். துவாபரன் அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், கலிபுருஷனுக்கு மிகுந்த வருத்தம். இந்திரனிடம், ''தமயந்தியைத் தான் எப்பாடுபட்டாவது அடைந்தே தீருவேன்,'' என்றான்.''சரி எல்லாம் தான் முடிந்து விட்டதே!'' என்றான் எமன். ''உங்கள் வரையில் வேண்டுமானால், எல்லாம் முடிந்திருக்கலாம். நான் தமயந்தியை அடையாமல் திரும்ப மாட்டேன்'' என்று சொல்லிப் புறப்பட்டான்.இந்திரன் அதைக் கேட்டு வருந்தினான்.'கலிபுருஷனே! நாங்களும் உன் போலவே அவனை அடைய எண்ணினோம். சில சூழ்ச்சிகளும் செய்தோம். ஆனால், தமயந்தின் திடசித்தத்தால் அவளின் உண்மைக்காதல் வெற்றி பெற்று விட்டது. எங்கள் தந்திரம் அவள் முன் எடுபடாமல் போனது,'' என்றான்.'ஜெயிக்கும்படியாக சூழ்ச்சி புரிய உங்களுக்குத் தெரியவில்லை. நான் அப்படியில்லை. எப்படி ஜெயிக்கிறேன் என்று அமர உலகில் இருந்தபடியே பாருங்கள்...'' கலிபுருஷன் ஆவேசமாகப் புறப்பட்டான்.நளனின் அரண்மனையில் மறைந்திருந்து, கண்கொத்திப் பாம்பு போல சரியான தருணத்திற்காகக் காத்திருந்தான். தர்மம் தவறாதவனாக நளன் கடமைகளைச் சரிவரச் செய்து வந்தான்.நித்ய சந்தியாவந்தனம், விசேஷ தினங்களில் ஹோமம், எல்லா உயிர்கள் மீதும் அன்பு, சத்தியம், தர்மம் என வாழ்ந்த நளனை எந்த நிலையிலும் கலிபுருஷனால் பீடிக்க முடியவில்லை.நல்லதற்கு நேர் எதிரான கலிபுருஷனை மையமாகக் கொண்டே மாயை செயல்படுகிறது. அப்படிப்பட்ட அவனே, நளனைத் தமயந்தியிடம் இருந்து பிரிக்க 12 ஆண்டு வரை காத்திருக்க நேரிட்டது. இதற்குள் நளதமயந்திக்கு இந்திரசேனன் என்னும் புத்திரன், இந்திரசேனை என்னும் புத்திரி பிறந்து விட்டனர். ஒருநாள் கலிபுருஷனுக்கு நளனைப் பீடிக்க சந்தர்ப்பம் அமைந்தது. ஒழுக்கத்துடன் ஆசார சீலனாகவும், தர்மவானாகவும் வாழ்ந்த நளன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கால்களைக் கழுவினான். அப்போது ஒருகால் சரியாக கழுவப்படாமல் நீசம் படிந்த நிலையில் இருந்தது. அதைக் கவனிக்காமல் நளன் சந்தியாவந்தனம் செய்ய ஆரம்பித்தான். கலிபுருஷனும் இதுவே தருணம் என்று அவனுக்குள் புகுந்து கொண்டான்.- தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்