தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 11
மார்க்கண்டேயர்தர்மன் புறப்படவும் நகுலனும் சகாதேவனும் தாங்களும் வருவதாகக் கூறினர். அப்போது அர்ஜுனன் நீராடச் சென்றிருந்ததால் அவனுக்கு பீமன் குறித்த வருத்தத்திற்கும் நோக்கத்திற்கும் இடமேயில்லாமல் போய் விட்டது.நகுல சகாதேவன் இருவரும் திரவுபதிக்கு காவலாக இருப்பதே அழகு எனக் கூறி விட்டு பீமனைத் தேடிப் புறப்பட்டான் தர்மன். நாலாபுறமும் பார்த்தபடியே சென்றதில் நகுஷனாகிய மலைப்பாம்பின் தடயங்களை வைத்தே தர்மனும் குகைக்குள் நுழைந்தான். அவன் கண்ட காட்சி நிலை குலைய வைத்தது. பாம்பின் பிடிக்குள் பீமன் இருக்க அந்த பாம்பும் அவனை விழுங்கத் தயாராவது போல வாயைப் பிளந்து நின்றிருந்தது. அதைக் கண்ட தர்மன் சுதாரித்தவனாக வில்லில் அம்பினைப் பூட்டி அதை பாம்பின் வாயைக் குறி வைத்து எய்தான். ஆனால் பாம்போ அதை விழுங்கி விட்டு, ''யாரடா மானிடா நீ?'' என இடிக்குரலில் கேட்டது. பீமனும் தர்மனைக் கண்டதும், ''அண்ணா வந்து விட்டாயா? இதன் பிடியில் இருந்து காப்பாற்று. அகத்தியரின் சாபத்துக்கு ஆளான நகுஷன் என்ற நாகலோகவாசி தான் இந்த பாம்பு! இதன் கேள்விகளுக்கு சரியான விடையளித்தால் என்னை விடுவிக்கும்'' என அந்த நிலையிலும் தர்மனிடம் சுருக்கமாக தன் நிலையைக் கூறினான் பீமன். ''இவன் உன் அண்ணனா... அப்படியானால் தர்மனா'' என பாம்பும் கேட்டது.''ஆம்... நானே தர்மன்! இது என்ன அநீதி? உன் போன்ற பாம்புகள் புசிக்கத் தான் காட்டில் ஆயிரமாயிரம் ஆடு, மாடுகள் உள்ளனவே... அதை விட்டு ஒரு நரனை உண்ண நினைப்பது சரியா? உனக்கு எத்தனை ஆடுமாடுகள் வேண்டும் சொல்! வேட்டையாடி வருகிறேன்'' தர்மன் கர்ஜித்தான்.''விலங்குகளைத் தின்றால் என் பசி அடங்காது. சபிக்கப்பட்ட எனக்கு நரமாமிசமே உகந்த உணவு. என்னைக் கண்ணில் காணும் நரர்களும் தங்கள் உடல் சக்தி அவ்வளவையும் இழந்து விடுவர். நீயும் கூட என் முன்னால் சக்தியை இழந்து விட்டவனே!'' என்ற பாம்பு சீறியது. தர்மனுக்கும் அப்போது தான், தன் உடல் சக்தியை இழப்பது தெரிய வந்தது. ''பாம்பே... இது அநீதி! முன்பே சபிக்கப்பட்டிருக்கும் நீ தொடர்ந்து பாவத்தை செய்யலாமா? உனக்கான விமோசனத்திற்காக சிந்திக்காமல் இப்படியா நடப்பாய்?''''விமோசனம் குறித்த எண்ணம் இருப்பதாலேயே உன் தம்பியை நான் விழுங்கவில்லை. உன்னிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்''''அப்படியானால் உன் விமோசனத்திற்கு வழி?''''என் கேள்விகளுக்கு எவன் ஒருவன் சரியான விடை கூறுகிறானோ அவனாலேயே விமோசனம் என்பது அகத்தியர் கட்டளை. அவ்வாறு கூற இயலாதோர் உணவாகி தீர வேண்டும். அதுவே விதி''''அப்படியானால் உன் கேள்விகளைக் கேள். பதிலைக் கூறினால் என்னை மட்டுமல்ல, என் தம்பி பீமனையும் விட்டு விட வேண்டும்''''நீ முதலில் சரியான பதிலைக் கூறி உன்னைக் காப்பாற்றிக் கொள்''''சரி...கேள்'''' எவன் பிராமணன் ஆகிறான்?''''தான் கடவுளின் படைப்பு என்பதை உணர்வதோடு பிரம்மம் எப்படிப்பட்டது என்பதை வேதங்கள், அதன் நெறிமுறைகளால் எவன் உணர்கிறானோ அவனே பிராமணன்''''அப்படியானால் பிராமண குலத்தில் பிறப்பவன் பிராமணன் இல்லையா?'' ''அவன் அரை பிராமணனே! வேதம் கற்று அதன்படி நடக்காவிட்டால் அவன் சாமானியனே!''''அப்படியானால் பிறப்பில் பிராமணன் அல்லாத ஒருவன் பிராமணனாக முடியாதா?''''வேதம் கற்று அதன் நெறிப்படி நடப்பவர் யாவரும் பிராமணரே! அப்படி நடக்காதவர் பிராமணராக பிறந்தாலும் பிராமணர் இல்லை''''சரி... இந்த உலகில் அறியத்தக்கது எது?''''எது காலத்தை கடந்து நிற்கிறதோ... எது அளவிட முடியாததோ... எது சுக, துக்கம் என்னும் இரண்டும் இல்லாததோ... எது மனிதனை திரும்ப பிறக்க விடாதபடி செய்ய வல்லதோ... அதுவே அறியத்தக்கது''''அது எது''''கடவுளின் திருவடி''''அற்புதம். ஆனால் இப்போது நான் கேட்கும் கேள்விக்கு உன்னால் சரியான பதிலை நிச்சயம் கூற முடியாது''''முதலில் கேள்... பிறகு முடிவெடு''''சத்தியம் பெரிதா... தர்மம் பெரிதா''''இதற்கு பதில் கூறும் முன் உன்னை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அனுமதிப்பாயா''''போட்டி உனக்கே... எனக்கல்ல''''போட்டியை நடத்துபவருக்கு விடை தெரிவது அவசியமல்லவா''''சரியான விடைகளை நன்கறிவேன்''''விடை தெரிந்த நிலையில் என்னை சோதிப்பதேன்''''அகத்தியர் விடையறிந்த ஒருவனாலேயே விமோசனம் என கூறி விட்டாரே... அதனால் தான்''''அப்படியானால் அது தானே இங்கே சத்தியம்''''ஆம்... அதிலென்ன சந்தேகம்''''அந்த வகையில் போட்டியை நடத்தும் உனக்கு சத்தியம் பெரிது. சரியான விடையை சொல்வதால் சாபத்தில் இருந்து விடுபடுவாய். அவ்வகையில் என்னைப் பொறுத்தவரை உன்னை விடுவிக்கும் தர்மமே பெரிது''மொத்தத்தில் இரண்டும் இருக்கும் இடத்திற்கேற்ப பெரியவையே''தர்மன் இப்படி கேள்வி கேட்டு அதன் மூலமாகவே கேள்விக்கு பதிலைக் கூறவும் அங்கே நகுஷனின் பாம்பு சரீரம் நீங்கப் பெற்று பீமனும் விடுபட்டான். நகுஷனும் நாக வம்சத்தவனாக இருந்த போதிலும் மானிட வடிவில் கிரீட குண்டலங்களோடு காட்சி தந்து பீமனையும், தர்மனையும் வணங்கியவனாக ''நன்றி தர்மா! நன்றி பீமா! உங்களால் விமோசனம் பெற்றேன். என் ஆசி உங்களுக்கு என்றும் உரியது. உங்கள் வனவாசம் உங்களை புடம் போட்ட தங்கமாக மாற்றியுள்ளது. உங்களுக்கு இன்னும் மேலான அனுபவங்கள் காத்திருக்கின்றன'' என கூறி விடை பெற்றான். பீமனும், தர்மனும் சோதனையில் இருந்து மீண்டவர்களாக தங்களின் இருப்பிடத்தை அடைந்தனர். பின் பீமனுக்கு நேரிட்ட ஆபத்தை தர்மன் கூற அனைவரும் வியந்தனர். சில காலத்திற்குப் பிறகு அந்த துவைத வனத்தில் இருந்து அடுத்துள்ள காம்யக வனம் நோக்கி பாண்டவர்கள் திரவுபதியுடன் புறப்பட்டனர். அங்கு ஒரு அருவிக்கு அருகில் குடில் ஒன்றை அமைத்து சில காலம் தங்க முடிவெடுத்தனர். அந்த நேரம் அந்த அருவிக் கரைக்கு ஸ்ரீகிருஷ்ணர் தன் பத்தினி சத்தியபாமாவுடன் வந்திருந்தான். ஒரு ஏகாந்தப் பயணமாக குதிரை பூட்டிய தேரில் வந்த கிருஷ்ணன் பாண்டவர்கள் அருவியில் நீராடுவதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டான். குறிப்பாக அர்ஜுனன் கிருஷ்ணனை நெருங்கிச் சென்று கட்டித் தழுவி மகிழ்ந்தான். திரவுபதியும் சத்திய பாமாவிடம் அன்பை பரிமாறிக் கொண்டாள்.''கிருஷ்ணா... உன்னை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதிலும் சத்தியபாமாவோடு வந்திருப்பது எங்களுக்கு கனவு போல உள்ளது'' என்றான் தர்மன்.''காம்யவனத்து அருவிக்கு ஆகாச கங்கை என்றும் பெயருண்டு. இதில் நீராடுவது கங்கையில் ஆயிரம் முறை நீராடுவதற்கு சமம். பல முனிவர்களும், சிரேஷ்டர்களும் இங்கு வருவர்'' என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லும் போதே ஈசனால் மிருத்யுவான எமனிடம் இருந்து காப்பாற்றப்பட்ட 'மார்க்கண்டேய மகரிஷி' அங்கு நீராட வந்தார். அவரைக் கண்ட கிருஷ்ணனும், ''தர்மா... நீயும் உன் சகோதரர்களும் பாக்கியசாலிகள். உங்களுக்கு இப்போது பெரும் மகரிஷியின் ஆசி கிடைக்கப் போகிறது. கூடவே அரிய பல செய்திகளும் கிடைக்கப் போகின்றன'' என்று பீடிகை போட்டான்.-தொடரும்இந்திரா செளந்தர்ராஜன்