தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -2 (7)
மயன் என்னும் தேவலோகச் சிற்பி பாண்டவர்களுக்கான காண்டவ பிரஸ்தத்தில் தன் சாதுர்யத்தைக் காட்டி உருவாக்கிய அற்புத சபையை தர்மரிடம் ஒப்படைத்தான். கூடவே மகாபலம் பொருந்திய கதை என்னும் கதாயுதத்தை பீமனுக்கும், அற்புதச் சங்கு ஒன்றை அர்ஜூனனுக்கும் பரிசாக வழங்கி விட்டு விடை பெற்றுக் கொண்டான்.இதன் பிறகு பாண்டவர்களின் மதிப்பு உலகளவில் உச்சத்தைத் தொட்டது. துரியோதனனும் அவன் சகாக்களும் மனம் புழுங்கினார்கள். அழித்து ஒழித்து விட எண்ணியவர்கள், அதற்கு நேர்மாறாக ஒரு கம்பீரமான வாழ்க்கை வாழும் போது பொறாமை தோன்றுவது இயற்கை தானே!இப்படி ஒரு சூழலில் தான் பாண்டவர்கள் ராஜசூய யாகம் செய்யும் நிலை உருவானது. எவனொருவன் ராஜசூய யாகம் செய்கிறானோ அவனே உலகில் நிகரற்ற அரசனாவான். மற்ற நாட்டவரும் அரசர்களும் இவனுக்கு கட்டுப்பட்டவர்களாவர். அதற்கு அத்தாட்சியாக ஆண்டிற்கு ஒருமுறை கப்பம் கட்ட வேண்டும். தவறினால் அந்த அரசனைக் கொன்று விடவோ, சிறையில் அடைக்கவோ செய்யலாம். வேறு ஒரு அரசனை யாகம் நடத்திய சக்கரவர்த்தி நியமித்துக் கொள்ளலாம்.இது தவிர, பாண்டவர்களின் தந்தையான பாண்டு, எமலோகத்தில் இருந்து சொர்க்கலோகம் செல்லவும் இந்த யாகம் நடத்த வேண்டியிருந்தது. எல்லா அரசர்களிடமும் யாகம் நடத்துவதை தெரிவித்து சம்மதம் பெற்று வர அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும் தயாராயினர். சம்மதிக்க மறுப்பவர்களை போரிட்டு அடக்கி சம்மதிக்க வைக்கலாம். இதன் பொருட்டு அர்ஜூனன் குபேரனுக்குரிய வடதிசை நோக்கி பயணம் தொடங்கினான். அக்னிதேவன் வழங்கிய ரதத்தில், அவன் வழங்கிய வற்றாத அம்புகள் தோன்றும் அம்புறாத்தூளியோடும், மயன் வழங்கிய வெற்றிச் சங்குடனும் புறப்பட்டான்.பீமன் கிழக்கு நோக்கி புறப்பட்டான். இவனும் மயன் வழங்கிய ஆயிரம் யானை பலம் கொண்ட கதாயுதத்துடன் புறப்பட்டான். தெற்கு நோக்கி சகாதேவனும், மேற்கு நோக்கி நகுலனும் சென்றனர். இதில் சகாதேவனுக்கே உரிய கணித அறிவு(ஜோதிடம்) அவனுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. தருணம் அறிந்து நாம் ஒரு செயலைச் செய்யும் போது அது வெற்றி பெற்றே தீரும் என்பது நியதி. எப்படி மேல் நோக்கி வீசப்படும் கல்லானது எறிந்த வேகத்திற்கு ஏற்ப கீழ் நோக்கி திரும்ப வருகிறதோ அதைப் போன்ற ஒரு புவிசார் விஷயம் இது. இதை சகாதேவன் அறிந்து வைத்திருந்தான். பொழுதுகளில் எப்படி இரவும், பகலும் இருக்கிறதோ அப்படியே செயல்பாடுகளில் வெற்றிக்குரியது, அதற்கு எதிரானது என்னும் இரண்டு உண்டு. அதே சமயம், நாம் இரவைக் கழிக்கையில் வெளிச்சத்தை நெருப்பு கொண்டு உருவாக்கி கொள்கிறோம். பகல் பொழுதில் தேவையின் பொருட்டு மறைவை உருவாக்கி நிழலை ஏற்படுத்துகிறோம். இதை எல்லாம் அமைதியாக அமர்ந்து சிந்தித்தால் அழுத்தமாகவே புரிந்து கொள்ளலாம். இதில் நட்சத்திரங்கள் குறித்த அறிவு நமக்கு சேரும் போது, புரிதல் திறன் மேலும் பலமாகும். நட்சத்திரம் என்றால் 'ஜொலித்தல்' என்று பொருள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நட்சத்திரத்தின் ஜொலிப்போடு இருப்பவரே... அதன் ஜொலிப்புத் திறன் தான் வெற்றி! அதற்கு மாறானதெல்லாம் தோல்வி. எவ்வளவு தூரம் ஜொலிக்கிறது? எப்போது அது மறைவுக்கு உள்ளாகிறது என்பதை அறிந்து கொள்ள கணித அறிவு வேண்டும். அந்த அளவில் சகாதேவன் ஒரு விஞ்ஞானியாக திகழ்ந்தான். தெற்கு நோக்கி பயணித்த சகாதேவன், தன் புத்தியைப் பயன்படுத்தி, வெற்றி தரும் நேரத்தில் அரசர்களைச் சந்தித்தான். தர்மர் நடத்தவிருக்கும் ராஜசூயம் யாகம் பற்றி கூறியதுமே, அத்தனை பேரும் கப்பம் செலுத்த சம்மதித்தார்கள். அவர்களில் பாண்டியன் சித்ராங்கதன் முதன்மையானவன்.மேற்கு நோக்கி சென்ற நகுலன் அஸ்திரம் குறித்த அறிவில் ஞானியாக இருந்தான். அஸ்திரம் என்றால், 'கோடானுகோடி சக்தி அணுக்களின் சேர்க்கை' என்று பொருள். இந்த சக்தி, பஞ்சபூதங்களில் இருந்து உருவாவதோடு, அதன் துணையோடு செயலாற்றுகிறது. எந்த அஸ்திரத்தைப் போட்டால் எது அழியும் என்பதை நகுலன் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அஸ்திரம் என்பது ஆயுதமாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. அதை சொற்களாலும் உருவாக்க முடியும். நகுலன் சிவந்த நிறமுடைய மக்கள் வசிக்கும் பாஹ்லீகர்கள் (ஐரோப்பியர்களாக இருக்கலாம்) அரசனிடம் சென்று, அஸ்வமேத யாகம் புரிவதால் உலகுக்கே நன்மை விளையும். மழை நிரம்ப பெய்யும் என்பதை தெரிவித்தான். அந்த அரசன் நகுலனிடம் கப்பம் அளித்ததோடு, ஒரு கப்பல் நிறைய தேக்கு, செம்மரங்களையும் வாரி வழங்கினான்.பீமன் கிழக்கு திசையில் கதாயுதத்தோடு புறப்பட்டான். ஆலமரத்தையே பிடுங்கி எறிந்திடும் வீரன் என்பதால் அவனுடைய பலமே காரியத்தை சுலபமாக்கி விட்டது. அவன் சந்தித்த அரசர் அனைவருமே கப்பம் கட்ட சம்மதித்தனர்.அர்ஜூனனின் வடக்கு நோக்கிய பயணம் நெடியதாக இருந்தது. வியாசரின் குறிப்புகளில் இருந்து அன்று இருந்த நாடு, மக்கள், இனம் குறித்து அறிய முடிகிறது. அர்ஜூனன் அக்னி அளித்த ரதத்தில் ஏறிக் கொண்டு அந்தர்க்கிரி, பஹிர்க்கிரி, உபகிரி என்னும் மலைநாடுகளை வென்றான். பின் உலூக தேசம் சென்று பிருகந்தன் என்னும் அரசனோடு போரிட்டு பணிய வைத்தான். பின் கிரீடி, பஞ்ச கணம் என பயணம் செய்தான். பவுரவ அரசன் விஷ்வகசுவையும், உற்சவ சங்கேதர்கள் எனப்படும் ஏழு கூட்டத்தாரையும் வென்றான். இதன்பின் திரிகர்த்தர், தார்வர், கோகநதர் என்னும் இனத்தார்களை சந்தித்து கப்பம் பெற்றான். உரகாபுரி அரசன் ரோஷமான் என்பவனை அடக்கினான்.சோழ, சிம்ம, தரத, காம்போஜ, தஸ்யுக் ஆகிய தேசங்களை எல்லாம் வென்று ரிஷிக தேசத்தை (ரஷ்யாவாக இருக்கலாம்) அடைந்தான். ரிஷிகர்கள் முதலில் பணிய மறுத்தனர். பின் போரிட்டுப் பணிய வைத்தான். இங்கே கிளியின் வயிற்று வர்ணமும், மயிலின் வர்ணமும் கொண்ட குதிரைகளே அர்ஜூனனுக்குக் கப்பமாக கிடைத்தன. - தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்