உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (16)

கிருஷ்ணரையும், பலராமரையும் பார்த்த குந்திக்கும் பாண்டவர்களுக்கும் அதிர்ச்சி.... அதே சமயம் மகிழ்ச்சி. பாண்டவர்களைத் தொடர்ந்து வந்திருந்த திருஷ்டத்துய்மனும் ஒளிந்து கொண்டு குடிசைக்குள் நடப்பதை காணத் தொடங்குகிறான். கிருஷ்ணர் குந்தியை வணங்கி,''என்ன அத்தை... நலமா?'' என்று கேட்க, ''எங்களை எப்படி அடையாளம் கண்டீர்கள்?'' என்று கேட்கிறார் தர்மர். ''உங்களை நாங்கள் உணர்ந்தது போல, பிறர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் இந்த பிராமண வேடம் அவ்வளவு அழகாக உங்கள் ஐவருக்கும் பொருந்தியுள்ளது'' என்றார் பலராமர்.அர்ஜூனன் ஏற்கனவே கிருஷ்ணன் பற்றி, துரோணர் சொல்லிக் கேட்டிருக்கிறான். மகாசக்தி மிகுந்த அக்னி அஸ்திரத்தை அர்ஜூனனுக்கு துரோணர் தந்தபோது, அவனைப் புகழ்ந்து பலவாறு பேசியிருந்தார்.'யாதவ தலைவனான கிருஷ்ணனை நீ பார்க்கும்போது கெட்டியாக பிடித்துக் கொள். அவன் தோற்றத்தில் தான் அரசன். ஞானக்கண் கொண்டு பார்க்க முடிந்தவர்க்கு அவன் பரந்தாமன். இந்த கிருஷ்ண தோற்றம் ஒரு அவதாரம். மறந்து விடாதே!'' என்று அவர் அவனிடம் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.அந்த ஞாபகத்துடன் கிருஷ்ணன் அருகில் சென்றவன், தீர்க்கமான பார்வையுடன், ''பரந்தாமனுக்கு என் வந்தனங்கள்'' என்றான். கிருஷ்ணனும் தழுவிக் கொண்டான். இந்த தழுவலில் தொடங்கிய நட்பு, பாரத காலம் முழுக்க தொடர்ந்தது. திரவுபதியும் கிருஷ்ணனை வணங்கினாள். கிருஷ்ணனும் ஆசிர்வதித்தார். அப்படியே, ''திரவுபதி ஒருவகையில் நீ எனக்கு சகோதரி. நான் உனக்கு அண்ணன். உனது பிறப்பின் போது உனக்கு தேவர்கள் சூட்டிய பெயர் என்ன தெரியுமா?'' என்று கேட்க திரவுதியும், ''கிருஷ்ணை தானே'' என்று கேட்டாள். ''கரிய கருப்பனான நான் கிருஷ்ணன். கருப்பியான நீ கிருஷ்ணை! ஆனால், தீயில் பூத்ததால் பொன்னிறப் பொலிவோடு திகழ்கிறாய்'' என்றான் கிருஷ்ணன். ''இப்பிறப்பில் உங்களை நான் அண்ணனாக அடைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் அண்ணா'' என்றாள் திரவுபதி. ஒருவரோடொருவர் பேசி மகிழ்வதை ஒளிந்து பார்த்த திருஷ்டத்துய்மனுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் சகோதரி சேர வேண்டியவனிடம் தான் சேர்ந்திருக்கிறாள். அர்ஜூனன் மணக்க வேண்டும் என்பது தானே துருபதனுக்கும் விருப்பம்! அந்த விருப்பம் ஈடேறி விட்டது என உணர்ந்தான்.அப்போது குந்தி கிருஷ்ணனிடம், ''கிருஷ்ணா.... சரியான நேரத்தில் தான் நீ வந்திருக்கிறாய். இங்கே இப்போது ஒரு குழப்பமான சூழல் உருவாகி விட்டது. நீ தான் அதை தீர்க்க வேண்டும்'' என்றாள்.''என்ன குழப்பம் அத்தை?'' ''திரவுபதியோடு என் புத்திரர்கள் ஒன்றாக வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி வந்த நிலையில் தர்மன் என்னிடம் இன்று புதுவித பிட்சையுடன் வந்திருக்கிறோம் என்றான். அவன் பிட்சை என்று குறிப்பிட்டது திரவுபதியை... நானோ ஐவருமாக அதை புசியுங்கள் என்று கூறிவிட்டேன்''''புரிகிறது அத்தை.... திரவுபதியோ ஒருத்தி! உண்ணும் உணவுமல்ல அவள்.... பாகம் போட்டு பிரித்திட....அதே சமயம் சொன்ன சொல்லும் தவறி விடக் கூடாது என்று விரும்புகிறாய்...'' ''ஆம்... என் வாக்கு கூட பிசகலாம். தர்மன் வாக்கு தவறவே கூடாது. திரவுபதியை பிட்சையாக கருதுவது தர்மமா கண்ணா?''குந்தி கேட்டாள்.''தாயே.... இதற்காக வருந்தத் தேவையில்லை. திரவுபதியை பந்தயப் பொருள் போல, வென்றே அழைத்து வந்திருக்கிறேன். அதனால், 'பிட்சை' என தர்மரண்ணா கூறியது நாப்பிசகு அல்ல'' என்றான் அர்ஜூனன்.''அர்ஜூனா... உன் கோணம் ஒரு விதத்தில் சரிதான். ஆனால், திரவுபதி யோனி வழி பிறந்த மானிடப் பிறப்பல்ல. யாகத்தீயில் வந்தவள். தெய்வீகத் தொடர்பு இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. அவளை பிட்சை என்பது எப்படி சரி?'' - இதை பலராமர் கேட்டார். அங்கே சர்ச்சை ஆரம்பமானது. ''பிட்சை என்றாலும் சரி- இல்லாவிட்டாலும் சரி. திரவுபதி அர்ஜூனனால் அடையப்பட்டவள். எனவே, அவனே அவளுக்கு கணவன்'' என்றான் பீமன். அர்ஜூனனோ அதைக் கேட்டு திகைத்தான்.'' என் சகோதரர்கள் நீங்கள் இருக்க எனக்கு திருமணமா? நடக்காது... நான் வீரப்பரிசாக அடைந்த திரவுபதியின் விருப்பமே என் விருப்பம்'' என்றவன் திரவுபதியிடம், ''நங்கையே... நீ அபூர்வமானவள். உன்னை அடிமையாக கருதுவது தவறு. உன் விருப்பத்தைச் சொல் '' என்றான்.திரவுபதியோ அதிர்ச்சி அடைந்தாள். ''சுயம்வரத்தில் மாலையிட்ட போதே உங்களுக்கு உரியவளாகி விட்டேன். எனக்கென தனி விருப்பமே கிடையாது'' என்றாள்.''அப்படியானால் நீ தர்மண்ணாவை மணந்து கொள். மூத்தவரான அவருக்கே முதலில் மணமாக வேண்டும்'' என்றான் அர்ஜூனன்.''அர்ஜூனா.. நான் 'பிட்சை' என்று சொன்னேன். தாயோ புசிக்கச் சொல்லி விட்டாள். நாங்கள் இருவர் சொன்ன சொல்லும் பொய்யாவது பாவமாகி விடும். தவறோ சரியோ... சொன்ன சொல் நின்றாக வேண்டும். அதன்படி, எனக்கு மட்டுமல்ல! ஐவருக்கும் உரியவளே திரவுபதி'' என்றார் தர்மர்.''தர்மபுத்திரரே.... இனி இதில் மாறுபாடில்லை. அர்ஜூனனும், அண்ணனான உமது சொல்லை வீண்பேச்சாகவோ, இல்லை... அவசரப்பேச்சாகவோ, சராசரி மனிதர்களின் பேச்சு போல ஆக விடமாட்டான். எனவே, அர்ஜூனனால் சுயம்வரத்தில் வெல்லப்பட்ட திரவுபதி ஐவர்க்குமே உரியவளாகிறாள். நீங்கள் தோற்றத்தில் ஐவராக தெரியலாம். ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் மற்ற நால்வரும் நீக்கமற இருப்பதால், உங்களை ஒருவராக கருதுவதில் தவறில்லை! அத்தை... நீயும் குழம்பாதே. திரவுபதி வந்த வேளை வெற்றிப் பொழுதாக அமையட்டும்,'' என்று கூறிய கிருஷ்ணனும் அதை ஆமோதித்த பலராமரும் விடைபெற்றனர்.திரவுபதியும் பாண்டவர்களின் கால்களில் விழுந்து வணங்கினாள். இதை கவனித்த திருஷ்டத்துய்மன் அரண்மனைக்குச் சென்று பார்த்ததை அப்படியே கூறிட, துருபதனிடம் திகைப்பு. ''தந்தையே....ஏன் மவுனமாகி விட்டீர்?''''எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அர்ஜூனனே திரவுபதிக்கு மணாளனாக வேண்டும் என விரும்பினேன். என் விருப்பப்படியே நடந்து முடிந்தது. ஆனால், என் முடிவு இப்படி ஒரு பெரும் சஞ்சலத்தை தரும் என எதிர்பார்க்கவில்லை'' துருபதன் கலங்கினான். பாவம்... அவனுக்கு உண்மையில் திரவுபதி யாரென்பது அவனுக்குத் தெரியாது. உண்மையில் அவள் யார்?- தொடரும்இந்திரா சவுந்தரராஜன்