தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (17)
பாண்டவர்களைப் பின்தொடர்ந்து சென்று அங்கு நடந்ததை எல்லாம் பார்த்தும், காதாரக் கேட்டும் திரும்பியிருந்த திருஷ்டத்துய்மன், தந்தையான துருபதனிடம் அவ்வளவையும் கூறிய நிலையில் துருபதனிடம் பெரும் குழப்பம். தன்மகளாகிய திரவுபதியை சுயம்வரத்தில் வெற்றி கொண்டவன் பிராமண வேடத்தில் இருந்த அர்ஜூனன்! அம்மட்டில், தான் எதிர்பார்த்ததும் அர்ஜூனனையே... ஆனால், அதே அர்ஜூனன் திரவுபதியை தன் சகோதரர்கள் நால்வருக்கும் கூட மனைவியாக இருக்க எப்படி சம்மதிக்கலாம்?அவனைக் கூட விட்டுவிடுவோம்......திரவுபதி இதற்கு எப்படி ஒப்புக் கொள்வாள்? உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்காதா? துருபதனுக்குள் இப்படியாக பல கேள்விகள். இப்படியே புழுங்கிக் கொண்டிருந்தால் அதனால் பயனில்லை. நாமே நேரில் அவர்களோடு பேசி இந்த குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டும் என்கிற முடிவுக்கு வரும் துருபதன், திருஷ்டத்துய்மனிடம் அவர்களை அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்து வருமாறு கூறுகிறான்.திருஷ்டத்துய்மனும் அவ்வாறே செய்கிறான். குயவனின் குடிசையில் தங்கியிருந்தவர்கள் முன் சென்று, பாண்டவர்களையும் குறிப்பாக குந்தியையும் வணங்கும் துய்மன், திரவுபதியோடு அரண்மனைக்கு வரும்படி வேண்டுகிறான். அத்துடன், அவர்கள் யார் என்பது தெரிந்து விட்டதையும், துருபதன் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் கூறியே அவர்களை அழைத்துச் செல்கிறான். அவர்களும் அரண்மனையை அடைந்திட, துருபதனே அவர்களை எதிர்கொண்டு வரவேற்று, அவர்களை தன் அரண்மனையில் விருந்தினர்களாக தங்கிடப் வேண்டுகிறான். பின், அவர்களுக்கு விருந்துஉபச்சாரம் செய்து முடித்த நிலையில் அர்ஜூனனுக்கும் திரவுபதிக்கும் அரண்மனையில் அக்னி வளர்த்து முறைப்படி திருமணம் செய்து தருவது பற்றி பேச்செடுக்கவும், தர்மர், ''திரவுபதி அர்ஜூனனுக்கு மட்டுமானவள் அல்ல. எங்கள் ஐவருக்கும் அவளே பத்தினி,'' என்கிறார்.அந்த பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த துருபதனும் தர்மரிடம், ''இது அடுக்குமா? நியாயமா? இதைக் கேள்விப்படும் ஊர் சிரிக்காதா?'' என்றெல்லாம் திருப்பிக் கேட்கிறான். தர்மபுத்திரரோ, ''என் வாக்கினால் தான் இப்படி ஆகிவிட்டது. நான் பொய் சொல்பவனல்ல. என் தாயும், திரவுபதி ஐவர்க்குமானவள் என்னும் பொருளில் தான் பேசினாள். எனவே, என் வாக்கும் சரி.. என் தாயின் வாக்கும் சரி.. பொய்யாகி விடக்கூடாது. இதுவரை எங்கள் வாக்கு பிசகியதில்லை. அது தர்மத்துக்கு எதிரானதை பேசினதுமில்லை. இனியும் அது பேசப்போவதில்லை,'' என்கிறார்.''அப்படியானால் ஒரு பெண் ஐவர்க்கு பத்தினியாவது என்பது தர்மம் சார்ந்ததா?'' என்ற துருபதனின் கேள்விக்கு, ''தர்மசங்கடமான கேள்வி. ஆனால், எங்கள் வரையில் இது தர்மம் தான்...''என்றார் தர்மர். இவ்வாறு சொன்னாலும், துருபதனும் விடுவதாயில்லை.''தர்மம் என்ன ஆளுக்கு தகுந்தாற்போல மாறுமா? அனுசுயை, நளாயினி, அகலிகை என்று ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த பத்தினிப் பெண்கள் வாழ்ந்த வாழ்வு பொய்யா...? கற்புக்கு இதில் எங்கே இருக்கிறது இடம்?'' என்றான்.இந்தக்கேள்விக்கு பதில் கூறத் தெரியாமல், தர்மரும் தவித்திட, மற்ற பாண்டவர்களும் அதே தவிப்பை காட்டுகின்றனர். குந்தியிடமோ கண்ணீர்...!''என் வாயிலே ஏன் இப்படி ஒரு வார்த்தை வந்தது? இது என்ன சோதனை? தவறான ஒரு வார்த்தையை தவறாகப் பேசிவிட நான் சாமான்யமானவளா? இல்லை... இதன் மூலம் நான் சாமான்யமானவளாக ஆகி விட்டேனா? '' என்று தனக்குள் பலவாறு கேட்டுக் கொள்கிறாள். அப்போது அனைத்துக்கும் விடிவாக வியாசர் வருகிறார்.திரிகால ஞானியான அவரை துருபதனும் வரவேற்று உபசரித்து, தனக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டை விபரமாகக் கூறி முடிக்கிறான். வியாசர் அதைக் கேட்டு நகைக்கிறார்.தர்மரோ '' வியாசரே... இது என்ன சிரிப்பு? துருபதன் கேட்பதில் நியாயம் இருக்கிறது. அதே சமயம், தர்மப் பிசகான ஒரு சொல்லையும் நான் உதிர்ப்பதில்லை. இந்த நிலையில் என் பேச்சு தான் தவறாகி விட்டதா? இல்லை.. எங்கள் ஐவருக்கும் உரியவள் திரவுபதி என்று நான் சொன்னது தான் சத்யமா? நீங்களே இதற்கு ஒரு தெளிவினை ஏற்படுத்த வேண்டும்'' என்கிறார்.குந்தியும் அவ்வாறே விண்ணப்பித்திட, வியாசர் குந்தி, தர்மர் இருவரையும் பார்த்துப் பேசத் தொடங்குகிறார்.''உங்கள் இருவர் வாக்கிலும் பொய்யில்லை. தர்மர் வாக்கு எந்த நாளும் பொய்யாகாது. திரவுபதி உங்கள் ஐவர்க்கும் உரியவளே. இதில் திகைப்படையத் தேவையில்லை'' என்கிறார்.துருபதனோ விளக்கமாக எடுத்துரைக்கச் சொல்கிறான். வியாசரும் சொல்லத் தொடங்குகிறார்.''நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். மானுட வாழ்வென்பது விதிவழியே செல்கின்ற ஒன்றே. இந்த விதிப்பாட்டைக் கூட அவரவர்கள் தங்கள் செயல்களாலேயே தான் எழுதிக் கொள்கின்றனர். நன்மை எது.. தீமை எது என்று சான்றோர்களால் பிரித்து கூறப்பட்டு விட்ட நிலையில், எடுத்து விட்ட பிறப்பில், நன்மைகளை மட்டும் செய்து, தீமையை ஒதுக்கி வெற்றி கண்டு முக்தியை அடைய வேண்டும் என்பதே பிறப்பின் நோக்கம். ஆனால், நன்மைகளை மட்டுமே செய்து வாழாமல், மதிமயக்கத்தால் சில தீமைகளையும் செய்து விட நேர்கிறது. அதனால், அந்த தீமைகளுக்கான தண்டனையை அடைய ஏதாவது ஒரு வடிவில் திரும்ப பிறக்க வேண்டியுள்ளது. தீமைகளுக்கான தண்டனைக்காக மட்டும் பிறப்பு ஏற்படுவதில்லை. சில நன்மைகளைச் செய்து விட்டு அதற்கான பரிசினைப் பெற்று இன்பமாக வாழ்ந்திடவும் திரும்ப பிறப்பெடுக்கிறோம். அதாவது நன்மை, தீமை இரண்டுமே பிறவித்தளையை தொடரச் செய்கின்றன. இதனால் தான் இரண்டையும் செய்யாமல் நடுவுநிலையில் கல்லைப் போல் அமர்ந்து தவம் செய்து வரசித்தியாக மோட்ச கதியை கேட்டுப் பெறுகின்றனர் சில ரிஷிகள்.ஒரு பிரம்மரிஷியான நானும் கூட, செய்த நன்மை தீமையின் பொருட்டே பிறப்பெடுத்து அதை தொடர்ந்தபடி இருக்கிறேன். இன்று உங்களை எல்லாம் சந்தித்து இது குறித்துப் பேச நேர்ந்ததெல்லாமும் கூட விதியின் ஏற்பாடே. நீங்கள் எல்லாரும் கூட முற்பிறப்பில் செய்த செயல்பாடுகளின் தொடர்ச்சியாகவே இப்போது பிறப்பெடுத்துள்ளீர்கள். அந்தவகையில் நீங்கள் எதன் காரணமாக பிறப்பெடுத்திருக்கிறீர்கள் என்றும் தெரிந்து கொண்டால் உங்களுக்கு இங்கே எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது.நான் இப்போது அதைக் கூறுகிறேன். முதலில் திரவுபதி யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு பாண்டவர்களாகிய நீங்கள் ஐவரும் யார் என்பதைக் கூறுகிறேன். திரவுபதி இப்பிறப்பில் யாகநெருப்பில் பூத்திருக்கலாம். ஆனால் முற்பிறப்பில் அவள் 'நளாயினி' என்னும் பெரும் கற்புக்கரசியாவாள்'' என்கிறார்.நளாயினி என்று சொன்ன மாத்திரத்தில் அனைவரிடமும் இன்ப அதிர்வு. திரவுபதியே ஒரு விநாடி சிலிர்த்துப் போனாள். வியாசர் தொடர்கிறார். ''இந்த நளாயினியின் கணவர் யார் தெரியுமா?'' என்று கேட்க, அனைவரும் வியாசரைக் கூர்ந்து பார்த்திட 'அவரே மவுத்கல்ய ரிஷி'' என்கிறார்.- தொடரும்இந்திரா சவுந்தரராஜன்