உள்ளூர் செய்திகள்

ஜெயித்துக் காட்டுவோம்! (16)

'எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' இந்த எண்ணம் தான் பொதுவாக அனைவரிடமும் இருக்கிறது.ஆனந்தத்தை நிரந்தரமாக அனுபவிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறோமே தவிர, எதில் நிலையான இன்பம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதில்லை.நண்பர் ஒருவர் சொன்னார், ''உறவினர் வீட்டு திருமணம், அறுசுவை விருந்து, நன்றாக சாப்பிட்டு அனுபவித்தேன், வீட்டிற்கு வந்து நிம்மதியாக துாங்கினேன், மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது இரண்டு தினங்கள்.'' வயிறார சாப்பிடுவதும், நிம்மதியாக துாங்குவதும் மகிழ்ச்சி தான் என்றாலும், தினசரி இப்படியே நடந்தால் அது ஆனந்தமாக இருக்காது.அப்படியென்றால் பூரண மகிழ்ச்சி எதன் மூலம் கிடைக்கும் என்கிறீர்களா?பிறர் நம்மை பாராட்டி புகழும் போது!நாம் செய்த நற்செயலை நான்கு பேர் மெச்சும் போது!தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று பரிசு பெறும் போது!நம் சாதனைக்காக சமுதாயம் நம்மை கவுரவிக்கும் போது!ஆம்... ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே அடங்கியிருக்கும் தனித்திறமையை இனம் கண்டு ஜெயித்துக் காட்டும்போது கிடைக்கும் கரவொலியும், பாராட்டும், மலர் மாலைகளும் தரும் மகிழ்ச்சியே உண்மையான இன்பம். அது தான் ஒருவரை ஊக்கப்படுத்தி, உற்சாகமாக வாழவைக்கிறது.கவியரசர் கண்ணதாசன் அற்புதமாக பாடுகின்றார்.'மாபெரும் சபைதனில் நீ நடந்தால்உனக்கு மாலைகள் விழ வேண்டும்.மாற்றுக் குறையாத மன்னன் இவன் என்றுபோற்றிப் புகழ வேண்டும்.'நாம் பெறும் வெற்றிக்காக பிறர் நம்மை பாராட்டும் சமயத்தில் கிடைக்கும் ஆனந்தமே அலாதி தான்.உயர்ந்தவனாக நம்மை நாம் உருவாக்கிக் கொள்வதால், நாமும் நிரந்தர மகிழ்ச்சி கொள்ளலாம், நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சி கொள்ள வைக்கலாம்.குழந்தையை பெற்றெடுக்கையில் ஒரு தாய் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், அதை விட அதிகமான ஆனந்தத்தை அவள் எப்போது அடைகிறாள் தெரியுமா?வள்ளுவர் சொல்கிறார்,'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்'.இறுதி ஊர்வலம் ஒன்றை பார்த்த சாமியார் மக்களிடம்,''அவர் சொர்க்கத்திற்கு போகிறாரா, இல்லை நரகத்திற்கு போகிறாரா என்று பார்த்து வருகிறேன்,'' என்றார்.'சுவாமி, அது எப்படி சாத்தியம்?' என்றனர் மக்கள்.'ரொம்ப சுலபம். மக்கள் அவரை, 'மகராசன் போயிட்டான்' என்று வருத்தப்பட்டால் சொர்க்கத்திற்கு போவார். ஒரு வழியா போய்ச் சேந்துட்டான்யா' என்று முணுமுணுத்தால் கட்டாயம் நரகம் தான்,'' என்றார்.இறந்த பின் சொர்க்கத்திற்கு செல்வதற்காக மட்டுமல்ல, வாழும் போதே நம் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றிக் கொள்வதற்கும் சரியான வழி, சாதித்துக் காட்டுவதே!இளம் தலைமுறையினர்க்கு அப்துல் கலாம் வழங்கியுள்ள அறிவுரை என்ன தெரியுமா?'சாதிக்கும் வேட்கை நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருந்தே ஆக வேண்டும். உண்டு, உறங்கி காலத்தை வீணாக கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை. சுவாசிப்பது எவ்வளவு முக்கியமோ, நீர் அருந்துவது எவ்வளவு முக்கியமோ, உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டுவது!''ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்'என்று பிறர் வருந்தி ஏசும்படி வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாயிடம், ஒரு இளைஞன் உதவி கேட்டு வந்தான்'ஐயா, நான் வியாபாரம் செய்து பிழைக்கலாமென நினைக்கிறேன். ஆனால், மூலதனத்திற்கு என்னிடம் பணம் ஏதும் இல்லை. அதனால் தாங்கள் கொஞ்சம் பணம் தந்தால் உபயோகமாக இருக்கும்,'' என்றான்.உடனே டால்ஸ்டாய் சொன்னார், ''உனக்கு ஆயிரம் ரூபிள் கூட என்னால் கொடுக்க முடியும். ஆனால் அதற்கு ஈடாக நீ உன் கைவிரல் ஒன்றை கொடுக்க வேண்டும்,'' என்றார்.இளைஞன் பதறிப்போய், 'என்ன ஐயா இப்படி கேட்கிறீர்கள்?' என்றான்.சிரித்துக் கொண்டே டால்ஸ்டாய் சொன்னார், ''பத்தாயிரம் ருபிள் வேண்டுமா, உன் கண் ஒன்றை தந்தால் போதும்,'' என்றார்.திகைத்துப் போன இளைஞனிடம், டால்ஸ்டாய் பேசினார்.' இப்போது நாம் காண்கின்ற இந்த உலகம் ஆரம்பத்தில் எப்படி இருந்தது என்று தெரியுமா? காடுகளும், மலைகளும், கல்லும், மண்ணுமாக இருந்ததை வயல்களாகவும், வீடுகளாகவும் மாற்றினர் நம் முன்னோர். அவர்கள், கைகளையும் கால்களையும் பயன்படுத்தி கடுமையாக உழைத்ததால் தானே இந்த உலகம் உருவானது. நம்மிடம் விலை மதிப்பில்லாத உறுப்புகள் இருக்கின்றன. அதைவிட மேலான மூலதனத்தை யாரால் வழங்கி விட முடியும்.'டால்ஸ்டாயின் இந்த விளக்கம் நமக்கு அறிவிப்பது என்ன தெரியுமா?'சாதித்துக் காட்ட ஆதாரமான சாதனங்கள் இருந்தும், நாம் சாதாரணமாக வாழலாமா' என்பது தான்!தொடரும்அலைபேசி: 98411 69590திருப்புகழ் மதிவண்ணன்