அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...
ஒருகுழந்தை பாடி, காஞ்சி மகாபெரியவர் ரசித்த திரைப்படப் பாடல் பற்றி உங்களுக்கு தெரியுமா?ஒருமுறை, காஞ்சிப் பெரியவரைத் தரிசித்து ஆசி பெற, சென்னை மயிலாப்பூரிலுள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்தனர். அவர்களை ஐந்து ஆசிரியர்கள் வழிநடத்தி வந்தார்கள். அனைவரும் ஸ்ரீமடத்தில் வரிசையாக வந்து நின்று, பெரியவரை வணங்கிய வண்ணம் நகர்ந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு மாணவனை மகாப்பெரியவர் அழைத்து, ''உனக்கு பாடத்தெரியுமா?'' என்று கேட்டார்.அந்த மாணவன், ''தெரியும்'' என்று சொன்னதும், ''எங்கே... ஒரு பாட்டு பாடு,'' என்றார்.அவன், களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற ''அம்மாவும் நீயே அப்பாவும் நீயே'' என்ற பாடலை இனிய குரலில் பாட ஆரம்பித்தான். இதைக் கேட்டதும், அவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களில் ஒருவர் அதிர்ந்து போனார்.மாணவனை இழுத்துப் பிடித்து, ''டேய்... பெரியவர் முன்னாடி சினிமா பாட்டெல்லாம் பாடக்கூடாது...இது உனக்கு தெரியாதா..'' என்று கடிந்து கொண்டார்.இதைக் கவனித்த பெரியவர்,'' குழந்தையைத் திட்டாதீங்கோ! குழந்தை ஆசையாய் பாடுகிறான். தேவாரப் பாடல்களில் 'அம்மையே-அப்பா' என ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும் பாடித் துதிக்கவில்லையா! இறைவன் தாயும் தந்தையுமாக காட்சி தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவன் பாடுவதாக எடுத்துக் கொள்ளலாம் இல்லையா? அவனை தொடர்ந்து பாடச் சொல்லுங்கள்,'' என்றார்.பின், அந்த மாணவன் அப்பாடலைத் தொடர்ந்து பாட எல்லாருமாய் கேட்டனர். பிறகு குழந்தைகளுக்கு பழங்கள், கற்கண்டு, குங்குமம் பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினார். குழந்தைகளிடத்தில் ஸ்ரீமகாபெரியவர் காட்டிய பாசத்தை என்னவென்று சொல்வது!