பொன்மகள் வந்தாள்! பொருள் அள்ளித்தந்தாள்!
மகாலட்சுமி மீது ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் பெருமை குறித்து ஒருமுறை பேசினார் காஞ்சிப்பெரியவர். ''பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். வாழ்க்கை சக்கரம் சுழல வேண்டுமானால் லட்சுமி கடாட்சம் அவசியம் வேண்டியிருக்கிறது. அதைத் தரக் கூடியது 'கனகதாரா ஸ்தோத்திரம்'. சங்கரர் சந்நியாசம் பெறும் முன், சிறுவனாக இருந்த போது குருகுலத்தில் தங்கியிருந்தார். தினமும் வீடு வீடாகச் சென்று பிச்சை ஏற்று சாப்பிடுவார். அப்படி ஒருநாள் துவாதசியன்று 'அயாசகன்' என்ற ஏழையின் வீட்டு வாசலில் நின்றார் சங்கரர். அப்போது அயாசகன் வெளியே போயிருந்தார். 'எனக்கு பிச்சை போடுங்கள்' என்ற சங்கரர் குரல் கொடுக்கவே, அயாசகனின் மனைவி வெளியே வந்தாள். ஒளிபொருந்திய சங்கரரின் முகத்தைக் கண்ட அவள் 'இந்த தெய்வீகக் குழந்தைக்கு பிச்சையிட ஏதுமில்லையே' என வருந்தினாள்.முதல்நாள் ஏகாதசியன்று விரதமிருந்த அயாசகன், சாப்பிடுவதற்காக ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டும் இருந்தது. இருந்தாலும் அக்கனியை பிச்சைப் பாத்திரத்தில் இட்டுச் சென்றாள். இரக்கம் மிக்க அந்தப்பெண்ணைக் கண்ட சங்கரரின் மனம் நெகிழ்ந்தது. உடனே மகாலட்சுமி மீது கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். ''இந்த ஏழைத்தம்பதியர் பல பிறவிகளாக பாவம் செய்தவர்கள். முன்வினையின் காரணமாக வறுமையில் வாடுகின்றனர். பாவம் தீரும் காலம் வரை அவர்களுக்கு செல்வத்தை அளிக்க இயலாது'' என வானில் அசரீரி ஒலித்தது. ஆகாயத்தை நோக்கிய சங்கரர், ''சாப்பாட்டுக்கே வழி இல்லாத இவள் தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியைக் கூட பிச்சை கொடுத்தாளே! இந்தப் புண்ணியம் ஒன்றே அவளது பாவங்களை எல்லாம் போக்கிடுமே? தாயே மகாலட்சுமி! இவளைப் போலவே உன்னிடமும் நிறைய அன்பு இருக்கிறதே? கண்டிப்பு மட்டும் காட்டாமல் அன்புடன் அருள்வாயம்மா!' என பிரார்த்தித்தார். மகாலட்சுமியும் அந்த பெண்ணின் வீட்டு வேலிக்குள் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பெய்யச் செய்தாள். 'கனகதாரா' என்றால் 'பொன்மழை' என்பது பொருள். சங்கரர் சிறுவனாக இருந்த போது பாடிய முதல் ஸ்தோத்திரம் இது. அட்சய திரிதியை நன்னாளில் (மே 7) பக்தியுடன் இதைப் பாடினால் செல்வ வளம் பெருகும்'' என்றார்.தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்