விட்டலனின் விளையாட்டு - 2
செங்கல்லின் மீது விட்டலன்பக்த துக்காராம் எழுதிய 'காசி யாத்திரை பாஞ்ச் துவாரகேஷ் தீன்' எனத் தொடங்கும் அபங் பாடலின் பொருள். 'காசிக்கு ஐந்து முறை யாத்திரை செல்வதும் துவாரகைக்கு மூன்று முறை யாத்திரை செல்வதும் பண்டரிபுரத்துக்கு ஒருமுறை யாத்திரை செல்வதற்கு சமம். காசியில் இறந்தாலோ துவாரகையில் உடல் எரிக்கப்பட்டாலோ ஒருவனுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும். பண்டரிபுரம் வரும் அனைவரும் வைஷ்ணவர்கள்தான். அவர்களிடம் விட்டலன் ஜாதியை பார்ப்பதில்லை. வந்தவர்கள் பாவம் செய்திருந்தாலும் செய்யாதிருந்தாலும் முக்தி அளிக்கிறான்.பெற்றோரை நடக்க வைத்துவிட்டு புண்டரீகன் மனைவியுடன் குதிரையில் சென்றதைக் கேட்டவுடன் பத்மாசினி, 'என் டீச்சர் கூட ஒரு கதை சொன்னாங்க. கழுதையோடு ஒரு வயசானவரும், சின்னப் பையனும் போவாங்க' என்றாள் பத்மாசினி . எந்தக் கதையை மகள் குறிப்பிடுகிறாள் என பத்மநாபனுக்கு புரியவில்லை. சிவப்பிரியா உதவிக்கு வந்தாள்'அதுதாங்க, சின்னப் பையன் மட்டும் கழுதையில் உட்கார்ந்து போகும்போது 'பாவம் வயதானவரை நடக்க வைக்கிறான்' என்பான் ஒருவன். அந்த வயசானவர் கழுதையிலே உட்கார, சிறுவன் நடந்து வரும்போது 'சின்னப் பையனை நடக்கவிட்டு இந்த பெரிய ஆள் கழுதை சவாரி செய்கிறாரே' என்பார் இன்னொருவர். இரண்டு பேரும் கழுதையில் உட்கார்ந்து செல்லும்போது,'பாவம், வாயில்லா ஜீவனை வதைக்கிறாங்களே' என்பார் மூன்றாமவர். வம்பே வேண்டாம்னு இருவரும் கழுதையுடன் நடந்து செல்ல ஆரம்பிக்க 'முட்டாள்கள் ஒருத்தராவது கழுதையில் ஏறக்கூடாதா?' என்பார் நாலாமவர்' என அந்த கதையை சுருக்கமாக சொன்னாள் சிவப்பிரியா. 'அது எப்போதும் பிறர் சொல்லைக் கேட்டு நடப்பதால் வந்த முட்டாள்தனம். ஆனால் புண்டரீகன் செய்தது அத்தனை பேர் சொன்ன நல்ல அறிவுரைகளையும் கேட்காததால் வந்த விபரீதம்' என்றார் பத்மநாபன். புண்டரீகன் பெற்றோரை அலட்சியமாக நடத்தியதை பத்மநாபன் கூறியதும் மயில்வாகனன், பத்மாசினியின் முகம் வாடி விட்டன. 'ரொம்பக் கெட்டவன்ப்பா அவன். அப்பா அம்மாவை யாராவது திட்டுவாங்களா?' என்றாள் பத்மாசினி.'கெட்டவனாகத்தான் இருந்தான். ஆனால் அவனாலே உலகத்துக்கு நன்மை ஒண்ணு நடந்தது' என்றார் பத்மநாபன்.'அவனாலா?' என ஆச்சரியம் பொங்கக் கேட்டான் மயில்வாகனன். 'ஆமாம். சொல்லப் போனால் பெரிய நன்மை' எனத் தொடர்ந்தார் பத்மநாபன்....பெண் உருவங்களில் தோற்றமளித்த அவர்கள் உண்மையில் நதிகள். கங்கை, யமுனை, சரஸ்வதி.அவர்களை அணுகினான். 'நீங்கள் யார்? எப்படி உங்கள் தோற்றம் இப்படி மாறியது?' எனக் கேட்டான். அவர்கள் முகங்களில் வியப்பு தோன்றியது. பொதுவாக பிறரின் கண்களுக்கு தாங்கள் நதியாக மட்டும் தானே தோற்றமளிப்போம்? அதையும் மீறி இவன் மங்கைகளாகப் பார்க்க முடிகிறதென்றால் கடவுள் ஏதோ திட்டமிட்டு இருக்க வேண்டும். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட கங்காதேவி 'பாவங்களை தொலைப்பதற்காக மக்கள் எங்களிடம் நீராடுகிறார்கள். இதன் காரணமாக பாவச் சுமைகளை நாங்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. எனவே தினமும் இரவில் இங்குள்ள குக்குட முனிவருக்கு சேவை செய்வோம். பாவங்கள் தொலைந்து விடும். இழந்த தேஜஸைப் பெறுவோம்' என்றாள்.'ஓ, அதனால்தான் அகோரமாக வந்த நதி தேவதைகள் லட்சணத்துடன் திரும்பிச் செல்கிறார்களா!' மேலும் அவன்,''உங்கள் பாவங்களை நீக்கும் வல்லமை முனிவருக்கு எப்படி வந்தது? ஒருவேளை அவர் பல ஆண்டுகள் கடும் தவம் செய்தவரோ?'''அவர் தவம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவர் பெற்றோர் அருமையை உணர்ந்தவர். அவர்களுக்கு பணிவிடை செய்வதை முக்கியமாக கருதியவர். அதன் காரணமாக அவருக்கு கடவுள் இவ்வளவு வலிமையைக் கொடுத்திருக்கிறார்'. கூறிவிட்டு மூவரும் புறப்பட்டனர். தன்னை யாரோ புரட்டிப் போட்டது போல் இருந்தது புண்டரீகனுக்கு. பெற்றோர் மீதுள்ள பக்தி இவ்வளவு சிறப்பு தருமா? தான் புரிந்த பாவங்கள் ஒவ்வொன்றாக மனதில் தோன்றி வருந்தின. கண்ணீர் பெருக குடிசைக்குள் சென்று பெற்றோரின் கால்களை பற்றினான். தன்னை மன்னிக்குமாறு மகன் கெஞ்சியதை அவர்களால் நம்ப முடியவில்லை. பெற்றோரை குதிரையில் அமரவைத்து தானும் மனைவியும் கூட நடந்தபடி காசியை அடைந்தான். அங்குள்ள கோயில்களுக்கு அழைத்துச் சென்றான். பின் வீடு திரும்பத் தொடங்கினான். அப்போது சந்திரபாகா என்ற நதிக்குச் சற்றுத் தள்ளி இருந்த ஒரு பகுதி அவனைக் கவர்ந்தது. அங்கே குடிலமைத்து பெற்றோருக்கு பாத பூஜை செய்வது, உணவளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டான். இந்த பிறவியில் பாவம் செய்திருந்தாலும் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் காரணமாக உண்மையை உணர்ந்து திருந்தினோம் என்பது அவனுக்கு புரிந்தது. பெற்றோருக்குச் செய்யும் பணிவிடையே அனைத்திலும் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தான். ஆனால் அந்த 'அனைத்திலும்' என்பதில் அவன் தெய்வத்தையும் சேர்த்திருந்தான் என்பதைப் புரிய வைக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. அந்த குடிலின் உள்ளே இருந்தது ஒரு செங்கல். சாபத்தால் செங்கல் வடிவம் எடுத்திருந்த தேவேந்திரன் தன் சாப விமோசனத்திற்காக காத்திருந்தான். அதற்கான தருணம் நெருங்கியதை உணர்த்தும் வகையில் துவாரகையில் ஒரு பிரளயம் ஏற்பட்டது. இயற்கைச் சீற்றம் அல்ல கண்ணனின் மனம் கவர்ந்த இரு மங்கையருக்கு இடையே உண்டான கருத்து வேற்றுமை அது. கோகுலத்தில் பிறந்து வளர்ந்தவள் ராதை. கண்ணனின் சிறுவயதில் அவனோடு விளையாடியவள். கண்ணனைத் தோழனாக மட்டுமல்ல எல்லாமுமாக நினைத்தவள். கண்ணன் கோகுலத்திலிருந்து துவாரகைக்குச் சென்ற பின் அவள் உடல், உள்ளத்தால் வாடினாள். துவாரகையில் கண்ணன் ருக்மிணியை மணந்து கொண்டு ஆட்சி நடத்தி வந்தார். அப்போது ஒரு நாள் ராதை அங்கு வந்து சேர அவளது அன்பை உணர்ந்த கண்ணன் தானும் அவளிடம் அன்பு செலுத்தினார். ருக்மிணிக்கு இதனால் வருத்தம் உண்டானது. நிலைமையைக் கண்ட ராதையும் மனம் நொந்தாள். தன்னால் கண்ணனுக்கு ஏன் தொல்லை என நினைத்தவளாய் அங்கிருந்து அகன்றாள். திண்டீரவனம் என்ற பகுதிக்குச் சென்று தவம் புரியத் தொடங்கினாள்.காலில் கொலுசு, கையில் வளையல்கள், கழுத்தில் ரத்ன ஹாரத்தோடு கைகளை இடுப்பில் வைத்தபடி ராதைக்குக் காட்சியளித்தான் கண்ணன். 'இதே போல் புண்டரீகனுக்கும் காட்சி அளிப்பேன்' என்றபடி அவனது வீட்டை அடைந்தான். அங்கே புண்டரீகன் பெற்றோரின் பாதங்களை கழுவி துணியால் துடைத்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் பின்னால் கொலுசொலி கேட்டது. அந்த அைறயில் தெய்வீக ஒளி சூழ்ந்தது. சட்டென திரும்பிப் பார்த்தான் கண்ணன்! புண்டரீகன் உணர்ந்துகொண்டான். 'எனக்கா இந்த பாக்கியம்? அப்படியானால் பெற்றோருக்கு பணிவிடை புரிவது இத்தனை உயர்ந்ததா?'.என்றாலும் பெற்றோருக்கான பணிவிடையை பாதியில் நிறுத்த அவனுக்கு மனம் வரவில்லை. அதேசமயம் வந்திருக்கும் கண்ணனை உட்காரச் சொல்ல எந்த ஆசனமும் இல்லை. சற்றுத் தள்ளி கிடந்த செங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைத் துாக்கி கண்ணனுக்கருகே எறிந்தான். 'கண்ணா, இந்த செங்கல் மீது சிறிது நேரம் நின்று கொள். பெற்றோரு சேவை செய்துவிட்டு வருகிறேன்' என்றான். அந்த செங்கல்லின் மீது இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி புன்னகையுடன் காட்சியளித்தான் விட்டலனாக மாறிய கண்ணபெருமான்.-தொடரும்ஜி.எஸ்.எஸ்.,aruncharanya@gmail.com