உள்ளூர் செய்திகள்

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்!

மே 22 காஞ்சி பெரியவர் பிறந்தநாள்* நல்ல குடும்பமே பல்கலைக்கழகம். குடும்பக் கடமைகளை விட்டு சமூகசேவையில் ஈடுபடுவது நல்லதல்ல. குடும்பத்தினரைப் புறக்கணித்து விட்டு, சமூகசேவை செய்பவன் பிற்காலத்தில் வருந்த நேரிடும். * கோவில் வழிபாடும், கடவுளுக்கு நைவேத்யம் படைப்பதும் அவருக்கு நன்றி செலுத்துவதன் அடையாளமே. கடவுளின் அருள் இல்லாமல் உலகில் சிறு புல்லைக் கூட படைக்கும் சக்தி நமக்கு கிடையாது. * உடுத்தும் உடை அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க விரும்புகிறோம். ஆனால் மனத்தூய்மையை யாரும் பொருட்படுத்துவதுஇல்லை. கடவுளைச் சரணடைவதும், தியானம் செய்வதும் மனதை தூய்மைப்படுத்த உதவும்.* பாவம் தீர வழி தெரியாமல் அலைகிறார்கள். கணப்பொழுதில் பாவம் போக்கும் பொருள் ஒன்று இருக்கிறது. அதுவே கடவுளின் திருநாமம். நாக்கு பெற்றதன் பயன் பக்தியுடன் கடவுளின் பெயரைச் சொல்வது மட்டுமே. * மனிதன் வெளி உலகத்தில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான். உண்மையில் மகிழ்ச்சி மனதில் இருந்து தான் பிறக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள முடியாமல் அறியாமையில் அவன் மூழ்கிக் கிடக்கிறான்.* வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால் அதன்பின் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியும், அழகும் வெளிப்படத் தொடங்கும். அதனால் ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றுங்கள். * கடவுள் மனிதனுக்கு நல்ல புத்தியும், அதை செயல்படுத்தும் சக்தியும் கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் மட்டுமே எப்போதும் ஈடுபடவேண்டும்.* பணம், பேச்சு இரண்டிலும் அளவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். அவசியமில்லாத விஷயம் பற்றி பேசுவதோ, வீணாகப் பணம் செலவழிப்பதோ தீமையில் முடியும். * சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்லெண்ணத்தை பேச்சில் வெளிப்படுத்துவதே சத்தியம். அதனால் எல்லோருக்கும் நன்மையே உண்டாகும்.* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே போனால் நிம்மதியாக வாழ முடியாது. மனதில் போட்டி, பொறாமை இருக்கும் வரை மனநிறைவு ஏற்படாது. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே சிறந்தது.* கடவுளைச் சிந்தித்து செய்யும் எந்த செயலும் நற்பலனைக் கொடுக்கும். அறியாமல் செய்தாலும் கூட வழிபாட்டுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.* வாழ்க்கையை லாபநஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரி போல கருதுவது கூடாது. பிறருடைய துன்பத்தைத் தீர்க்க நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.* எடுத்துச் சொல்வதை விட எடுத்துக் காட்டாக விளங்குவதே சிறந்தது. பிறருக்கு உபதேசம் செய்ய விரும்பினால், அதற்கு முதலில் தகுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.சொல்கிறார் காஞ்சிப் பெரியவர்