உள்ளூர் செய்திகள்

ஆதி காமாட்சி தரிசனம்

ஆக.16 ஆடி கடைசி செவ்வாய்ஆடி கடைசி செவ்வாயன்று அம்பாளைத் தரிசிப்பது விசேஷம். இந்த நாளில் காஞ்சிபுரத்திலுள்ள ஆதிகாமாட்சியை தரிசித்து வரலாம். தல வரலாறு: தேவர்களுக்கு சில அசுரர்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர். தங்களைக் காக்கும்படி பூலோகம் வந்து அம்பிகையை வேண்டி தவமிருந்தனர். அவர்களின் பக்தியை மெச்சிய அம்பிகை, காளி வடிவம் எடுத்து அசுரர்களை சம்ஹாரம் செய்தாள். பின்னர் தேவர்கள் கேட்டுக்கொண்டபடி, அவ்விடத்தில் எழுந்தருளினாள். இவள் உக்கிரமாக இருக்கவே, பிற்காலத்தில் அம்பாள் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனால் அம்பிகை சாந்தமானாள். இவள் ஆதி காமாட்சி என்று பெயர் பெற்றாள். அம்பிகை காளி வடிவம் கொண்ட தலம் என்பதால் இதை 'காளி கோட்டம்' என்றும் அழைப்பர்.ஸ்ரீசக்ர யந்திரம்: ஆதிகாமாட்சி அம்பிகை, தெற்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் பாசம், அங்குசம் மற்றும் அன்ன கிண்ணம் இருக்கிறது. காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை உள்ளது. பொதுவாக அம்பாள் தலங்களில் துவாரபாலகியர் மட்டும்தான் இருப்பர். ஆனால் இங்கு முன்மண்டபத்தில் துவாரபாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவார பாலகியரும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. அம்பாள் சன்னிதி முகப்பில் ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. காலை பூஜையில் ஸ்ரீசக்ரத்திற்கு பூஜை செய்த பின்பே, அம்பிகைக்கு பூஜை செய்கிறார்கள். பவுர்ணமி நாட்களில் இரவில் அம்பிகைக்கு விசேஷ பூஜை நடக்கும். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்து, தீபமேற்றி வழிபடுகிறார்கள்.கல்வி செல்வம் வீரம் : இங்குள்ள உற்சவர் காமாட்சி சன்னிதியில், அம்பாளுடன் கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்திற்குரிய மகாலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். அம்பாள் கருவறை சுற்றுச்சுவரில் நர்த்தன கணபதி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராஹ்மி, துர்கை ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் சிவபெருமான், மடாலீஸ்வரர் என்ற பெயரில் லிங்க வடிவமாக எழுந்தருளியுள்ளார். ஒரு மதிற்சுவரில் அன்னபூரணி புடைப்புச் சிற்பமாக இருக்கிறாள். அன்னத்திற்கு குறைவில்லாத நிலை கிடைக்க இவளை வழிபடலாம். பிரகாரத்தில் உள்ள அரசமரத்தின் கீழ் சப்தகன்னியர், நாகர் உள்ளனர். அருகில் மகிஷாசுரமர்த்தினி இருக்கிறாள். சர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டுள்ள பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து சப்தகன்னியரை வழிபடுகின்றனர். ஒரு காலத்தில் மூலஸ்தானத்தில் இருந்த ஆதி அம்பிகை, வீரியலட்சுமி என்ற பெயரில் தனி சன்னிதியில் இருக்கிறாள்.சக்தி லிங்கம்: அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் உள்ளது. இதை 'அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்கின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், புதிதாக திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். திருமணத்தடை நீங்கவும், நல்ல வரன் கிடைக்கவும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30 - 12 மணி) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் தீபமேற்றி வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அம்பிகைக்கு சிவப்பு அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரம்.நேரம்: காலை 6.00 -11.30, மாலை 4.00 - இரவு 8.30 மணி.அலைபேசி: 94430 19641.