உள்ளூர் செய்திகள்

ஆபத்தில் உதவுபவள்

கோடை காலத்தில் மழை பொழிய வைத்து மக்களின் பஞ்சம் தீர்ப்பவள் மாரி. அவள் கோயில் கொண்டு விளங்கும் எந்த இடத்திலும் நோய்கள் அண்டாது. பயம் இருக்காது. அவளை வழிபடுபவர்கள் எல்லா நலனையும் பெறுவர். சிங்கமாக வடிவெடுத்து பக்தையின் குழந்தையை காப்பாற்றி அவளின் வேண்டுகோளுக்காக அங்கேயே சக்தி மாரியம்மன் என்ற திருநாமத்தில் அம்மன் அருள் செய்யும் கோயில் ஒன்றுள்ளது. அது பெங்களுரூ பில்லன்னா கார்டனில் உள்ளது. அக்கோயில் பற்றி தெரிந்து கொள்வோமா வாருங்களேன். நுாறாண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த பெண் எது நடந்தாலும் எதைச் செய்தாலும் மாரியம்மா பார்த்துக் கொள்வாள் என சொல்லிக்கொண்டே இருப்பாள். ஒருநாள் சமைப்பதற்கு சுள்ளிகளை பொறுக்க கைக்குழந்தையுடன் வனத்திற்கு சென்றாள். அங்கு ஒரு மரத்தடியில் குழந்தையை தொட்டில் கட்டி உறங்கச் செய்து விட்டு சுள்ளி பொறுக்கும் வேலையை பார்த்தாள். நீண்ட நேரம் கழித்து குழந்தை ஞாபகம் வர அங்கு வந்தாள். அப்போது தொட்டில் அருகே சிங்கம் ஒன்று படுத்திருக்கும் காட்சியை கண்டு ஆனந்தத்தில் கண்மூடி கைகூப்பி வணங்கினாள். சிங்கம் மறைந்தது. அப்போது அவளுக்கு'' எப்போதும் துணையிருப்போம்'' என அசரீரி ஒலித்தது. அன்று முதல் அவ்விடத்தில் ஆண்டுதோறும் பீடம் அமைத்து வழிபட்டு வந்தார்கள். பின்னாளில் இளம் தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சிறுகோயில் ஒன்றை கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளனர். மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது என்பர் அதற்கு ஏற்றார் போல கருவறையில் காட்சி தரும் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டால் கேட்கும் வரங்கள் பலிக்கும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் அம்மன் சன்னதிக்கு வந்து தீர்த்தம் பெற்று கொள்கின்றனர். விநாயகர், முருகன், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. வனமாக இருந்த இப்பகுதி இன்று மிகப்பெரிய நகராகி விட்டது. கோயிலினுள் வளர்ந்திருக்கும் வேம்பு, அரசு மரக்கொப்புகளை யாரும் ஒடிப்பதில்லை. இப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஆடி மாதம் அம்மனுக்கு விழா எடுக்கின்றனர். கோயில் சார்பாக அன்னதானத்தை நடத்துகின்றனர். எப்படி செல்வது: பெங்களூரு கே.கே.மார்க்கெட்டில் இருந்து 15 கி.மீ.,விசேஷ நாள்: செவ்வாய், வெள்ளி ஆடி மாதம் முழுவதும், நவராத்திரி நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 90361 38006அருகிலுள்ள தலம்: வித்யாவிநாயகர் கோயில் 3 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 11:00 மணி, மாலை 5:00 - 7:00 மணி தொடர்புக்கு: 99457 62717