எல்லா நன்மையும் உண்டாகும்
முன்னோருக்குரிய நாளான அமாவாசையன்று விரதம் இருந்து தீர்த்தங்களில் நீராடினால் நன்மை உண்டாகும். அதற்கு ஏற்றாற்போல் தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதப்பிறப்பும் அமாவாசையும் ஜூலை 17, 2023 அன்று வரப்போகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர் கோயிலுக்கு வாருங்கள். இலங்கையை ஆட்சி செய்தவர் ராவணன். இவர் ஸ்ரீராமபிரானின் மனைவியான சீதாதேவியை கடத்தி சென்றார். இவரை மீட்க தனது தம்பி லட்சுமணனுடன் புறப்பட்ட ஸ்ரீராமபிரான் இங்கு வந்ததும் சிறிது நேரம் இளைப்பாறினார். சுற்றிலும் அடர்ந்த வனமாக இருந்ததால் நல்ல தண்ணீரே கிடைக்கவில்லை. இவர்களின் வருகையை அறிந்த வருணபகவான் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினார். அந்த தீர்தத்தத்தை குடித்த இவர்கள் மனம் மகிழ்ந்தனர். அப்போது அகத்திய முனிவர் இங்கு வந்தார். ஸ்ரீராமபிரானின் மனம் புண்பட்டுள்ளதை அறிந்தவர் அவருக்கு ஒரு யோசனை கூறினார். 'சிவபக்தனான ராவணனை வெல்வது கடினம். சிவபெருமானின் அருள் இருந்தால் அது சாத்தியம். அதனால் இங்கே குடிகொண்டிருக்கும் சகலதீர்த்தமுடையவருக்கு பூஜை செய். அவரே வெற்றி வியூகங்களை வகுத்துக் கொடுப்பார்' என்றார் அகத்தியர். அவ்வாறே அவர் வழிபட்டதும் சிவபெருமான் பார்வதியுடன் காட்சியளித்தார். உடனிருந்த வருணபகவான் இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்து ஆனந்தப்பட்டார். பின் சிவபெருமானிடம் இங்கேயே கோயில் கொண்டு அருளவும், அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு மோட்சம் அளிக்கும்படியும் வேண்டினார் வருணபகவான். அவ்வாறே சிவபெருமானும் அருளினார்.இங்கு சுவாமி சகலதீர்த்தமுடையவர், சர்வதீர்த்தேஸ்வரர் என்ற பெயர்களில் உள்ளார். அம்பாளின் திருநாமம் பெரியநாயகி. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவியுடன் மகாவிஷ்ணு, சூரியபகவான், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலின் வடக்கு பகுதியில் வருணதீர்த்தம் உள்ளது. இங்கே நீராடினால் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும். எப்படி செல்வது: ராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 62 கி.மீ., விசேஷ நாள்: ஆடி மாதப்பிறப்பு ஆடி, புரட்டாசி, தை அமாவாசை சிவராத்திரி, பிரதோஷம் நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிஅருகிலுள்ள தலம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 113 கி.மீ., நேரம்: அதிகாலை 4:00 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:30 மணிதொடர்புக்கு: 04573 - 221 223