உள்ளூர் செய்திகள்

ஆனந்த வாழ்வு தரும் ஆஞ்சநேயர்

சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உள்ளது நமக்கு தெரியும். அதுபோல் ஆஞ்சநேயரும் மூன்று கண்கள், பத்துக் கைகளுடன் ராஜகோபால சுவாமி கோயிலில் காட்சி தருகிறார். இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ளது. ஸ்ரீராமபிரான் இலங்கை அரசனான ராவணனை அழித்த பிறகு, சீதாதேவியுடன் அயோத்தி திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றார். அச்சமயம் நாரதரும் அங்கு வந்தார். வந்தவுடன், ''ராமா! உனது வில்லுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது. இலங்கை யுத்தம் இன்னும் முடியவில்லை'' என பதறினார் நாரதர். மேலும் அவர், ''ராவணன் அழிந்தாலும் ரக்த பிந்து, ரக்த ராட்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் தவம் செய்கிறார்கள். இது பூர்த்தியானால் வரத்தை பெற்றுவிடுவர். பின் அவர்களை அழிக்க முடியாது'' என்றார். அதற்கு ஸ்ரீராமபிரான், ''மகரிஷியே! நான் இப்போதே அயோத்தி சென்றாக வேண்டும். இல்லையெனில் என் தம்பி பரதன் தீக்குண்டம் புகுந்து உயிரை விட்டுவிடுவான். ஆகவே இந்த யுத்தத்தில் என் அன்புக்குரிய அனுமன் ஈடுபடுவான்'' என்று சொன்னார். இதைக்கேட்டதும் ஆஞ்சநேயருக்கோ ஒரே மகிழ்ச்சி. தன் தலைவனின் கட்டளையை நிறைவேற்ற தயாரானார். அவருக்கு உதவியாக பெருமாள் சங்கும் சக்கரமும், பிரம்மா கபாலத்தையும், சிவபெருமான் நெற்றிக் கண்ணையும், கருடன் இறக்கையையும் வழங்கினர். இதையெல்லாம் பத்துக்கைகளில் வாங்கிய ஆஞ்சநேயர், அசுரர்களை அழித்து வெற்றியுடன் திரும்பினார். ஆனந்தமாக திரும்பி வந்தவர் இங்கு தங்கினார். இதனால் இவ்வூர் அனந்தமங்கலம் ஆனது. வாசுதேவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மூலவராகவும், பாமா, ருக்மணியுடன் ராஜகோபால சுவாமி உற்ஸவராகவும் இங்கு உள்ளனர். செங்கமல வல்லி தாயார் தனியாக உள்ளார். தனி சன்னதியில் தெற்கு நோக்கியபடி திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் நமக்கும் ஆனந்தமான வாழ்வு அமையும். தற்போது கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி துவங்கப்பட்டுள்ளது.எப்படி செல்வது: காரைக்கால் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் 12 கி.மீ.,விசேஷ நாள்: அனுமன் ஜெயந்தி வைகுண்ட ஏகாதசி, அமாவாசைதொடர்புக்கு: 84388 35026, 04364 - 289 888நேரம்: காலை 8:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி* சனிக்கிழமை அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிஅருகிலுள்ள தலம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் கோயில் 5 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 04364 - 287 429