உள்ளூர் செய்திகள்

அலைகடல் ஓரத்தில் அஷ்டலட்சுமி தரிசனம்!

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் அஷ்டலட்சுமி கோயில் உள்ளது. வரலட்சுமி விரதத்தன்று இங்கு செல்வ வளம் தரும் தன ஆகர்ஷண லட்சுமி குபேரர் ஹோமம் நடக்கிறது.தல வரலாறு: காஞ்சிப் பெரியவருக்கு அஷ்ட லட்சுமிகளையும் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்ப வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தேவர்கள் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது மகாலட்சுமி அதில் வெளிப்பட்டாள். இதன் அடிப்படையில் வங்கக்கடலை பாற்கடலாக கருதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அஷ்டலட்சுமி கோயில் பெரியவரின் வேண்டுகோளை ஏற்று, பக்தர்களால் உருவானது. கோயில் அமைப்பு: மூலவர் லட்சுமி நாராயணர் சன்னதி தொடங்கி, அஷ்டலட்சுமிகளையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதத்தில் இக்கோயில் உள்ளது. ஓம் என்னும் பிரணவ மந்திர வடிவில் உள்ள இங்கு அஷ்டாங்க விமானம் இருப்பது சிறப்பு. கீழ் தளத்தில் ஆதிலட்சுமி, தானிய லட்சுமி, தைரிய லட்சுமி சன்னதிகள் உள்ளன. இரண்டாம் தளத்தில் கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி சன்னதிகளும், மூன்றாம் தளத்தின் உச்சியில் தனலட்சுமி சன்னதி உள்ளன. லட்சுமி குபேரர் ஹோமம்: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு (ஆக.4) இங்கு 'தன ஆகர்ஷண லட்சுமி குபேரர் ஹோமம்' நடக்கிறது. அஷ்டலட்சுமிகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படும். லட்சுமியின் அவதார தினமான தீபாவளியன்றும் இந்த ஹோமம் நடக்கும். ஆதிலட்சுமி: மகாவிஷ்ணுவின் இடப்பாகத்தில் தோன்றியவள் ஆதிலட்சுமி. பார்வதி, சரஸ்வதியை தனக்குள் ஐக்கியப்படுத்தி மூன்று தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள். அனைத்து உயிர்களுக்கும் மூலாதாரமான இவளை தரிசித்த பிறகே மற்ற லட்சுமியரை தரிசிக்க வேண்டும்.தானிய லட்சுமி: தானிய லட்சுமி மேற்கு நோக்கி ஆறு கைகளுடன் நெற்கதிர்களுடன் காட்சியளிக்கிறாள். விவசாயம் செழிக்க பக்தர்கள் இவளிடம் வேண்டிக் கொள்ளலாம். இவள் எதிரில் சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார்.தைரிய லட்சுமி: உடல், உள்ளத்திற்கு வலிமை தருபவள் தைரிய லட்சுமி. எட்டு கைகளுடன் வடக்கு நோக்கியிருக்கும் இவளை வீரலட்சுமி என்பர். சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம், கபாலம் ஏந்தியிருக்கும் இவளை வழிபடுபவருக்கு துணிச்சல் அதிகரிக்கும்.சந்தான லட்சுமி: சந்தான லட்சுமியை பூஜித்த பின்பே, பிரம்மா உயிர்களை படைக்க தொடங்கினார். புத்திர பாக்கியம் அருளும் இவளிடம் கத்தி, கேடயம் உள்ளது. கஜலட்சுமி: மகாலட்சுமி பாற்கடலில் தோன்றிய போது புண்ணிய நதிகள் பெண்கள் வடிவில் தோன்றி திருமகள் அருள் பெற காத்திருந்தனர். யானைகள் பொற்கலசங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தன. ராஜயோகம் தரும் இவளுக்கு 'ராஜலட்சுமி' என்றும் பெயருண்டு. இவளது அருளால் உயர்பதவி, சமூக அந்தஸ்து கிடைக்கும்.விஜயலட்சுமி: செயல்களில் வெற்றி கிடைக்கச் செய்பவள் இவள். சூரியன், சந்திரன் இவளுக்கு இரு கண்கள். இவளை 'வைஷ்ணவி' என்றும் அழைப்பர்.வித்யாலட்சுமி: கல்வி, கலை, ஞானம் தரும் வித்யாலட்சுமியை 'வாலை மோகினி' என்று குறிப்பிடுவர். பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் முன்பு இவளை வழிபடுவது நல்லது.தனலட்சுமி: இவள் செல்வத்திற்கு அதிபதி. கையில் சங்கு, சக்கரம், வில், அம்பு, அமுதகலசம், தாம்பூலம் உண்டு. குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் இவளை வழிபட கிடைக்கும்.எப்படி செல்வது: சென்னை கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., நேரம்: காலை 6:30 - 12:00 மணி மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 044-2446 6777, 2491 7777, 2491 1763.