வெள்ளை மனம் கொண்டவர்
கல், மண்ணால் ஆன விநாயகரை பார்த்திருப்போம். வெள்ளெருக்கின் வேரில் சுயம்புவாக தோன்றிய விநாயகரை பார்க்க விரும்பினால் தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் உள்ள காசிப்பேட்டிற்கு வாருங்கள். நலகொண்டாவைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் கனவில் தோன்றினார் விநாயகர். அவரிடம் வீட்டின் பின்புறம் உள்ள வெள்ளெருக்கின் வேர்ப்பகுதியில் தான் சுயம்புமூர்த்தியாக உள்ளேன் என தெரிவித்தார். பக்தரும் விநாயகரை இங்கு பிரதிஷ்டை செய்தார். பிறகு கோயில் கட்டப்பட்டது. விநாயகரை ஸ்திர பிரதிஷ்டை செய்யும் முன் விநாயகர் யந்திரத்தை நான்கு திசைகளிலும் உள்ள புண்ணியத் தலங்களுக்கு எடுத்து சென்று பூஜைகள் நடந்துள்ளது. பின்னர் விநாயகருக்கு வசந்தோற்ஸவமும், சித்தி புத்தியுடன் கல்யாண உற்ஸவமும் நடத்தப்பட்டது. எருக்கில் ஊதா, வெள்ளை நிறம் கொண்ட பூக்கள் உள்ளன. இதில் வெள்ளெருக்கே விநாயகர் வழிபாட்டிற்குச் சிறந்தது. அர்க்கம் என்ற பெயரும் எருக்கிற்கு உண்டு. ஸ்வேதம் என்பது வெண்மையைக் குறிக்கும். ஸ்வேதார்க்க மூலம் என்றால் வெள்ளெருக்கு வேர். நன்றாக விளைந்த இந்தச் செடியின் வேர்ப்பகுதியில் இருந்து உருவானவரே ஸ்வேதார்க்கமூல விநாயகர். பொதுவாக இச்செடியின் வேர்ப்பகுதி தானாகவே விநாயகரின் வடிவத்திற்கு வந்துவிடும். இப்படி இந்தச் செடியின் வேர்ப்பகுதியில் சுயம்புவாக தோன்றிய விநாயகரே இங்கு மூலவர். 16 அல்லது 21 செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இவரை தரிசித்தால் வேண்டுதல் நிறைவேறும். இதனால் இவரை 'சங்கல்ப்ப சித்தி காரகடு' என போற்றுகின்றனர். வாஸ்து தோஷங்களை போக்குபவராக உள்ளார். பூஜைப் பொருட்களை கொண்டு வரும்போது, 'ஓம் கம் கணபதியே நமஹ' என கூறியபடி பக்தர்கள் வலம் வருகின்றனர். மஹாலட்சுமி, சரஸ்வதி, சந்தோஷிமாதா, சீதா ராமர், கிருஷ்ணர், அனுமனும் தனிச்சன்னதியில் அருள்கின்றனர். எப்படி செல்வது: சென்னையில் இருந்து 642 கி.மீ., விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0870 - 256 6262அருகிலுள்ள தலம்: விஜயவாடா மங்களகிரிமலை நரசிம்மர் கோயில் 252 கி.மீ., நேரம்: காலை 6:00 - 2:00 மணிதொடர்புக்கு: 08645 - 232 945; 233 174