அம்பாளின் தவக்கோலம் காண வேண்டுமா! அடித்தபசு திருவிழாவுக்கு வாங்க!
UPDATED : ஆக 11, 2016 | ADDED : ஆக 11, 2016
ஆக.16 ஆடித்தபசு'தபஸ்' என்றால் 'தவம்' என பொருள்படும். சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி தர வேண்டும் என அம்பாள் தவமிருந்த தலம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில். அந்த தவத்திற்கு கிடைத்த வெற்றியின் பலனாக அம்பாள் அந்தக் காட்சியைப் பெற்றதையே 'ஆடித்தபசு' என்னும் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.தல வரலாறு: சங்கன் என்ற நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்பவன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இவர்களுக்குள் சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருக்க முடிவு செய்தாள். இதற்காக பூலோகம் வந்த அவள் ஒரு வில்வ வனத்தில் தவமிருக்க தொடங்கினாள். அம்பாள் பூமிக்கு வந்து விட்டதால், அவளுடன் தேவ மாதர்களும் பசுக்கள் வடிவில் அவர்களுடன் வந்து அந்த வனத்தில் தங்கினர். அம்பாள் அக்னி வளர்த்து, அதன் நடுவே ஒற்றை விரலை ஊன்றி நின்று கொடிய தவமிருந்தாள். இதையடுத்து, சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின் சிவன் அங்கே சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். கோவில் எழுந்த முறை: நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். இந்தத் தகவல் பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோவில் எழுப்பினான். ஆரம்பத்தில் சங்கரநயினார் கோவில், சங்கர நாராயணர் கோவில் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தக் கோவில் சங்கரன்கோவில் என மாறி விட்டது.சங்கர நாராயணர்: சிவன், அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னிதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி ஆகியவை உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சன்னிதியில் காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இந்த சன்னிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு அன்று அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார். இந்த விழா 12 நாட்கள் நடக்கும். விழாவின் கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருக்கும் காட்சி நடக்கும். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருகிறார்.கோமதி அம்மன்: இங்குள்ள கோமதி அம்மன், சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்டவள். அவள் பசுக்களுடன் இங்கு தவமிருக்க வந்ததால், 'கோமதி' என்று பெயர் பெற்றாள். ஆவுடையம்மை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. 'கோ' மற்றும் 'ஆ' சொற்களுக்கு 'பசு' என்று பொருள். பசுக்களை உடையவள் என்பதால் இவளை கோமதி என்கின்றனர். இவளுக்கு திங்கள்கிழமைகளில் மலர்ப் பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிக்கின்றனர். திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் இவளுக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.வைகுண்ட ஏகாதசி: இது சிவன் கோவிலாயினும். இங்கே நாராயணரும் எழுந்தருளியுள்ளதால் மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. கோவிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும். அதன் வழியாக பல்லக்கில் வரும் மகாவிஷ்ணு ரதவீதி சுற்றி வருவார். அன்னாபிஷேக சிறப்பு: ஐப்பசி பவுர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு. ஆனால், இங்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர். துவங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், புண்ணிய கால துவக்கம் என்பதால் ஐப்பசி முதல் நாளிலும் இந்த அபிஷேகத்தை செய்கிறார்கள்.பல் வலிக்கு வழிபாடு: சிவன் சன்னிதி கருவறை சுற்றுச்சுவரின் பின்புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இங்கு 'யோக நரசிம்மர்' இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.புற்று வடிவ சன்னிதி: சிவன் சன்னிதி பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சன்னிதியில், தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது வன்மீகநாதர் அமர்ந்திருக்கிறார். இது ஒரு அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக்கொள்கிறார்கள். இச்சன்னதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் இருக்கிறது. பக்தர்கள் இச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள். இங்கு புற்றுமண் பிரசாதம் தரப்படுகிறது. இதைக் கரைத்துக் குடித்தால் வயிற்றுவலி மற்றும் பிறநோய்கள் தீருமென பக்தர்கள் நம்புகின்றனர். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்பு தொல்லை இருந்தால் அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.ஸ்ரீசக்ரத்தில் அமரலாம்: அம்பாள் கோவில்களில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னிதி முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, 'ஆக்ஞா சக்ரம்' என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த சக்ரத்தின் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.சர்ப்ப விநாயகர்: இக்கோவிலில் 'சர்ப்ப விநாயகர்' கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிறு ராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் வேண்டிக்கொள்கின்றனர்.இருப்பிடம்: மதுரையில் இருந்து 120 கி.மீ., திருநெல்வேலியில் இருந்து 56 கி.மீ.,நேரம்: காலை 5.00 - 12.30, மாலை 4.00 - இரவு 9.00மணி. தொலைபேசி: 04636 - 222 265.