உறுதியான மனம் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு விடியலும் பொற்காலமே!
* உறுதியான மனம் கொண்டவனே துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலும், பொற்காலத்தை அனுபவிப்பவனுமாக இருப்பான். அவனுக்காகவே காலையில் சூரியன் வெளிச்சத்தைப் பரப்புகிறான்.* தவறை ஒப்புக்கொண்டு மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால், மனம் பால் போல தெளிவடையும். வெண்மைக்கு உண்டோ கள்ளச்சிந்தை என்று இதன் பெருமையைக் குறிப்பிடுவார்கள். * தர்மத்தை விட்டு விலகாதவனே எல்லா உயிர்களையும் நேசிப்பான். ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய ஓடோடி வருவான். * பிறர் செய்த குற்றத்தை மன்னிக்கும் மனம் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும். மன்னிக்கும் குணத்தால் அச்சம் அகலும். மனத்தூய்மையும் பெருகும். * பிறர் பொருளைக் கண்டு ஆசைப்படுபவன் வாழ்வில் திருப்தி அடைய முடியாது. நாளடைவில் அவன் இந்த தாழ்ந்த குணத்தின் பிடியில் சிக்கி சுதந்திரத்தை இழப்பான். * வேடிக்கையாகவோ, கோபத்தினாலோ, பண ஆசையினாலோ, பிறருக்கு பயந்தோ மனிதன் பொய் பேசத் தொடங்குகிறான். எந்த சூழலிலும் பொய் பேசாதவனே உலகில் சான்றோனாக மதிக்கப்படுவான்.* உண்மையே உள்ளத்தை சுத்தமாக்கும். உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. அதனால் பொய்யை விலக்கி விட்டு உண்மையின் பாதையில் செல்லுங்கள்.* பட்டினி, நோய், கவலையால் வாடுபவர்களுக்கு தேவையான உணவும், மருந்தும் கொடுத்து உதவுங்கள். அவர்கள் மனம் மகிழும் விதத்தில் ஆறுதல் மொழிகளைக் கூறுங்கள்.* பேராசை படைத்தவனுக்கு இந்த உலகம் முழுவதையும் பரிசளித்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருப்பவன் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.* கூட்டு முயற்சியால் கிடைத்த பொருளை கூட்டாளிகளுக்கும் பகிர்ந்தளியுங்கள். சுயநலம் சிறிதுமின்றி பொது நலத்துடன் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.* தேவைக்கு மேல் கிடைத்த பணத்தை சேமிப்பதை விட, தேவையுள்ளவனுக்கு கொடுங்கள். பணம் சேரச் சேர மனிதனிடம் ஒழுக்கம், நேர்மை குறைந்து விடும். * வாழ்க்கையை நம் விருப்பம் போல நீட்டிக்க முடியாது. இந்த குறுகிய காலத்தை நம் முன்னேற்றத்திற்கும், பிறர்நலனுக்கும் பயன்படுத்துங்கள்.* நல்ல நம்பிக்கையின்றி நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு இல்லாமல் நல்லொழுக்கம் உண்டாகாது. அதனால் மனிதன் எப்போதும் நல்ல நம்பிக்கை கொண்டவனாக இருப்பது அவசியம்.சொல்கிறார் மகாவீரர்