உள்ளூர் செய்திகள்

அப்பா பைத்தியசுவாமி

சேலம் பழைய சூரமங்கலத்தில், 'அப்பா பைத்திய சுவாமி...' என்ற வித்தியாசமான பெயர் கொண்ட மகானுக்கு கோயில் உள்ளது. தியானம் செய்ய பக்தர்கள் இங்கு வருகின்றனர்.தல வரலாறு: அப்பா பைத்திய சுவாமி திண்டுக்கல் அருகே உள்ள கருவூர்கோட்டை ஜமீனில் 1859 சித்திரை 28ல் பிறந்தார். ஆன்மிகத்தால் கவரப்பட்டு, ஜமீனுக்குரிய ஆடம்பரத்தை துறந்தார். 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி பழநி சென்றார். அழுக்கு சுவாமிகள் என்பவரை குருவாக ஏற்று ஆன்மிகப் பயிற்சி பெற்றார். சுவாமிகளிடம் பெற்ற ஞானத்தால், அனைவரையும் பாகுபாடின்றி ஒன்று போல் நடத்தினார். ஏழைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தல், நாடி வருபவர்களின் மனக்குறையை போக்குதல், நோய் நீக்குதல் போன்ற அற்புதங்களைச் செய்தார். புதுச்சேரியிலும் ஆன்மிக சேவையாற்றினார்.தனக்கென்று ஒரு மடத்தை இவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. “தனக்கென்று மடம் வைத்துக் கொள்பவனும், காசை கையால் தொடுபவனும், தனக்கென்று ஒரு சீடனை வைத்துக்கொண்டிருப்பவனும் 'நான்' 'எனது' என்று பேசுபவனும் உண்மையான சந்நியாசி அல்ல” என்ற கொள்கையுடன் இருந்தார். பக்தர்கள் இவரை ஆரம்பத்தில் 'அப்பா' என்று அழைத்தனர். பக்தர்களிடம் தன்னை ஒரு 'ஆன்மிக பைத்தியம்' என்று கூறி வந்ததால் 'அப்பா பைத்திய சுவாமி' என பெயர் வந்துவிட்டது.தனது இறுதி காலத்தில் சேலத்தில் பணியாற்றினார். 11.2.2000 (141வது வயதில்) முக்தியடைந்தார். கோயில் அமைப்பு: சுவாமியின் சமாதியில் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அப்பா பைத்திய சுவாமி, விநாயகர், முருகன், வள்ளலார், அழுக்கு சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டன. 'அப்பா பைத்திய சுவாமி' பணத்தாசை இல்லாதவர் என்பதால், சீடர்கள் தாங்கள் செய்யும் தொண்டு பற்றி பேசுவது இல்லை. நன்கொடை கேட்பதில்லை. பக்தர்கள் தாங்களாக முன்வந்து தரும் உதவியை மட்டும் ஏற்பர்.விழாக்கள்: சித்திரை 28 அப்பா பைத்திய சுவாமிகளின் பிறந்தநாள் உற்சவம், தை மாத அசுவினி நட்சத்திரத்தில் குரு பூஜை, சனிக்கிழமை பக்தர்களுக்கு அன்னதானம்.எப்படி செல்வது: சேலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ.,நேரம்: காலை 5.30 - 12.30 மணி; மாலை 5.30 - 8.30 மணிதொடர்புக்கு: 0427-244 7078; 233 1974