உள்ளூர் செய்திகள்

மன நிம்மதிக்கு குணசீலம் வாங்க!

வாழ்க்கையில் பணம் இருக்கும், சொந்தம் இருக்கும். ஆனால் அவற்றால் மனநிம்மதி இருக்காது. இதை மாற்றி நிம்மதி அளிக்கும் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள், திருச்சி அருகிலுள்ள குணசீலத்தில் அருள் பாலிக்கிறார்.தல வரலாறு: திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையிலுள்ள தன் ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென தவமிருந்தார். காட்சியளித்த பெருமாள் பக்தரின் வேண்டுதலை ஏற்றார். குணசீலரின் பெயரால் இப்பகுதி 'குணசீலம்' எனப்பட்டது. ஒரு சமயம் குணசீலர் தன் சீடனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் வழிபட உத்தரவிட்டு புறப்பட்டார். அப்போது குணசீலம் காடாக இருந்ததால், வனவிலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டன. பயத்தில் சீடன் அங்கிருந்து ஓடினான். காலப்போக்கில் பெருமாள் சிலையை புற்று மூடியது.மன்னன் ஞானவர்மன் காலத்தில், அரண்மனை பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்து சென்றன. ஒருநாள் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவல் அறிந்த மன்னன் இங்கு வந்தபோது, புற்றுக்குள் பெருமாள் சிலை இருப்பது தெரிந்தது. மன்னன் சிலையைக் கண்டெடுத்து கோவில் கட்டி சுவாமிக்கு, 'பிரசன்ன வெங்கடாஜலபதி' எனப் பெயர் சூட்டினான்.பன்னிரு கருடசேவை: கோவிலை ஒட்டி காவிரி நதியும், பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. உற்ஸவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். கருவறை முன்பு உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு பெருமாள் காட்சியளித்த வைபவம் நடக்கும்.மனக்குழப்பத்திற்கு தீர்வு: மனக்குழப்பம் உள்ளோர், மன நோயாளிகள் குணம் பெற இங்கு வழிபடுகின்றனர். இவர்கள் இலவசமாக தங்க, மறுவாழ்வு மையம் ஒன்றுள்ளது. காலை, மாலையில் நோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச் செய்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை முகத்தில் தெளிப்பர்.பிரார்த்தனை தலம்: கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் வழிபட்டு பலன் பெற்றனர். கூர்ஜர தேசத்து இளவரசன் தேவதாசன் இங்கு வழிபட்டு பேசும் சக்தி பெற்றதோடு பாசுரம் பாடினான். பார்வைக் கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் உடல்நலம் பெற வேண்டிக்கொள்கின்றனர்.சிறப்பம்சம்: கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடி மரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். பிரகாரத்தில் நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர், வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.எப்படி வழி? திருச்சி- சேலம் சாலையில் 24 கி.மீ., நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணிஅலைபேசி/தொலைபேசி: 94863 04251; 04326 - 275 210, 275 310