கீதை பாதை - 6
மகாபாரதப்போரும் கொரோனா காலமும்!நமக்கு நிகழும் செயல்களுக்கு நாம் ஒரு கருவி மட்டுமே. மற்றவை எல்லாம் கடவுளின் கைகளில் இருக்கிறது. கிருஷ்ணரின் நிஜமான நிலையை அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தான் அர்ஜூனன். யானையை பார்க்க பார்வையற்ற ஒருவருக்கு கட்டாயம் கண் வேண்டும் என்பது போல, கிருஷ்ணரை அறிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள அர்ஜூனனுக்கு கூடுதல் அறிவு தேவைப்பட்டது. அந்த அறிவை கிருஷ்ணர் அளித்ததோடு அவனுக்கு விஸ்வரூப காட்சி அளித்தார். நிகழ்காலத்தில் காட்சியளித்து, எதிர்காலத்தில் வாழ்வின் எதார்த்தத்தை புரிய வைத்தார். அப்படித்தான் போர்க்களத்தில் கீதை உருவானது.போரில் வீரர்கள் மரணத்தின் வாயிலுக்கு சென்று கொண்டிருப்பது கண்டு கவலையுற்றான் அர்ஜூனன். அவனுக்கு சமாதானம் சொன்ன கிருஷ்ணர், 'போரில் வீரர்கள் இறக்கக்கூடும். அதற்கு நீ காரணமல்ல; நடக்கும் நிகழ்வுகளுக்கு நீ காரணகர்த்தா அல்ல. நீ ஒரு கருவி தான்' என்றார். 'போரில் வெற்றி கிடைக்கும் போது நீ அகங்காரம் கொள்ளக்கூடாது. வெற்றி வந்தால் தலைக்கனம் வரும்' என்றும் அவனுக்கு அறிவுரை சொன்னார். போர்க்களத்தில் இருந்து அவன் வெளியேற கிருஷ்ணர் அனுமதிக்கவில்லை.நடக்கும் செயல்களுக்கு நாம் ஒரு கருவியாக மட்டும் இருக்கிறோம் என்று புரிந்து கொள்வது உள்ளுணர்வு. அதனை அப்படியே உண்மையாய் வெளிக்காட்டினோம் என்றால் அதுவே அகங்காரமற்ற நிலை.கீதையை புரிந்து கொள்வோம்உலகையே உலுக்கிய கொரோனா நோய் கொடுமையை நாம் அறிவோம். மகாபாரத போர் நடந்தது போன்ற நிலை தான் அந்த கொரோனா காலம்!கொரோனாவால் தாக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் நாம் உள்ளேயே இருந்தோம். முதலில் அந்த புதிய நோய் பற்றி நமக்கு அறிவில்லை; மருந்துகள் பற்றி ஏதும் தெரியாது. ஒரு நிச்சயமற்ற நிலை. போர்க்களத்தில் நின்ற அர்ஜூனனின் அவஸ்தை போல! நோயாளி வீட்டினுள் ஒரு தனி உலகத்தில் வாழ்ந்த போது, நடக்கும் நிகழ்வுகளுக்கு அவர் ஒரு கருவியாய் மட்டுமே இருந்தார். என்ன செய்ய வேண்டும் என்று வெளியில் இருந்து மற்றவர்கள் இயக்கிய போது அதனை நோயாளி கேட்டு பின்பற்றினார். இந்த சின்ன புரிதல், பல தருணங்களில் கீதையை புரிந்து கொள்ள நமக்கு உதவும். வாழ்க்கையில் கடினமான நேரங்கள் நேரிடும் போது, அதனை வென்றிடும் போது, கீதையின் பல தத்துவங்கள் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது.அபரிமிதமான அழுத்தத்தில் நிலக்கரி கட்டிகள் வைர கற்களாகின்றன. அதீத தீயின் வெப்பத்தில் தங்கம் சுத்த தங்கமாகிறது. 'நடக்கும் செயல்களுக்கு நாம் ஒரு கருவி மட்டுமே' என்ற புரிதலை நம் வாழ்வின் சோதனைக்காலங்கள் எல்லாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.இந்த புரிதல் நம்மை சரணாகதியின் பாதையில், நம் உள்மனதிற்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது.-தொடரும்-கே.சிவபிரசாத், ஐ.ஏ.எஸ்.,-- தமிழாக்கம்: ஜி.வி.ரமேஷ் குமார்