கீதை பாதை - 7
நண்பனும், விரோதியும்'உனக்கு நண்பனும் நீயே; விரோதியும் நீயே' என்கிறார் கீதையில் பகவான் கிருஷ்ணர்.இதனை ஒரு சிறு விஷயம் மூலம் விளக்கலாம். வாய்பகுதி குறுகலான, கை நுழைய சிரமமான ஒரு மண் ஜாடியில் பாதியளவு உலர்பருப்பு வகைகள் இருந்தன. அதனுள்ளே கஷ்டப்பட்டு கைகளை நுழைத்து, பருப்பு வகைகளை கையில் முழுவதுமாக சேர்த்து வெளியே எடுக்க முயற்சித்தது ஒரு குரங்கு. ஆனால் கையை எடுக்க முடியவில்லை. அதற்கு பதிலாக சிறிதளவு பருப்பை மட்டும் எடுத்திருந்தால், கை உள்ளே போனது போலவே வெளியே வந்திருக்கும். இது வெளியே இருந்து பார்க்கும் நமக்கு தெரியும். ஆனால் அந்த நேரத்தில் அப்படி சிந்தித்து செயலாற்ற 'குரங்கு மனம்' முயற்சிக்கவில்லை. மாறாக ஜாடிக்குள் பருப்பு வகைகளை வைத்து, நம்மை யாரோ சிக்க வைக்கிறார்கள் என எண்ணி, அப்படியே அனைத்தையும் எடுத்து விட வேண்டும் என்று நினைத்தது.எந்த அறிவுரை சொன்னாலும், பருப்பை எடுக்கும் முயற்சியில் இருந்து குரங்கு பின்வாங்க போவதில்லை. மாறாக மற்றவர்கள் அபகரித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறது.குரங்கை யாரும் சிக்க வைக்கவில்லை. பேராசை காரணமாக மாட்டிக்கொண்டது. உள்ளங்கை நிறைய பருப்பை வைத்து கையை வெளியே எடுக்க முடியாத செயல் குரங்கின் எதிரி. சிறிதளவு வைத்துக்கொண்டு கையை எளிதாக்கி வெளியே எடுக்கும் செயல் நண்பன். எதிரியா, நண்பனா என்பதை குரங்கே தீர்மானிக்கிறது. அதாவது நமக்கு நாமே நண்பன்; நமக்கு நாமே எதிரி. இதை தேர்வு செய்வது நாம் தான்.வாழ்க்கையில் நாம் பல விஷயங்களில் சிக்கி கொள்கிறோம். அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறோம். எடுக்க முயற்சிக்கும் அந்த பருப்பு வகைகள் வேறொன்றும் அல்ல. 'நான், எனது, என்னுடைய, எனக்கு, என்னால்' என்ற நினைப்பு தான். அகங்காரம் என்ற உள்ளங்கைக்குள் இவை சிக்கி இருக்கின்றன. கையை மூடினால் உள்ளேயே இருக்கும். கையை திறந்தால் வெளியே சென்று விடும். 'என்னால் தான்' என்ற அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும் என்று கீதை நமக்கு அறிவுரை கூறுகிறது. என்னால் தான் நடக்கிறது என்ற அகங்காரத்தை விட்டொழித்தால், பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட முடியும். நம்மை நாமே உணரும் போது, நம்மை சிக்க வைக்கும் தந்திர பொறிகளில் இருந்து தப்பிக்க இயலும்.-தொடரும்-கே.சிவபிரசாத், ஐ.ஏ.எஸ்.,-- தமிழாக்கம்: ஜி.வி.ரமேஷ் குமார்