உள்ளூர் செய்திகள்

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முன்னோர்களை வணங்க வேண்டும். அதிலும் மறைந்தவர்களுக்கு நன்றிகூறும் விதமாக பித்ரு வழிபாடு செய்வது அவசியம். இதற்கு ஏற்றாற்போல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் திருவல்லத்தில் உள்ளது பரசுராமர் கோயில். இங்கு அமாவாசையன்று பலரும் தர்ப்பணம் கொடுப்பார்கள். மஹாவிஷ்ணு எடுத்த ஆறாவது அவதாரம் பரசுராமர். பூலோகத்தில் சத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவர். சிவபெருமானை நோக்கித் தவம் செய்து 'பரசு' என்ற கோடரியைப் பெற்றவர். தந்தையின் சொல்லை காப்பாற்றியவர் என பல பெருமைகளை கொண்டவர்தான் இவர். கூடவே தன் தாயை கொன்றவர் என்ற பழிச்சொல்லையும் பெற்றவர். எதற்காக இவர் இப்படி ஒரு செயலை செய்தார் தெரியுமா. இவரது பெற்றோர் ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி. தன் கணவனையே கண் கண்ட தெய்வமாக போற்றியவர் ரேணுகாதேவி. தினமும் கணவரின் பூஜைக்காக குளத்திற்கு சென்று தண்ணீர் கொண்டு வருவார். ஒருமுறை இப்படி தண்ணீர் எடுக்கும்போது, குளத்தில் ஒருவரது முகத்தைப் பார்த்தார். இதனால் கற்புநெறி தவறியது. ஜமதக்னி முனிவர் இதை அறிந்ததும், ரேணுகாதேவியை கொல்லும்படி தன் மகன் பரசுராமரிடம் சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார். பின் தனது தவறை உணர்ந்தவர், பரசுராமரிடம் வேண்டிய வரத்தை கேள் என்றார். அவரும் தன் தாய் திரும்பி உயிருடன் வரவேண்டும் என்று வேண்டினார். முனிவரும் அப்படியே அருளினார். இருந்தாலும் பெற்ற தாயை கொன்றது மாபெரும் பாவம்தானே. இதனால் தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். இறுதியாக சிவபெருமானின் கட்டளைப்படி கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு லிங்கம் கிடைக்கவே அதை பிரதிஷ்டை செய்து தோஷம் நீங்க பெற்றார். இவருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவரும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்துள்ளனர். இப்படி தாய்பாசத்தில் திளைத்த பரசுராமர், தன் தாய்க்கு இங்குதான் தர்ப்பணம் கொடுத்துள்ளார். இதனால் இத்தலம் 'தட்சிண கயை' என அழைக்கப்படுகிறது. அவர் மட்டும் அல்ல. ஞானியான ஆதிசங்கரரும் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இங்குதான் தர்ப்பணம் கொடுத்துள்ளார். இப்படி பல சிறப்புகளை கொண்டுள்ளது இத்தலம். இங்கு பரசுராமர் நின்று வழிபட்ட இடத்தில் அவரது பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது. உடல்நலம், மனநிம்மதி வேண்டி பக்தர்கள் இந்த பீடத்திற்கு பூஜை செய்கின்றனர். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். எப்படி செல்வது: திருவனந்தபுரத்தில் இருந்து 15 கி.மீ., விசேஷ நாள்: ஆடி, மஹாளய, தை அமாவாசை, பரசுராமர் ஜெயந்திதொடர்புக்கு: 0471 - 238 0706நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 4:00 - 7:00 மணிஅருகிலுள்ள தலம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் 4 கி.மீ., நேரம்: அதிகாலை 4:30 - 12:30 மணி; 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 0471 - 245 6456; 246 3130