நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
* கடவுளின் திருவடியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அனைத்து பிரச்னைகளையும் அவரிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர் நடத்தும் நாடகத்தில் நாமெல்லாம் வெறும் நடிகர்கள்.* கடிகாரத்தின் முட்கள் 'டிக் டிக்' என்று தொடர்ந்து ஒலிப்பது போல எப்போதும் கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்து வாருங்கள். எல்லா நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள்.* ஜபிப்பதற்கு காலை, மாலை இரண்டுமே ஏற்ற நேரங்கள். நேரம் எதுவாக இருந்தாலும் மனம் ஒன்றி ஜபிப்பது அவசியம். ஒருநாள் கூட ஜபம் செய்யாமல் இருப்பது கூடாது.* தூய்மையான மனம் படைத்தவர்கள் உலகிலுள்ள அனைத்தையும் தூய்மையாகவே பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.* வாழ்வில் கஷ்டங்கள் வந்தாலும் அவை நீடித்துக் கொண்டிருப்பதில்லை. அவை பாலத்தின் அடியில் ஓடும் நீரைப் போல ஓடி மறைந்து விடும்.* யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.* சாதாரண மனிதன் இந்த உலகை விட்டுச் செல்லும் போது அழுகிறான். ஆனால், மகான்கள் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.* உண்மையான துறவிக்கு மட்டுமே பணத்தின் மீதுள்ள ஆசையை வெல்லும் சக்தி இருக்கிறது. மற்றவர்களை எல்லாம் பணம் ஆட்டிப் படைக்கிறது.* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். சுற்றியுள்ள மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு துணை நில்லுங்கள்.* உலகில் கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய். இந்த உண்மையை மனிதன் உணர்ந்து கொண்டால், அவனுக்கு மகிழ்ச்சி தவிர வேறு ஏதுமில்லை.* எப்போதும் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபடுங்கள். முயற்சி இல்லாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை.* துன்பம் என்பதும் கடவுளின் பிரசாதம். அதுவும் உங்களை நல்வழிப்படுத்தவே கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது.* நட்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. சமயத்தில் எச்சரித்து திருத்தும் கடமையும் உண்மையான நட்புக்கு இருக்கிறது.* கல்வியால் மனிதன் தானும் மேன்மை அடையலாம். மற்றவர்களையும் மேன்மை அடையச் செய்யலாம்.* மனதை அடக்கப் பழகுங்கள். பிறரது அந்தரங்கம் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாதீர்கள்.* கடவுள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். அறிவைக் கொண்டு அவரை அளக்க முற்படாதீர்கள்.* மதம் பிடித்த யானையைப் போல மனம் செயல்படுகிறது. தியானத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.சொல்கிறார் சாரதாதேவியார்