தாயாகிக் காப்பவளாம் காவிரி
காவிரி நதி கரைபுரண்டு ஓடும்பகுதியில் அன்றைய சோழ தேசம் செழித்திருந்தது. குடகு மலையில் பிறந்து வரும் வழியெங்கும் உள்ள வயல் பரப்புகளை வளமாக்கி கடலில் கலக்கிறாள் காவிரித்தாய். இப்படி நீண்ட துாரம் ஓடுவதால் என்னவோ இவளுக்கு சோர்வு ஏற்பட்டது. உடனே ஒரு கற்சிலையாக மாற முடிவெடுத்தாள். அவள்தான் திருச்சியில் உள்ள காவிரி அம்மன். பல வருடங்களுக்கு முன் காவிரி பரந்து, விரிந்து ஓடியுள்ளது. மழைக்காலம் வந்தால்போதும். சுற்றியுள்ள ஊர்கள் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துவிடும். இதுபோல் ஒரு சமயம் வெள்ளத்தில் ஓர் அம்மன் சிலை கரை ஒதுங்கியது. அன்று முதல் இந்த அம்மனை கரையோரமாக வைத்து வழிபட்டு வந்தனர். இதனால் இவள் 'காவிரி அம்மன்' ஆனாள். இப்பகுதியில் கோடைக் காலத்தில் நீர் வளம் குறைந்தால், இந்த அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தால் போதும். இவளே மழையை பொழியச் செய்து விடுவாள். ஆழ்குழாய்க் கிணறு, குளம் வெட்டுவதற்கு முன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர் பக்தர்கள். கிணறு தோண்டப்போகும் இடத்தில் இத்தீர்த்தத்தை தெளித்து பூஜை செய்தால் நீர்வளம் நிறைந்து காணப்படும். ஆடிப்பெருக்குதான் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலின் சிறப்பு காவிரி அம்மன் முன் நந்தி இருக்கிறது. இதற்கு 'அதிகார நந்தி' என்று பெயர். இந்த நந்தி நேராக அம்மனைப் பார்த்து இல்லாமல், சற்று வலதுபுறம் திரும்பியது போல் காட்சி தருகிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அம்மனின் இடப்புறம் நாகர், வலப்புறம் விநாயகர் உள்ளனர். எப்படி செல்வது: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வடக்கில் உள்ளது. விசேஷ நாள்: ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பெருக்கு நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிஅருகிலுள்ள தலம்: சமயபுரம் மாரியம்மன் கோயில் நேரம்: அதிகாலை 5:30 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 0431 - 207 0460, 267 0460