செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி குபேரர்
செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி குபேரர், சென்னை வண்டலூர் ரத்தினமங்கலத்தில் கோவில் கொண்டிருக்கிறார். அட்சய திரிதியை அன்று இவரைத் தரிசித்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும். தல வரலாறு : பிரம்மாவின் மகனான புலஸ்தியருக்கும், திருவண விந்து என்பவரின் மகளுக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இவரது மகனே குபேரன். இவரது மாற்றாந்தாயின் மகனாகப் பிறந்தவன் ராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான். குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரன் இலங்கையில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்தே, ராவணன் பல சோதனைகளைச் சந்தித்தான்.குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டான். அவரது பக்திக்கு மெச்சிய சிவன், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், 'ஆகா.... இப்படி ஒரு தேவியை இதுநாள் வரை பார்த்ததில்லையே' என்று மனதிற்குள் எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் கண் துடித்தது. இதைப் பார்த்து பார்வதி கோபம் கொண்டாள். குபேரனின் கண் பார்வை போய்விட்டது. குபேரன் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் மன்னித்தாள். ஆனால், போன பார்வை திரும்பவில்லை. அவன் மீது இரக்கம் கொண்ட சிவன் சிறிய கண் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். அத்துடன் எட்டு திசைக் காவலர்களில் ஒருவராக நியமித்தார். லட்சுமி தேவி அவனுக்கு தனது செல்வம் மற்றும் தானியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை வழங்கினாள்.லட்சுமி குபேரபூஜை: இடது கையில் சங்க நிதி, வலது கையில் பதும நிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமியுடனும், துணைவி சித்தரிணீயுடனும் குபேரன் கருவறையில் காட்சியளிக்கிறார். செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், குபேரரையும் ஒருசேர தரிசித்தால் செல்வ வளம் உண்டாகும். இழந்த பணம், சொத்து விரைவில் கிடைக்கும். திருப்பதி செல்லும் முன் இத்தலத்திற்கு வந்து தரிசிப்பது சிறப்பு. வளமான வாழ்வு பெற இங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை நடத்துகின்றனர். பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக் குமரன், யோக ஆஞ்சநேயருக்கு சன்னிதிகள் உள்ளன. இருப்பிடம்: சென்னை தாம்பரத்தில் இருந்து வண்டலூர் வழியாக கேளம்பாக்கம் செல்லும் சாலையில் 16 கி.மீ.,திறக்கும் நேரம்: காலை 6.00 - மதியம் 1.00 மணி, மாலை 4.00 - 8.00 மணி. அமாவாசை, பவுர்ணமியன்று காலை 6.00 - இரவு 8.00 மணி.அலைபேசி: 94440 20084