லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே
உலகில் அதர்மம் பெருகும்போதெல்லாம் அவதாரங்களை எடுத்தவர் பெருமாள். இதில் மீன், கூர்மம், வராகம் போன்ற அவதாரங்களின் மூலம் தீமையை அழித்தார். வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்களின் மூலம் மனிதர்கள் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் நரசிம்மரோ மனிதமும் விலங்கும் சேர்ந்த அவதாரம். அதாவது தீமையை அழிக்கும் பராக்கிரமமும், பக்தனைக் காக்கும் கருணையும் கொண்ட அழகிய வடிவம். இவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் காட்டழகிய சிங்கராக அருள்புரிகிறார். முற்காலத்தில் இப்பகுதி காடாக இருந்ததால், யானைகளின் தொந்தரவை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடினர். யானைகளை விரட்டுவதோ இயலாத விஷயம். அழிக்க நினைப்பதோ பாவச்செயல். என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தனர். அப்போது நரசிம்மருக்கு கோயில் எழுப்பி வழிட்டதால் யானைகளின் தொந்தரவு குறைந்தது. எனவே இந்தப்பெருமாள், 'காட்டழகிய சிங்கர்' எனப்பட்டார்.பொதுவாக கிழக்கு பார்த்திருக்கும் பெருமாள், இங்கு மேற்கு பார்த்து அருள்புரிகிறார். கர்ப்பகிரகத்தில் 8 அடி உயரத்தில் மகாலட்சுமி தாயாரை இடது மடியில் அமர்த்தியபடி உள்ளார் லட்சுமி நரசிம்மர். இடது கை தாயாரை அணைத்திருக்க, வலது கையில் அபய முத்திரையைக் காட்டுகிறார். மேல் இரு கைகள் சங்கு சக்கரத்தை ஏந்தியபடி உள்ளன. வெள்ளியினால் அமைந்த பற்களின் அமைப்பு அவரது கருணையை காட்டுகிறது. கடன் பிரச்னை, மனஅமைதியின்றி துன்பப்படுவோர் பானகம், வெண்ணெய் கலந்த தயிர் சாதத்தை நைவேத்தியம் செய்தால் பிரச்னை தீரும். திருமகளான மகாலட்சுமியை மடியில் தாங்கிய இவரை வணங்கினால் ஐஸ்வர்யம் உண்டாகும். சுவாதி நட்சத்திரம் பெருமாளின் ஜென்ம நட்சத்திரம். அன்று பெருமாளுக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்நாளில் வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும். இங்கு மண்டப சுவர்களில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், அனந்த நரசிம்மர் போன்ற பல வடிவங்களில் அழகிய சிங்கர் வரையப்பட்டுள்ளார். ராமானுஜருடைய சீடரும், ஸ்ரீரங்கத்தில் பிறந்தவருமான பிள்ளை லோகாச்சாரியார் இக்கோயிலில் இருந்து 'ஸ்ரீவசநபூஷணம்' முதலிய 18 ரகசிய கிரந்தங்களை இயற்றியுள்ளார். எப்படி செல்வது: திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து 3 கி.மீ., விசேஷ நாள்: நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதியில் தைலக்காப்பு நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 94432 24466, 0431 - 243 2246அருகிலுள்ள தலம்: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் 5 கி.மீ.,நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணிதொடர்புக்கு: 0431 - 270 4621, 270 0971