நடக்கப்போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்
* ஆன்மிகத்தில் சாதிக்க ஏற்றது இளமைக்காலமே. தன்னம்பிக்கை இழக்காமல் மனம் ஒன்றி பிரார்த்தனையில் ஈடுபட்டால் கடவுள் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும். * நீ ஒரு பொருளை மதித்தால் மட்டுமே அந்த பொருளும் உன்னை மதிக்கும். எந்த வேலையையும் துச்சமாக கருதாமல் அதற்குரிய மதிப்பை வழங்கி கற்றுக் கொள். * மனதில் அமைதி நிலைத்திருக்க விரும்பினால் மற்றவரின் குறைகளைப் பற்றிச் சிந்திக்காதே. அகிலம் முழுவதையும் அன்பால் உந்தன் சொந்தமாக்கிக் கொள்.* உலகிலுள்ள பிரச்னை அனைத்திற்கும் பணமே மூலகாரணம். பணம் மனிதனின் மனதை சலனப்படுத்தி பாவம் செய்யத் தூண்டுகிறது.* கீழ்நோக்கிப் பாயும் நீர் போல, மனம் அற்ப விஷயங்களில் நாட்டம் கொள்கிறது. அதை தடுத்து நிறுத்தி உயர்ந்த விஷயங்களில் ஈடுபடுத்த முயற்சியுங்கள். * நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள். இந்த இரண்டும் இருந்து விட்டால் எல்லாம் உலகில் இருந்த மாதிரி தான்.* உடன் இருப்பவர்களுக்கு உன்னால் மகிழ்ச்சியளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.* கடவுளை நேசித்தால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவனே உலகின் சிறந்த புண்ணியவான்.* சோம்பலினால் உடல் மட்டுமல்ல. மனமும் கெட்டு விடுகிறது. எப்போதும் சுறுசுறுப்புள்ள பணியில் ஈடுபட்டால் சோம்பல் இடம் தெரியாமல் மறைந்து விடும்.* கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைப்பது கூடாது. அவன் விலங்கு நிலைக்கு தன்னை தாழ்த்திக் கொள்கிறான். * தவறு செய்வது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தால் துன்பமே உண்டாகும். தவறைத் திருத்திக் கொள்வதே சிறந்த பண்பாகும்.* மனதில் தூய்மை இருக்குமானால் பார்க்கும் காட்சியனைத்தும் பரிசுத்தமானதாகவே இருக்கும். மனதைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது என்பதை மறப்பது கூடாது.* பேச்சினால் பிறர் மனதைப் புண்படுத்துவது நல்லதல்ல. சுடுமொழிகளைப் பேசுவதால் மனிதனின் சுபாவம் கொடுமையானதாகி விடும்.* சந்தனம் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, கடவுளைத் தியானிக்கும் மனதில் பக்திமணம் கமழ்ந்து கொண்டே இருக்கும்.* தியானம், தவம் செய்வதால் மட்டுமே கடவுளின் அருளைப் பெற்று விட முடியும் என்பது உறுதி கிடையாது. விலை கொடுத்து வாங்க கடவுள் ஒன்றும் காய்கறி அல்ல.* கடவுளின் திருவடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் உலகில் எதற்காகவும், யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியமிருக்காது.வாழ்த்துகிறார் சாரதாதேவியார்