விரும்பியவரை மணக்க பூப்பறிக்க போவோமா!
திருமணத்தடை நீங்கவும், விரும்பிய வாழ்க்கைத் துணையை அடையவும் 'பூப்பறித்தல் நோன்பு' என்னும் சடங்கைச் செய்ய கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியிலுள்ள ரத்தினகிரி முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். தல வரலாறு: சிவனை நோக்கி யுகங்கள் பல தவம் இருந்த அசுரன் ஒருவன், எல்லா உலகங்களையும் அடக்கி ஆளும் வரம் பெற்றான். இதனால் ஆணவம் கொண்டு, தேவர்களைக் தொடர்ந்து கொடுமைப்படுத்தினான். பயந்து போன தேவர்கள் மறைவாக வசித்து வந்தனர்.ஆனாலும், அசுரன் தேவர்களின் தலைவனான இந்திரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க, அங்கிருந்து இந்திரன் தப்பி, ரத்தினகிரி மலை மீது ஏறி, மறைந்து கொள்ள இடம் தேடினான். முருகப்பெருமான் அவனை மயிலாக மாற்றி, தனது வாகனமாக மாற்றிக் கொண்டார். இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவன் இல்லாததைக் கண்டு திரும்பிச் சென்றான். இதையே இந்திர மயில் என்பர். ஏற்கனவே முருகப்பெருமான் சூரபத்மனை ஆட்கொண்டு, அவனை மயிலாக மாற்றி வாகனமாக வைத்திருந்தார். இதை அசுர மயில் என்பர். இந்திர மயில் முருகனுக்கு இடப்புறமாகவும், அசுர மயில் வலப்புறமாகவும் இருக்கும்.தல பெருமை: முருகனின் தீவிர பக்தை ஒருத்தி நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியம் இன்றி வருந்தினாள்.தினமும் ரத்தினகிரி முருகனை தரிசித்து குழந்தை வரம் தரும்படி விரதம் மேற்கொண்டாள். ஒருநாள், கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வரும் போது அங்கிருந்த ஆடுமேய்க்கும் சிறுவன், அழுவதற்கான காரணத்தைக் கேட்க, அவள், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறினாள்.உடனே சிறுவன் விபூதியை எடுத்து கொடுத்து, சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி, வலம் வந்த அவள் சிறுவனைக் காணாது அதிர்ந்தாள். இச்சம்பவம் நிகழ்ந்த சில நாட்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்தது முருகப்பெருமான் என புரிந்து கொண்டாள். பூப்பறித்தல் சடங்கு: இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தி அருட்காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் பெரிய பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். இங்கு கந்தசஷ்டியன்று நடக்கும் 'பூப்பறித்தல் நோன்பு' எனப்படும் திருவிழா புகழ்மிக்கது. விரும்பிய வாழ்க்கைத்துணை அமையவும், திருமணத்தடை நீங்கவும், திருமணமாகாதவர்கள் முருகனுக்கு பூப்பறித்து வழிபாடு செய்கின்றனர்.திருவிழா: அமாவாசை, கிருத்திகை, காணும்பொங்கல், தைப்பூசம், வைகாசி விசாகம்.எப்படி செல்வது: கோவை-சத்தியமங்கலம் சாலையில் 11 கி.மீ., தூரத்தில் சரவணம்பட்டி. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில். ஆட்டோ, வாடகை கார் வசதி உண்டு.நேரம்: காலை 6:00 - 2:00 மணி; மாலை 4:00 - 7:30 மணிதொடர்புக்கு: 0422 553 5727