உள்ளூர் செய்திகள்

பல்லி தரிசனம்

சத்யவிரத ‌க்­ஷேத்திரம் என்று போற்றப்படும் திவ்யதேசம் காஞ்சிபுரம். இங்கு பெருமாள், வரதராஜர் என்னும் பெயரில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இங்குள்ள தங்க,வெள்ளி பல்லிகளைத் தரிசித்தால் பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

சரஸ்வதியின் துணையில்லாமல் யாகம் நடத்தத் தொடங்கினார் பிரம்மா. அதை நடத்த விடாமல் சரஸ்வதி வேகவதி என்னும் நதியாக பெருக்கெடுத்து ஓடினாள். திருமாலே அதைத் தடுத்து நிறுத்தினார். பின் திருமாலை நோக்கி பிரம்மா தவம் செய்ய, அக்னி சொரூபமாக வந்து யாகம் தொடர அருள்புரிந்தார். யாகமுடிவில் அவிர்பாகத்தை ஏற்று கேட்ட வரத்தை அருளினார். ('வரதராஜர்' என்றால் 'வரம் அருள்பவர்களில் முதல்வர்' என்று பொருள்). இந்த நிகழ்வின் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் வரதராஜருக்கு கோயில் எழுப்பப்பட்டது.

சிறப்பம்சம்:

புண்ணியகோடி விமானத்தின் கீழ் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் பெருமாளுக்கு பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்னும் திருநாமங்கள் உண்டு. பெருந்தேவித் தாயாரும் தனிசந்நிதியில் காட்சிதருகிறாள். திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்,பேயாழ்வாரால் பாடப்பட்டது. ஆளவந்தார், ராமானுஜர், சுவாமிதேசிகன், மணவாள மாமுனிகள், திருக்கச்சிநம்பி, பெரியநம்பி ஆகிய அருளாளர்கள் வாழ்வோடு தொடர்புடைய தலம். இங்கு இட்லி பிரசாதம் விசேஷம்.

பல்லி தரிசனம்:

சிருங்கிபேரரின் புதல்வர்களான ஹேமன், சுக்லன் என்னும் இருவரும் கவுதமரிஷியின் சீடர்கள். ஒருநாள், இவர்கள் பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை எடுத்து மூடாமல் வைத்து விட்டனர். அபிஷேகநேரத்தின் போது, அதை குருவிடம் கொடுக்க அதனுள் விழுந்து கிடந்த பல்லி குதித்து ஓடியது. இந்த அலட்சிய செயலால் கோபமடைந்த கவுதமர், அந்த சீடர்களைப் பல்லியாக மாறும்படி சபித்து விட்டார்.அவர்கள் சாபவிமோசனம் கேட்ட போது, காஞ்சி வரதரை தரிசித்தால் பாவம் தீரும் என்றார். அவர்களும் காஞ்சி வந்து தவம் செய்து சாபம் நீங்கினர். அதன் அடிப்படையில் தங்கம், வெள்ளியால் ஆன பல்லிகளை பிரதிஷ்டை செய்தனர். இவற்றைத் தரிசித்தால் பாவ நிவர்த்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

தங்கஆரம் அளித்த ஆங்கிலேயர்:

ஆங்கிலேயர் காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட்கிளைவ் ஆற்காடு நவாபைச் சந்திக்கப் புறப்பட்டான். இரவு நேரமாகி விட்டதால் காஞ்சிபுரத்தில் தங்க நேர்ந்தது.அப்போது அவனுக்கு வயிற்றுவலி உண்டானது. அவனால் தாங்க முடியவில்லை. கோயிலில் இருந்த பட்டரின் உதவியோடு வரதராஜப்பெருமாளின் தீர்த்தத்தை கிளைவ் அருந்த வயிற்றுவலி காணாமல் போனது. நன்றியுணர்வுடன் மகரகண்டிகை என்னும் ஆரத்தை பெருமாளுக்கு காணிக்கையாக்கினான். கருடசேவை, தேர்த்திருவிழா ஆகிய நாட்களில் இந்த கண்டிகை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

திறக்கும்நேரம்:

காலை 6- பகல்12, மாலை4- இரவு8

இருப்பிடம்:

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2கி.மீ.,

போன்:

044- 2726 9773- சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை.