சூரிய ஒளியை பாருங்க! நூறாண்டு காலம் வாழுங்க!
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறையில் சாரபரமேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இவரை பூஜிக்கும் விதமாக உதய நேரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் சுவாமி மீது பிப்.25 முதல் மூன்று நாள் விழுகிறது. இதைத் தரிசித்தால் நோயின்றி நூறாண்டு காலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். பிறகென்ன! இந்தக் கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு கிளம்பி விட வேண்டியது தானே!தல வரலாறு: சிவனை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில், சூரியன் பங்கேற்றார். இதனால் சிவநிந்தனைக்கு ஆளானார். இதற்கு பரிகாரம் தேடி பல சிவத்தலங்களில் வழிபட்டார். இதில் சாரபரமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இங்குள்ள சுவாமி, அம்மன் மீது சூரியன் பூஜிக்கும் விதத்தில் பிப்.25,26,27ல் (மாசி 13, 14, 15) சூரியஒளி விழுகிறது. சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக படுவது குறிப்பிடத்தக்கது. அப்போது சூரிய பூஜை சிறப்பாக நடக்கும். இதைத் தரிசித்தவர்கள் நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்வர் என்பது ஐதீகம். சேற்றூர் என்று அழைக்கப்பட்ட இத்தலம் காலப்போக்கில் சேறை என்றானது. தேவாரப் பாடல்களில் வயல்களால் சூழப் பெற்ற ஊர் என்னும் பொருளில் 'வளநகர்' என வழங்கப்படுகிறது. சிறப்பம்சம்: மூலவர் சாரபரமேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடப்புறம் அம்பிகை ஞானவல்லிஅம்மனுக்கு சன்னிதி உள்ளது. நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கையை அருள்பவர் என்பதால் 'செந்நெறியப்பர்' என்றும், அதற்குரிய ஞானத்தை அருள்பவளாக அம்பிகை இருப்பதால் 'ஞானவல்லி' என்றும் பெயர் பெற்றனர்.கடன் தீர்ப்பவர்: என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய முனிவர், கோவிலின் உள்பிரகாரத்தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவருக்கு 'ரிணவிமோசன லிங்கேஸ்வரர்' என்று பெயர். இதற்கு 'கடன் நிவர்த்தி செய்யும் ஈசன்) என பொருள். பணக்கடன் மட்டுமல்ல, பிறவிக்கடனில் இருந்தே விமோசனம் தருபவராக அருள்கிறார். ஆரோக்கியம், அழகு, அறிவு, கல்விச்செல்வம் என எல்லாம் இருந்தும் வறுமையில் சிக்கினால் வாழ்வு சுகமாக அமையாது. அந்த வறுமையை போக்கி நல்வாழ்வு அளிக்கும் ரிண விமோசன லிங்கேஸ்வரரருக்கு திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தீரும். செல்வவளம் பெருகும்.மூன்று துர்க்கை: பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், ரிஷபாரூடர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனீஸ்வரர், ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ரிண விமோசன லிங்கேஸ்வரர், பாலசுப்பிரமணியர் ஆகியோரும் மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர். சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று துர்க்கை சன்னிதிகள் இங்கிருப்பது குறிப்பிடத்தக்கது. குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இத்தலத்தில், அபூர்வமான மாவிலங்கை மரம் தல விருட்சமாக உள்ளது. ஆண்டின் நான்கு மாதத்தில் மரம் முழுவதும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதம் வெள்ளைநிறப் பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமில்லாமலும் இது காணப்படும். பாடல் பெற்ற பைரவர் இங்குள்ள பைரவர் மீது திருநாவுக்கரசர் தேவார பாடல் பாடியுள்ளார்.“விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கைதரித்ததோர் கோலே காலபயிரவனாகி வேழம்உரித்துமை யஞ்சக்கண்டுவொண்டிரு மணிவாய் விள்ளச்சிரித்தருள் செய்தார் சேறைச்செந்நெறிச் செல்வனாரே”என்பது அந்தப் பாடல். இந்த பைரவரின் இடது மேற்கையில் சூலம் போட்ட மணி இருப்பது மாறுபட்ட அமைப்பு. இவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் வடைமாலை சாத்தி அர்ச்சனை செய்தால் கிரக தோஷம் நீங்கும்.இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,நேரம் : காலை 7.30 - 1:00, மாலை 4:00 - இரவு 9:00 மணிதொலைபேசி: 0435 - 246 8001