மாங்கல்ய வரம் தரும் மகாலட்சுமி
வரலட்சுமி விரதம் தீர்க்க சுமங்கலி பாக்கியம் தருவதாகும். அன்று அனைத்து செல்வத்தையும் வளர்க்கும் கடவுளான மகாலட்சுமி கோவிலுக்கு செல்வது சிறப்பு. தமிழகத்தில் மகாலட்சுமிக்கு என அமைந்த கோவில்களில் விழுப்புரம் மகாலட்சுமி குபேரன் கோவில் சிறப்பானது. தல வரலாறு: செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு விழுப்புரத்திலுள்ள திருநகர் பகுதி மக்கள் கோவில் அமைக்க விரும்பினர். 'திரு' என்றால் 'செல்வம்'. அந்த செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு பக்தர்கள் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். தலசிறப்பு: இத்தல மகாலட்சுமி முன்னிரு திருக்கரங்களில் அபய வரத முத்திரையுடனும், பின்னிரு திருக்கரங்களில் தாமரை மொட்டும் ஏந்தி, பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். பங்குனி உத்திரத்தன்று தாயாருக்கும், சீனிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடத்தப்படும். திருக்கல்யாணத்தின் மறுநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெறுகிறது. இதனால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கிறது என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரதத்தன்று சுமங்கலிகளும், கன்னிப்பெண்களும் இங்கு வந்து நோன்பு கயிறு கட்டுகின்றனர். தெற்கு பார்த்த குபேரன்: பொதுவாக குபேரன் அவருக்குரிய வடக்கு திசையை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் தனது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய கோலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. கோவில் அமைப்பு: இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் தும்பிக்கையாழ்வார், அஷ்டலட்சுமி, கருடாழ்வார், சீனிவாசப்பெருமாள், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பள்ளியறையில் உற்சவ மகாலட்சுமி ஊஞ்சலில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். குபேரன் சன்னிதி எதிரிலுள்ள நுழைவு வாசலின் மேல் கோபுரத்தில் குபேர லட்சுமியும் அவர்களது வாகனமாக குதிரையும், முதலையும் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணிக்கு மகாலட்சுமி மீது சூரிய நாராயணனின் ஒளிக்கதிர்கள் படர்வது சிறப்பு.திருவிழா: ஒவ்வொரு பவுர்ணமியன்றும் மகாலட்சுமி ஹோமம், ஆடிப்பூரம், கோகுலாஷ்டமி, நவராத்திரி, தீபாவளியன்று குபேர பூஜை, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் விசேஷ பூஜை ஆகியவை நடக்கிறது. அத்துடன் மாதம் தோறும், குபேரனுக்குரிய பூசம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இருப்பிடம்: விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் 3 கி.மீ. தூரத்தில் கோவில்.நேரம்: காலை 6.30 - 10.30, மாலை 5.30 - 8.30 மணி.அலைபேசி: 98843 27379, 97517 99423.