கல்யாண பெருமாள் கருணை செய்வாரு...
பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகலையா வருத்தப்படாதீங்க பெற்றோர்களே! உங்களுக்கான கோயில் தான் இது. வாங்க தரிசிப்போம். மறுமுறை இந்த கோயிலுக்கு உங்கள் பிள்ளைகள் தம்பதி சமேதராகத்தான் வருவார்கள்.ஓசூர் நந்தவனம் கோகுல் நகரில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் கோயில் தான் அது. திருப்பதி கோயில் மூலஸ்தான விமானம் போல கட்டப்பட்டிருப்பது இக்கோயிலின் சிறப்பு அம்சம். சுவாமியின் திருநாமம் கல்யாண வெங்கடேசப்பெருமாள். பெயருக்கு ஏற்ப கருவறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார். அவரை தரிசித்தாலே ஒரு ஆத்ம திருப்தி வரும். அருகருகே விநாயகர், ராதாகிருஷ்ணர் சன்னதிகள் ஒரே வளாகத்தில் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. கம்பீரமாக காட்சி தரும் கொடிக்கம்பம் அருகே உள்ள கருடாழ்வார் சன்னதி முன் ஒரு நிமிடம் நின்றாலே தைரியம் தானாக வரும். இங்கு ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினத்தன்றும் கல்யாணமாகாதவர்களுக்காக பிரத்யேக சிறப்பு வழிபாடு நடக்கிறது. பவுர்ணமி நாளில் நடக்கும் சத்திய நாராயண பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு வரன் வீடு தேடி வரும். இக்கோயிலில் வியாழன் தோறும் நேத்திர தரிசனம் சிறப்பு. வேதம் ஓதும் அந்தணர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன என்றும் கால மாற்றத்தால் அவர்கள் வேறு இடத்திற்கு சென்றார்கள் என்கிறது விஜய நகர ஆட்சிக்குறிப்பு. அவர்களது எண்ண அலைகளே இங்கு நடைபெறும் நற்செயலுக்கு காரணம் என்கின்றனர். அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெயரில் சிவபெருமான் கோயில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 21 திங்கள் அன்று வில்வ மாலை சாற்றி வழிபடுபவர்களுக்கு எல்லா பிரச்னைகளும் தீர்கிறது. ஒருவருடைய நாக தோஷம் தீர இரண்டு கோயில்களுக்கு நடுவே நாகராஜாவை பிரதிஷ்டை செய்துள்ளனர். நாகநாதரை தரிசித்தாலே போதும் நல்லது நடக்கும்.எப்படி செல்வது: ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 7 கி.மீ., விசேஷ நாள்: திருவோண நட்சத்திரம், புரட்டாசி சனிக்கிழமை பவுர்ணமி, ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்திதொடர்புக்கு: 99003 93266, 80720 66842நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிஅருகிலுள்ள தலம்: திரிபங்கி நாதர் பெருமாள் கோயில் 3 கி.மீ., நேரம்: காலை 7:00 - 12:00மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99407 93469