உள்ளூர் செய்திகள்

பொன்னும் கிடைக்குது புதன் வேண்டுதலும் பலிக்குது

பொதுவாக கிருஷ்ணருக்கு உகந்த தினம் சனிக்கிழமை என்பார்கள். சென்னை நங்கநல்லூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் கிருஷ்ணருக்கு புதன்கிழமைகளில் வெண்ணெய் சாத்துவதாக வேண்டிக் கொண்டால் நினைத்தது விரைவில் நிறைவேறும். மகளின் திருமணத்துக்காக பொன், பொருள் வேண்டுவோர் இவரை வேண்டி வரலாம்.தல வரலாறு: நூறு ஆண்டுகளுக்கு முன் மக்கள் எண்ணிக்கை மிகக்குறைவான சிறிய கிராமமாக நங்கநல்லூர் இருந்தது. அங்கிருந்த பக்தர்கள் சிலர் ஒரு பஜனை மடம் கட்டி பெருமாளை வழிபட்டனர். பாமா, ருக்மணியுடன் கூடிய கிருஷ்ணரின் ஓவியத்தை அங்கு வைத்து வணங்கி வந்தனர். காலப் போக்கில் பஜனை மடம் கோவிலாக மாற்றப்பட்டது. கருவறையில் லட்சுமி நாராயணப் பெருமாள் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பஜனை மடத்தில் வழிபாடு செய்யப்பட்ட கிருஷ்ணர் படத்தையும் அங்கேயே வைத்து பாதுகாத்து வருகின்றனர். கேட்ட வரம் தருபவர்: மூலவர் லட்சுமி நாராயணப்பெருமாள் பாமா, ருக்மணி தாயார்களுடன் கருவறையில் சேவை சாதிக்கிறார். பக்தர்கள் கேட்ட வரம் தருபவராக விளங்கும் இவருக்கு அருகிலேயே உற்ஸவ மூர்த்தியும் வீற்றிருக்கிறார் பிரகாரத்தில் 12 ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகியோருக்கு சுதை சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கு பால் பாயாச நைவேத்யம் படைத்து வழிபடுகின்றனர். வெண்ணெய் சாத்துபடி: கிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர். மகளின் திருமணம் பொன், பொருளால் தடைபட்டால் புதன்கிழமைகளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் சாத்துவதாக வேண்டிக் கொண்டால் போதும். பொன், பொருள் கிடைப்பதற்குரிய பாதை பிறக்கும் என்பது நம்பிக்கை. மார்கழியில் இங்கு தனுர் மாத பஜனை நடக்கும். சித்திரை மாதத்தில் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்துகின்றனர். இருப்பிடம்: நங்கநல்லூர் கல்லூரி சாலைநேரம்: காலை 6.30 - பகல் 10.30, மாலை 5.45 - இரவு 8.30 மணி. அலைபேசி: 94444 16532, 98409 22926