குழந்தை வரம் தரும் நாகநாதர்
குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்துபவர்கள், நாகப்பட்டினம் நாகநாதரை பிரதோஷத்தன்று தரிசித்து வரலாம்.தல வரலாறு: பாதாளத்தை ஆண்ட நாகவேந்தன் ஆதிசேஷன், குழந்தை வரம் வேண்டி நாகப்பட்டினம் நாகநாதரை வழிபாடு செய்தான். இதன் பலனாக அவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை மூன்று தனங்களுடன் இருந்தது கண்டு வருந்தினான். அப்போது அசரீரி தோன்றி, ''இக்குழந்தைக்கு தக்க வயது வந்தபோது இது எந்த ஆடவனை பார்க்கிறதோ அப்போது ஒரு தனம் மறையும். அவனே இவளுக்கு கணவனாவான்,'' என்று கூறியது. அதன்படி ஒருநாள் தேவதீர்த்தக் கரையில் அரசகுமாரன் சாடீசுகன் என்பவனைக் கண்டதும் தனம் மறைந்தது. நாககன்னிகை, இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்து சாடீசுகனை மணந்தாள். கும்பகோணம், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களை ஒரேநாளில் பக்தர்கள் வழிபடும் வழக்கம் இருக்கிறது.ராமநாதர் வரலாறு: நாகநாத சுவாமி கோயில் வலப்புறத்தில் ராமநாத சுவாமி சந்நிதி உள்ளது. இவர் ராமபிரானால் வழிபாடு செய்யப்பட்டவர். அயோத்தியிலிருந்து ராமன் திருமுடி துறந்து மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன் காட்டுக்குச் சென்றார். காட்டில் வாழ்ந்து வரும் போது சீதையை ராவணன் கவர்ந்து சென்றான். மனைவியைத்தேடி, கிஷ்கிந்தை என்ற நகருக்கு வந்த ராமன், அங்கு சுக்ரீவனின் நட்பைப் பெற்றார். வானரப்படையின் உதவியால் இலங்கையில் சீதை இருப்பதை அறிந்தார். கடலில் பாலம் அமைக்க எண்ணி, கடற்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் நாகைக்காரோணத்தில் காவிரி சங்கமத்தில் நீராடி, சிவனை நாகநாதரை வணங்கினார். அப்பெருமானுக்கு தென்புறம் ஒரு லிங்கம் நிறுவி பூஜித்தார். அப்போது சிவபெருமான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். சிவனைக் கண்ட ராமன் அவரை வலம்வந்து போற்றி வணங்கினார்.தனது மனத்துயரை போக்குமாறு கேட்டுக் கொண்டார். ராமர் வழிபட்ட சிவனே'ராமலிங்கம்' எனப்படுகிறார். கிரகணம், அர்த்தோதய, மகோதய புண்ணிய காலங்களில் இங்குள்ள கடலில் மூழ்கி ராமலிங்கத்தை வழிபடுவதை புனிதமாக கருதுகின்றனர். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர இவரது சந்நிதியில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.கார்த்திகை தலம்: மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு சென்னை தி.நகர் ராகவன் உபயமாக அளித்த பஞ்சலோக கவசம் பிரதோஷத்தன்று சாத்தப்படும். அம்பாள் அகிலாண்டேஸ்வரி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருள்பவளாகத் திகழ்கிறாள். ராம நாதர், பர்வதவர்த்தினி சந்நிதிகளும் உள்ளன. ராமநாதர் சந்நிதியில் ராமரின் பாதம் உள்ளது. இந்தக் கோயிலின் பெயரால் தான், ஊருக்கு 'நாகப்பட்டினம்' என்று பெயர் சூட்டப்பட்டது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை இங்கு வழிபட்டால் வாழ்வில் சந்தோஷம் பெருகும்.இங்கு விநாயகர், பஞ்சலிங்கம், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், சனி பகவான் சந்நிதிகளும் உள்ளன. தட்சிணாமூர்த்தி தனி கோயிலில் அருள்பாலிக்கிறார். தலவிநாயகர் வலஞ்சுழி விநாயகர். இக்கோயிலில் நாகருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது. இருப்பிடம் : நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தூரம். அருகில் நீலாயதாட்சி கோயில் உள்ளது.திறக்கும் நேரம் : காலை 7 - மதியம் 12, மாலை 5 - இரவு 8.போன் : 04365 241 091.